குற்றம் கடிதல் – விமர்சனம்

அவசியமான படைப்பு!

விமர்சனம் 24-Sep-2015 3:32 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Bramma.G
Production : JSK Film Corporation
Starring : Radhika Prasitha, Sai Rajkumar, Master Ajay, Pavel Navageethan
Music : Shankar Rangarajan
Cinematography : Manikandan
Editing : C.S. Prem

சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது உட்பட சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு விருதுகளை குவித்துள்ள இப்படம் என்ன சொல்ல வருகிறது?

கதைக்களம்

புதுமண தம்பதியர் சாய் ராஜ்குமார், ராதிகா பிரசித்தா! சாய் ராஜ்குமார் ஒரு என்ஜினீயரிங் கம்பெனியில் வேலை செய்கிறார். ராதிகா பிரசித்தா ஒரு ஸ்கூலில் டீச்சராக பணிபுரிகிறார். திருமணம் முடிந்த கையோடு ஸ்கூலுக்கு வரும் ராதிகா பிரசித்தா, 5-ஆம் வகுப்பில் படிக்கும் ஏழை மாணவன் அஜய், சக மாணவியின் ‘ஹேப்பி பர்த்டே’வுக்காக அவளுக்கு முத்தம் கொடுத்து விட்டான் என்பதற்காக அந்த சிறுவனை அடித்து விடுகிறார். அடி வாங்கிய அஜய் மயக்கம் போட்டு கீழே விழுந்துவிட, அவன் உயிர் பிழைப்பானா என்ற சூழ்நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். இந்த விஷயம் பூதாகாரமாகி விடும் என்பதோடு, நல்ல ஆசிரியையான ராதிகா பிரசித்தாவுக்கும் பிரச்சனை ஏற்படும் என்று நினைக்கும் பள்ளி முதல்வர் குலோத்துங்கன், ராதிகா பிரசித்தாவை பிரச்சனை முடியும் வரையில் தலைமறைவாக இருக்கச் சொல்லி ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். தன் கணவருடன் ஊருக்கு பயணமாகும் ராதிகா பிரசித்தாவுக்கு ஏற்படும் குற்ற உணர்ச்சி, மனநிலை போராட்டங்கள், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவன் அஜய் உயிர் பிழைப்பானா இல்லையா என்ற பதற்றமான சூழநிலை, இப்பிரச்சனையில் மூக்கை நுழைக்கும் ‘மீடியா’க்களின் நிலைபாடு இப்படி சீரியஸாக பயணிக்கும் கதையே ‘குற்றம் கடிதல்’.

படம் பற்றிய அலசல்

பாலியல் கல்வியின் அவசியம், அடங்க மறுக்கும் சிறுவர்களை எப்படி ஆசிரியர்கள் கையாள வேண்டும் என்று தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத ஒரு விஷயத்தை திரைக்கதையாக்கி, யதார்த்தமான காட்சி அமைப்புக்களுடன் இப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் பிரம்மா.ஜி. தனது திரைக்கதையில் எந்த ஒரு கமர்ஷியல் விஷயத்துக்கும், காம்பிரமைஸுக்கும் இடம் தராமல் கதைக்கு தேவையான யதார்த்த முகங்களை தேடிப் பிடித்து தான் நினைத்ததை படமாக்கியிருக்கிறார் பிரம்மா.ஜி. அதற்காகவே அவருக்கு ஒரு சல்யூட்!

படத்தின் முதல் 20 நிமிடம் கொஞ்சம் ஸ்லோவாக பயணித்தாலும் பிறகு சூடுபிடிக்கும் திரைக்கதை, கடைசி வரையிலும் சீரியஸாகவே பயணிக்கிறது. ஷங்கர் ரங்கராஜனின் இனிய இசை, கதைக்கு தேவையான கருத்துமிக்க (பாரதியார்) பாடல்கள், மணிகண்டனின் நேர்த்தியான ஒளிப்பதிவு என ஒரு யதார்த்த சினிமாவுக்கு என்ன தேவையோ அத்தனை விஷயங்களும் இப்படத்தில் ஒன்று கூடி சிறப்பித்துள்ளன. படத்தின் இறுதியில் மாக்சிம் கார்க்கி எழுதிய ‘தாய்’ நாவலை ராதிகா பிரசித்தாவுக்கு பரிசு பொருளாய் வழங்கும் காட்சியில் தன்னை அடையாளம் காட்டியுள்ளார் இயக்குனர் பிரம்மா.

நடிகர்களின் பங்களிப்பு

ஸ்கூல் டீச்சராக வரும் ராதிகா பிரசித்தா, குற்ற உணர்ச்சி, தவிப்பு, என்ன நடந்தாலும் சரி, அந்த பையனின் அம்மாவை பார்த்து விடவேண்டும் என்று பாதி வழியிலேயே திரும்பி வந்து அந்த பையனின் தயார் காலடியில் விழுந்து கதறுகிற காட்சி என படம் முழுக்க உணர்ச்சிகளை கொட்டி அழகான நடிப்பை வழங்கியுள்ளார். அஜய்யின் ‘ஆக்ரோஷ’ தாய் மாமனாக வரும் பாவல் நவகீதன், படி படியாக நிலைமையை புரிந்ததும் ‘கூல்’ மாமாவாக மாறும் கட்டம் யதார்த்தம்! ராதிகாவின் கணவராக வரும் சாய் ராஜ்குமார், குறும்புக்கார பையனாக வரும் அஜய், அவனது தயாக வரும் சத்யா, பள்ளி முதல்வராக வரும் குலோத்துங்கன் என படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேரும் அந்தந்த பாத்திரங்களாக நம் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.

பலம்

1.திரைக்கதையும் அதை படமாக்கிய விதமும்
2.நடிகர்களின் தேர்வும், அவர்களது யதார்த்த பங்களிப்பும்
3.கதையை மீறாத ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் போன்ற விஷயங்கள்

பலவீனம்

கொஞ்சம் ஸ்லோவாக பயணிக்கும் முதல் 20 நிமிட காட்சிகளை தவிர்த்து பார்த்தால், இப்படத்தில் குறிப்பிடும் படியான எந்த குறைகளும் இல்லை.

மொத்தத்தில்...

பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர் என அனைவரும் பார்க்க வேண்டிய படம் ‘குற்றம் கடிதல்’. ‘காக்கா முட்டை’ பட வரிசையில் இப்படமும் வணிகரீதியாக வெற்றிபெறுமேயானால் தமிழ் சினிமாவில் இதுபோன்ற முயற்சிகள் தொடர்ந்து நடைபெற வழிவகுக்கும்.

ஒரு வரி பஞ்ச் : அவசியமான படைப்பு!

(கமர்ஷியலாக இப்படத்தை ரேட்டிங் செய்ய விரும்பாததால் ரேட்டிங்கை தவிர்த்துள்ளோம்)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

;