விஜய்யின் ‘புலி’ சுவாரஸ்ய தகவல்கள்!

விஜய்யின் ‘புலி’ சுவாரஸ்ய தகவல்கள்!

கட்டுரை 30-Sep-2015 10:42 AM IST VRC கருத்துக்கள்

ரசிகர்களின் எக்கச்சக்க எதிர்பார்ப்பில் இருந்து வரும் விஜய்யின் ‘புலி’ திரைப்படம் நாளை (அக்டோபர்-1) உலகம் முழுக்க 3000 தியேட்டர்களுக்கும் மேல் வெளியாகவிருக்கிறது. சிம்பு தேவன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்யுடன் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், பிரபு, விஜயகுமார் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருக்கிறார். ‘நட்டி’ நட்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘எஸ்.கே.டி.ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீன்ஸ் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ள ‘புலி’ படம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ:

இயக்குனர் சிம்பு தேவன் இந்த கதையை எழுதும்போதே, இதில் நாயகனாக விஜய்யை மனதில் வைத்து எழுதியிருக்கிறார். இந்த கதையை விஜய் கேட்டதும், ‘‘கதை சூப்பராக இருக்கிறது, இந்த கதையில் நான் கண்டிப்பாக நடிக்கிறேன்’’ என்று விஜய் கூறியதோடு, ‘‘இந்த கதை அனைவருக்கும் பிடிக்கும் விதமாக அமைந்துள்ளது. அதனால் இந்த கதையை அப்படியே எடுத்து விடலாம், கதையில் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டாம்’’ என்று கூறி சிம்பு தேவனுக்கு மேலும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார் விஜய். ஃபேண்டசி த்ரில்லர் கதையாக உருவாகியிருக்கும் இப்படத்தில் விஜய் மண்ணுக்காக போராடும் இளைஞனாக நடித்துள்ளாராம்.

இந்த படத்திற்கு மிகப் பெரிய செட் அமைப்பதற்காக சென்னை, ஹைதராபாத் என பல இடங்களை தேடியும் சரியான இடம் கிடைக்காததால் தான் கடைசியாக சென்னையிலுள்ள ஆதித்யா ராம் ஸ்டூடியோ வை ‘புலி’க்காக தேர்வு செய்துள்ளனர். இந்த ஸ்டுடியோவில் அமைத்த மிக பிரம்மாண்டமான ‘செட்’களில் படமாக்கப்பட் ‘புலி’யின் காட்சிகள் தமிழ் சினிமாவுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்கிறார்கள்.

இப்படத்தில் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கும் முத்துராஜ், படத்தின் தயாரிப்பு வடிவமைப்பிலும் பங்குகொண்டு சிறப்பாக பணியாற்றியுள்ளார். படத்தின் துவக்கத்தில் இருந்து, இறுதி வரையிலும் இந்த படம் எப்படி வரவேண்டும் என்பதில் துவங்கி உடைகள், அரங்குகள் என அனைத்திலும் முத்துராஜின் கைவண்ணம் இருந்துள்ளது. இந்த படம் அவரது சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும் என்கிறார்கள்.

ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு ‘ இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் நடித்த ஸ்ரீதேவி அந்த படத்தை தொடர்ந்து நடிக்க நிறைய கதைகளை கேட்டிருக்கிறார். ஆனால் அவருக்கு எந்த கதையும் பிடிக்கவில்லை என்பதால் நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தார். அந்த சமயத்தில் தான் சிம்புதேவன் அவரை சந்தித்து ‘புலி’ கதையை சொல்லியிருக்கிறார். ‘புலி’ கதையை கேட்டதும் உடனே இதில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் ஸ்ரீதேவி! அத்துடன் ‘புலி’க்காக தமிழ், ஹிந்தி, தெலுங்கு என 3 மொழிகளிலும் ஸ்ரீதேவியே ‘டப்பிங்’கும் பேசியிருக்கிறார். இந்த படத்தில் ஸ்ரீதேவியின் பங்களிப்பு மிகப் பெரியது என்கிறார்கள்.

‘புலி’யில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் இருவர் நடித்திருந்தாலும் கதையில் அதிக முக்கியத்துவம் ஸ்ருதிஹாசனுக்கு தானாம். காட்டுக்குள் படப்பிடிப்பு நடந்த போது ஸ்ருதி ஹாசனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனாலும் தன்னால் படப்பிடிப்பு நின்றுவிடக் கூடாது என்று தன் உடல்நிலை பற்றி கவலைப்படாமல் மலை மீது ஏறியெல்லம் நடித்து கொடுத்து படக்குழுவினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இப்படத்தில் ஒரு இளவரசியின் பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஹன்சிகா மோத்வானி. படப்பிடிப்பு 9 மணிக்கு என்றால், இளவரசிக்கான மேக்கப் போட மட்டும் 3 மணி நேரம் ஆகுமாம். இதனால் காலை 6 மணிக்கே படப்பிடிப்பு தளத்திற்கு வந்து மேக்-அப் போட ஆரம்பிப்பாராம் ஹன்சிகா.

விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி முதலானோருடன் இப்படத்தில் தம்பி ராமையா, சத்யன், ‘ரோபோ’ சங்கர், வித்யு லேகா, இமான் அண்ணாச்சி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இவர்கள் சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகள் சிரிப்புக்கு உத்திரவாதம் என்கிறார்கள்.

சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ‘பாகுபலி’ படத்துடன் ‘புலி’ படத்தை யாரும் ஒப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் இயக்குனர் சிம்பு தேவன். ஏனென்றால் இப்படத்தில் போர் காட்சிகள் எல்லாம் கிடையாது என்றும் இது சரித்திர கதை இல்லை என்றும் கூறியிருப்பதோடு ‘புலி’யின் கதைக்களம் வேறு என்றும் சொல்லியிருக்கிறார் சிம்பு தேவன்.

இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது தன்னுடைய அடுத்த நாள் காட்சிக்கான வசனங்களை முந்தைய நாளே விஜய் வாங்கி சென்று விடுவாராம்! காரணம் நிறைய நடிகர்களுடன் நடிப்பதால், தன்னால் எதுவும் தாமதமாகி விடக்கூடாது என்பது தானாம். இப்படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக பிரத்தியேகமாக வாள் பயிற்சியை கற்று அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள்ளார் விஜய். சண்டை காட்சிகளில் ஏராளமான வெளிநாட்டு கலைஞர்களும் பங்கு பெற்றிருக்கிறார்கள்.

சமீபகாலமாக வில்லன் வேடங்கள் எதுவும் ஏற்று நடிக்காமல் இருந்து வந்த சுதீப் ‘புலி’யின் கதையை கேட்டதும் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், இப்படத்தில் சுதீப் உலோகத்தால் உருவாக்கப்பட்ட உடையை அணிந்து நடித்திருக்கிறார். அந்த உடை அணிந்தால் அவரால் படப்பிடிப்பில் உட்கார கூட முடியாதாம். காலையில் படப்பிடிப்பு தொடங்கினால், படப்பிடிப்பு முடியும் வரை அந்த உலோக உடை அணிந்து நடிக்க அவர் ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார்.

கலை இயக்குநர் முத்துராஜ் மற்றும் கிராஃபிக்ஸ் தொழில்நுட்ப கலைஞர் கமலக்கண்ணன் இருவரும் இணைந்து இப்படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளில் பணியாற்றி இருக்கிறார்கள். ராஜமௌலி இயக்கிய ‘மகதீரா’, ‘நான் ஈ’, ‘பாகுபலி’ ஆகிய படங்களில் கிராஃபிக்ஸ் காட்சிகளுக்காக பணிபுரிந்த கமல்கண்ணன் குழுவினரே இப்படத்தின் கிரஃபிக்ஸ் பணிகளையும் மேற்கொண்டுள்ளார்கள். உலகின் மிகச் சிறந்த 6 ஸ்டுடியோக்களில் இப்படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகள் நடைபெற்றுள்ளது.

இப்படத்தில் சித்தரக்குள்ளனாக விஜய் நடித்திருக்கிறாரா போன்ற பல கேள்விகளுக்கு இயக்குனர் சிம்பு தேவன் பதில் அளிக்கையில் இதுபோன்ற பல சர்ப்ரைஸ்கள் படத்தில் உங்களை காத்திருக்கிறது, அதை நீங்கள் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.

விஜய் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பொருட் செலவில் உருவாகியுள்ள படம் ‘புலி’ என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உலகம் முழுக்க இப்படம் 3000 திரையரங்குகளுக்கும் மேல் வெளியாக இருக்கிறது. இது தவிர ஜப்பான் மற்றும் சீனாவிலும் இப்படத்தை வெளியிட தீர்மானித்துள்ளார்கள்.

இப்படி பல சிறப்புகளை கொண்ட ‘புலி’ நாளை (அக்டோபர்-1) முதல் உலகம் முழுக்க பாயவிருக்கிறது. விஜய்யின் ‘புலி’ ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து பெரும் பாய்ச்சல் பாயும் என்றே நம்புவோம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;