‘மாயா’வைப் பார்க்கத் தூண்டும் 5 காரணங்கள்!

‘மாயா’வைப் பார்க்கத் தூண்டும் 5 காரணங்கள்!

கட்டுரை 16-Sep-2015 12:24 PM IST Chandru கருத்துக்கள்

நாளை முதல் தமிழ், தெலுங்கு மொழிகளில் உலகமெங்கும் வெளியாகிறது ‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ நிறுவன தயாரிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கும் ‘மாயா’. பேய்ப் படங்களை வாங்கி வெளியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தையும் தமிழகத்தில் வெளியிடுகிறது. ஒரு புதிய டீமின் முயற்சியில் உருவாகியிருக்கும் ‘மாயா’ ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதற்கான 5 காரணங்களைப் பார்க்கலாம்...

1. நயன்தாரா

இன்றைய நிலவரப்படி கோலிவுட்டின் ‘மோஸ்ட் வான்டட் ஹீரோயின்’ நயன்தான். அதிலும் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘தனி ஒருவன்’ படத்திற்குப் பிறகு நயனின் மார்க்கெட் எகிறியுள்ளது. 50 படங்களை நெருங்கிக் கொண்டிருக்கும் நயன்தாராவின் கேரியரில் ‘மாயா’ ஒரு முக்கியமான படம். காரணம்... இப்படத்தின் மையக் கதாபாத்திரத்தை ஏற்றிருப்பதே நயன்தாராதான். அதோடு, ஹாரர் படங்களை மிகவும் விரும்பிப் பார்க்கும் நயன்தாரா நடிக்கும் முதல் பேய்ப்படமும் ‘மாயா’தான். தவிர, இப்படத்தில் ஒரு வயது குழந்தைக்கு அம்மாவாகவும் நடித்திருக்கிறார். உச்சத்தில் இருக்கும் ஹீரோயின் ஒருவர் அம்மாவாக நடிக்கிறார் என்றால், அப்படத்தின் கதை எந்தளவுக்கு அவரை வசீகரித்திருக்கும் என்பதை கவனிக்க வேண்டும். மற்ற படங்களைப்போல் ‘கிளாமர் குயினா’க வலம் வராமல், ‘மாயா’வின் கேரக்டருக்குத் தகுந்தபடி மேக்-அப், உடை விஷயங்களில் சிம்பிளாகவும், அதேநேரம் ‘பவர்ஃபுல்’ பெர்ஃபாமென்ஸையும் வழங்கியிருக்கிறாராம் நயன்தாரா.

2. அமானுஷ்ய திகில் படம் (Super Natural Horror)

பத்தோடு பதினொன்றாக வழக்கமாக வெளிவந்து கொண்டிருக்கும் பேய்ப்படங்களின் வரிசையில் ‘மாயா’வை சேர்க்க முடியாது. தேவையில்லாத காமெடி, சம்பந்தமில்லாத குத்துப்பாடல், கோரமான உருவங்கள் என எதையும் நீங்கள் இப்படத்தில் எதிர்பார்க்க வேண்டாம். ஆனால், படத்தின் பல காட்சிகள் உங்களை திகிலால் உறைய வைக்கும். அதோடு இப்படம் க்ளைமேக்ஸில் ஏற்படுத்தும் பாதிப்பு, தியேட்டரைவிட்டு வெளியே வந்தபிறகும் நிச்சயம் ஒருசில மணி நேரங்களுக்காவது நீடிக்கும் என படக்குழுவைச் சேர்ந்தவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இது ஒரு திகில் படமாக இருந்தாலும், மனதை நெகிழச் செய்யும் அம்மா - பிள்ளை பாசமும் இப்படத்தில் உள்ளதால் பெண்களையும் இப்படம் அதிகம் கவரும் என்று கூறப்படுகிறது.

3. டிரைலருக்குக் கிடைத்த அபரிமிதமான வரவேற்பு

தற்போதைய சினிமா சூழ்நிலையில், ஒரு படத்தின் டிரைலருக்குக் கிடைக்கும் வரவேற்பு அப்படம் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் காரணிகளில் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ‘மாயா’ டிரைலர் வெளியாகி 10 லட்சம் பார்வையாளர்களுக்கு சென்றிருப்பது இப்படத்தின் பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. இத்தனைக்கும் இப்படத்தின் நாயகி நயன்தாரா எந்த சமூகவலைதளங்களிலும் இல்லை. அதோடு ஒரு புதிய டீமின் படத்திற்கு இந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்திருப்பது சமீபத்தில் ‘மாயா’விற்கு மட்டுமே. ஹாலிவுட் ஹாரர் படங்களை விமர்சனம் செய்யும் முக்கிய யு டியூப் சேனல்களில் ஒன்றான பிளட்பாத் அன்ட் பியான்ட், (Bloodbath and beyond) சேனல் ‘மாயா’வின் டிரைலர் தங்களை கவர்ந்திருப்பதாகவும், முழுப்படத்தையும் பார்க்க ஆவலாக இருப்பதாகவும் கூறியிருப்பது ‘மாயா’விற்கு கிடைத்த வெகுமதி!

