கிருமி - விமர்சனம்

வீரியம் குறைவு!

விமர்சனம் 24-Sep-2015 2:45 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Anucharan
Produced by : K Jayaram, L Prithiviraj, M Jayaraman, S Rajendran
Starring : Reshmi Menon, Kathir, Charle, Vanitha Thennavan
Music : Krishna Kumar
Cinematography : Arul Vincent
Editing : Anucharan

இரண்டு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடுவதற்கு தேர்வாகியிருப்பதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது ‘கிருமி’. படம் எப்படி?

கதைக்களம்

வேலைவெட்டியில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் கதிரை, போலீஸ்காரர்களுக்கு இன்ஃபார்மராக இருக்கும் சார்லி ஸ்டேஷனில் எடுபிடி வேலைக்கு சேர்த்துவிடுகிறார். கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு நெருக்கமாகும் கதிர் இன்ஃபார்மராகவும் ஆகிறார். ஒரு சமயம், தன் ஏரியாவிலிருக்கும் பார் ஒன்றில் திருட்டுத்தனமாக நடைபெறும் சூதாட்டத்தைப் பற்றி போலீஸுக்கு போட்டுக் கொடுக்க, அதிரடி ரெய்டு ஒன்று நடைபெறுகிறது. அந்த ரெய்டுக்குப் பிறகு, சார்லிதான் போட்டுக் கொடுத்தது என தவறாக நினைக்கும் ரௌடி கும்பல் அவரை தீர்த்துக் கட்டுகிறது. இதனால் செய்வதறியாது திகைத்து நிற்கிறார் கதிர். இதன் பிறகு நடக்கும் சம்பவங்களை ‘கிருமி’யாக்கியிருக்கிறார்கள்.

படம் பற்றிய அலசல்

நோ பார்க்கிங் ஏரியாவில் இருக்கும் வண்டியை சீஸ் செய்ய, இரவு நேரத்தில் குடித்துவிட்டு வரும் வாகன ஓட்டிகளை மடக்க, பிளாட்பார்ம் கடைகளில் மாமூல் வசூல் செய்ய என போலீஸுக்கு உதவும் எடுபிடி இளைஞன் ஒருவனுக்கும், போலீஸுக்கும் இடையே நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து வித்தியாசமாக கதையை உருவாக்கியிருக்கிறார்கள் படத்தின் இயக்குனர் அனுசரணும், ‘காக்கா முட்டை’ மணிகண்டனும்.. வித்தியாசமாக கதையைப் பிடித்து, அதற்கு யதார்த்தமான காட்சிகளையும் உருவாக்கிய இயக்குனர், திரைக்கதை உருவாக்குவதில் கொஞ்சம் திணறியிருக்கிறார். குறிப்பாக யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக வைக்கப்பட்ட க்ளைமேக்ஸ் உப்புச்சப்பில்லாமல் போயிருக்கிறது. அதோடு ஆங்காங்கே சில லாஜிக் கேள்விகளும் தொக்கி நிற்கின்றன.

‘கிருமி’யின் மிகப்பெரிய பலமாக இருப்பது அப்படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள். ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் என எல்லாத்துறைகளுமே இணைந்து பட்ஜெட்டிற்கு ஏற்ற சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கின்றன. பாடல்கள் கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தாலும், கதை ஓட்டதிற்கு சற்று தடைதான்.

நடிகர்களின் பங்களிப்பு

‘மதயானைக்கூட்டம்’ படத்திலேயே யதார்த்தமான நடிப்பை வழங்கிய கதிர், இப்படத்திலும் அதை தக்க வைத்திருக்கிறார். ஹீரோயிஸம் எதுவும் செய்யாமல், கேரக்டருக்குத் தகுந்த நடிப்பை வழங்கி பாராட்டு வாங்குகிறார். கதையை நகர்த்துவதற்கு எந்தவிதத்திலும் பயன்படாத கேரக்டரில் ரேஷ்மிமேனன் நடித்திருந்தாலும், கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். மேக்அப் இல்லாமலும் வசீகரிக்கிறது ரேஷ்மியின் அழகு! கொஞ்ச நேரமே வந்தாலும் ரசிகர்களிடம் பரிதாபத்தை ஏற்படுத்திப் போகிறார் சார்லி. போலீஸாக நடித்திருப்பவர்கள், ரௌடியாக நடித்திருப்பவர்கள் என அனைவரும் அந்தந்த கேரக்டரில் நிஜமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

பலம்

1. வித்தியாசமான கதையும், யதார்த்தமான காட்சி அமைப்புகளும்
2. ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் உள்ளிட்ட டெக்னிக்கல் விஷயங்கள்.

பலவீனம்

1. திரைக்கதை
2. க்ளைமேக்ஸ்

மொத்தத்தில்...

குறைந்த பட்ஜெட்டில், யதார்த்தமான ஒரு படத்தை கொடுக்க முயன்றதற்காக இயக்குனரை பாராட்டலாம். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டி, ரசிகர்களை பதைபதைக்க வைத்திருந்தால் ‘கிருமி’ பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

ஒரு வரி பஞ்ச்: கிருமி - வீரியம் குறைவு!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிகை - டிரைலர்


;