49-ஓ – விமர்சனம்

முத்திரை குத்தலாம்!

விமர்சனம் 18-Sep-2015 4:28 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : P. Arogyadaas
Production : Zero Rules Entertainment
Starring : Goundamani, Jayabalan, Thirumurugan, Balasing, vaidhehi, ‘Naan kadavul’ Rajendran
Music : K
Cinematography : Aadhi Karuppayya
Editing : Paramesh Krishna

ஒரு இடைவெளிக்குப் பிறகு கவுண்டமணி நடித்திருக்கும் படம், அவர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் என்ற எதிர்பார்ப்புகளுடன் வந்திருக்கும் இப்படத்தில் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளாரா கவுண்டமணி?

கதைக்களம்

விவசாயத்தை நம்பியிருக்கும் ஒரு ஊரையும், அந்த ஊர் மக்களையும் காப்பாற்றும் ஒரு உண்மையான விவசாயி(கவுண்டமணி)யின் கதை! லோக்கல் அரசியல் வாதியின் வாரிசும், அவரது ரியல் எஸ்டேட் நண்பர்களும் சேர்ந்து ஏழை விவசாயிகளுக்கு எப்போதுமே இருக்கும் கடன் பிரச்சனை, கரண்ட் பிரச்சனை, தண்ணீர் பிரச்சனை ஆகியவற்றை காரணம் காட்டி அவர்களது நிலத்தை அதிக விலை தருவதாக கூறி, ஒரு சிறிய தொகை முன் பணமாக கொடுத்து, மீதி பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி விடுகிறார்கள். நிலத்துக்கான பணத்தை நம்பி மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்த ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார். இதை பார்த்து பொங்கி எழும் கவுண்டமனி எடுக்கும் அதிரடி அவதாரமும், ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு உடந்தையாக இருக்கும் அரசியல் வாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளும் போராட்டங்களுமே ‘49-ஓ’ படம்!

படம் பற்றிய அலசல்

விளைநிலங்களை அழித்து ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களிடமிருந்து அவற்றை காப்பாற்றுவதன் அவசியத்தையும், தேர்தலில் ‘49-ஓ’விற்கு வாக்களிப்பதால் என்ன பயன், அதன் பயன் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் அறிவுரைகளை கூறும் விதமாக ஒரு திரைக்கதையை அமைத்து இப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் ஆரோக்கிய தாஸ். அதை கவுண்டமணியின் நக்கல், நய்யாண்டி மற்றும் சீரியஸான வசனங்களுடன் இரண்டு மணிநேர படமாக தந்துள்ளார்! ஆனால் கவுண்டமணி என்றதும் காமெடியை எதிர்பார்த்து தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு இப்படம் கொஞ்சம் ஏமாற்றத்தை தான் தரும்! காரணம் ஒரு சில காட்சிகளை தவிர கவுண்டமணி படம் முழுக்க ‘சீரியஸ் மணியாக’தான் வலம் வருகிறார்! ஆனால் அவர் பேசும் ஒவ்வொரு கருத்துக்களும் சிந்திக்க வைப்பவை, செயலாக்க வேண்டியவை! கவுண்டமணி தான் படத்தின் கதாநாயகன் என்பதற்காக அவரை பாடல்களில் நடனம் ஆட வைத்திருப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்! அழதபரசான காட்சி அமைப்புகளுடன் தான் படம் நகர்கிறது என்றாலும், இன்றைய சமூகத்துக்கு தேவையான மிக முக்கியமான கருத்துக்களை துணிச்சலுடன் சொல்லியமைக்காக இயக்குனருக்கு ஒரு சபாஷ் போடலாம்! ஆனால் இயக்குனரின் எண்ணங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஆதி கருப்பையாவின் ஒளிப்பதிவும், ‘கே’யின் பின்னணி இசையும் அமையவில்லை. எட்டிட்டர் பரமேஷ் கிருஷ்ணாவின் பணி சிறப்பு!

நடிகர்களின் பங்களிப்பு

ஒரு இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றி நடித்திருக்கும் கவுண்டமணி பார்ப்பதற்கு கொஞ்சம் சோர்ந்து போயுள்ளார் என்றாலும் அதே சுறுசுறுப்பு, நக்கல் நய்யாண்டியுடன் படம் முழுக்க வலம் வந்திருக்கிறார். ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு பாடம் புகட்டம், தனது நிலத்தை ‘ஆறடி தாய் மடி திட்டம்’ எனும் சுடுகாடு திட்டத்தை அறிவிப்பதும், தேர்தலில் ஒரு பிச்சைக்காரரை வேட்பாளராக நிற்க வைத்து எதிர் அணியினரை கலாய்ப்பதும் கவுண்டமணியின் அக்மார்க் காமெடிக்கு சில உதாரணங்கள்! அரசியல்வாதிகளாக வரும் ஜெயபாலன், பாலாசிங், விளம்பர பட இயக்குனராக வரும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், விளம்பர பட நடிகராக வரும் சாம்ஸ், கவுண்டமணியின் உறவுக்காரப் பெண்ணாக வரும் வைதேகி ஆகியோரும் அந்தந்த பாத்திரங்களின் தனமை உணர்ந்து நன்றாக நடித்துள்ளனர்.

பலம்

1. கவுண்டமணியின் பாத்திர படைப்பும், வசனங்களும்
2. சமூக அக்கறையோடு சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள்!

பலவீனம்

1. லாஜிக் பற்றி கவலைப்படாதது
2. காட்சிகளில் புதுமை இல்லாதது
3. ஒளிப்பதிவு, இசை

மொத்தத்தில்

மனிதனுக்கு பசி இருக்கும் வரை விவசாயம் அழியாது, விவசாய நிலங்கள் விவசாயத்திற்கு மட்டும்தான் பயன்பட வேண்டும் போன்ற கருத்துக்களை தாங்கி வந்திருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்.

ஒருவரி பஞ்ச் : முத்திரை குத்தலாம்!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

;