4. ரான் யோஹானின் இசை

பொதுவாக நம்மூர் ஹாரர் படங்களைப் பொறுத்தவரை, ரசிகர்களை பயமுறுத்துவதற்காக படம் முழுவதும் பின்னணி இசையை காது கிழியும் அளவுக்கு அலறவிட்டுக் கொண்டே இருப்பார்கள். பாடல்களும் இடைச்செருகலாகவே இருக்கும். ஆனால், ‘மாயா’வைப் பொறுத்தவரை அதன் பாடல்களும், பின்னணி இசையும் நிச்சயம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கும். ‘மாயா’ ஆல்பத்தில் 3 பாடல்களும், 6 தீம்களும் இடம்பெற்றிருந்தன. இதில் 2 பாடல்கள் மட்டுமே படத்தில் இடம்பெற்றிருக்கிறது. இருந்தாலும், இந்த 2 பாடல்களுமே காட்சிகளோடு வரும் ‘மான்டேஜ்’ வகையிலேயே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆல்பத்தின் 3 பாடல்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்படத்தின் பின்னணி இசைக்காக மாசிடோனியன் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா (Macedonian Symphony Orchestra) வைப் பயன்படுத்தியிருக்கிறார் ரான். படத்தின் முக்கிய கேரக்டர்கள் ஒவ்வொன்றிற்குமே தனித்தனி தீமில் பயணிக்கும்படியான இசை பயன்படுத்தியிருக்கிறாராம். ஒரு முழுமையான ஹாரர் படத்தை பார்க்க வேண்டும் என விரும்பும் ரசிகர்களுக்கு மேற்கண்ட விஷயங்கள் முழுத்திருப்தியைத் தரும்.

5. பலம் மிக்க தொழில்நுட்ப விஷயங்கள்

அமானுஷ்யப் படங்களைப் பொறுத்தவரை டெக்னிக்கல் விஷயங்களின் நேர்த்தியே அப்படத்தின் தரத்தை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும். இசையைப் போலவே இப்படத்தின் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு ஆகியவையும் ‘மாயா’வின் தூண்கள்தான். பி சி ஸ்ரீராமின் உதவி ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன்தான் ‘மாயா’விற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுத்தம் செய், முகமூடி போன்ற படங்களுக்கும் இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். லைட்டிங், கேமரா கோணங்கள் ஆகியவை கதைக்கும், காட்சிக்கும் தகுந்தபடி அமைக்கப்பட்டிருக்கிறதாம். சத்யனின் ஒளிப்பதிவு நேர்த்திக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைக்குமாம்.

‘மாயா’ ஒலிப்பதிவை சிங்க் சினிமா நிறுவனம் செய்துள்ளது. அஜித்தின் என்னை அறிந்தால் உட்பட ஒரு சில முக்கியப்படங்களுக்கு இந்நிறுவனமே ஒலிப்பதிவு பணியை மேற்கொண்டுள்ளது. அதோடு டால்பி அட்மாஸ் ஒலியில் ‘மாயா’ உருவாகியிருப்பதால் கண்களுக்கு மட்டுமின்றி காதுகளுக்கும் இப்படம் விருந்து படைக்கும் என்கிறார்கள். சமீபத்தில் இப்படம் திரையுலகைச் சேர்ந்த சில முக்கியமானவர்களுக்கு அட்மாஸ் ஒலியுடன் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டதாம். அதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய முக்கிய விஷயமாக அட்மாஸ் சவுண்டை குறிப்பிட்டிருக்கிறார்கள். அதோடு இப்படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றியிருக்கும் ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் முரளி, ‘தங்கள் நிறுவனம் வெளியிட்ட பேய்ப் படங்களிலேயே ‘மாயா’தான் சிறந்த படம்’ என்று குறிப்பிட்டாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - காரிகள் கண்ணே பாடல் வீடியோ


;