அஜித், கார்த்தியின் போலீஸ் கேரக்டர் எனக்குப் பிடிக்கும்! - சக்தி வாசு

அஜித், கார்த்தியின் போலீஸ் கேரக்டர் எனக்குப் பிடிக்கும்! - சக்தி வாசு

செய்திகள் 16-Sep-2015 11:05 AM IST VRC கருத்துக்கள்

போலீஸ் பற்றி மாறுபட்ட கோணத்தில் சொல்லும் படம், 'தற்காப்பு'. அறிமுக இயக்குனர் ஆர்.பி.ரவி. இயக்கியுள்ள இப்படத்தை ‘கினெடாஸ்கோப் ’ நிறுவனம் சார்பில் டாக்டர் எஸ்.செல்வமுத்து, என். மஞ்சுநாத் தயாரித்துள்ளார்கள். இயக்குனர் வாசுவின் மகன் சக்தி வாசு ஹீரோவக நடித்துள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி போலீஸ் துறையை சேர்ந்த ஹ்யூமன் ரைட்ஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டுவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் நடிகர் கார்த்தி பாடல்களை வெளியிட ‘ஜெயம்’ ரவி பெற்றுக்கொண்டார். டிரைலரை இயக்குநர் மிஷ்கின் வெளியிட, இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பெற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து மிஷ்கின் பேசும்போது,

“இந்தப் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். யு/ஏ மற்றும் ஏ சான்றிதழ் பெற்ற படங்கள் முப்பது சதவீத வரி கட்டவேண்டியிருக்கிறது. இன்றைய திரைப்படத்துறை இருக்கும் நிலையில் தயாரிப்பாளர்களுக்கு அது பெரிய அடி. தணிக்கைத்துறையின் செயல்பாடுகளால் நாங்கள் சுதந்திரம் இழந்திருக்கிறோம். கெட்ட வார்த்தைகள், வன்முறை இருந்தால் அதற்கு ‘ஏ’ சான்றிதழ் என்று சொல்லிவிடுகிறார்கள். கெட்ட வார்த்தை, வன்முறை இல்லாமல் வாழ்க்கையே இல்லை. நான் ஒருவரைக் கோபம்கொண்டு பேசும் போது போடா செல்லமே -ன்னா திட்ட முடியும்?

சினிமாப் பற்றி தவறான எண்ணம் உள்ளது. படத்தைக் குழந்தைகளுடன் பார்க்கவேண்டும் என்று! சினிமாவை குழந்தைகளுடன் பார்க்கக் கூடாது. அதற்கான மீடியம் அல்ல சினிமா. கார்ட்டூன்தான் குழந்தைகளுடன் பார்க்கவேண்டும். திரையரங்கில் பார்க்கப்படும் சினிமா, அடல்ட் மீடியம்! பெரியவர்கள் பார்க்கும் படம். குழந்தைகளுடன் யாரும் திரையரங்குக்கு வரவேண்டாம். ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ போன்ற படங்களுக்கு வேண்டுமானால் குழந்தைகளுடன் வரலாம்’’ என்றார்.

படத்தின் ஹீரோ சக்தி வாசு பேசும்போது,

" இந்தப் படத்துக்கு நிறைய பாசிடிவ் எனர்ஜி இருக்கிறது. காரணம் நாங்கள் எல்லாருமே நல்லவர்கள். சமுத்திரக்கனி என்றாலே பாசிடிவ் எனர்ஜிதான். அது பெரிய பலம். என் அப்பா எனக்காகப் போய் வாய்ப்பு கேட்ட ஒரே இயக்குநர் மிஷ்கின் சார்தான். இங்கே அவர் வந்திருக்கிறார். ஜனநாதன் சார், கார்த்தி அண்ணா வந்து இருக்கிறார்கள். கார்த்தி அண்ணா ’சிறுத்தை’யில் நடித்த போலீஸ் கேரக்டர் எனக்குப் பிடிக்கும். காரணம் சிக்ஸ் பேக்ஸ் இருக்காது. அதேபோல தல அஜீத்தும் நடிக்கும் யதார்த்தமான போலீஸ் கேரக்டர் எனக்குப் பிடிக்கும். யதார்த்தமான போலீஸ் தொப்பையுடன் தான் வருவார். தொப்பை இல்லை என்றால் தமிழ்நாடு போலீசே கிடையாது. (அரங்கத்தில் பலத்த சிரிப்பு…)

அப்பாவுக்கும் எனக்கும் நெருக்கம் குறைவு. அப்பா பேச மாட்டாரா என்று நினைத்து ஏங்கி இருக்கிறேன். அப்பா எப்போதும் சினிமா சினிமா என்று பரபரப்பாக இருப்பார். ஆனால் அதெல்லாம் குடும்பத்திற்காக என்று எனக்கு மனைவி மகன் என்று வந்த பிறகுதான் தெரிந்தது. புரிகிறது. அப்பா மகன் மீது வைத்திருக்கும் பாசம் வெளியில் தெரியாது. என் அப்பா ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ பிரகாஷ்ராஜ் மாதிரி. நான் ‘ஜெயம்’ ரவி மாதிரி. இந்தப் படத்துக்காக நாங்கள் வியர்வை தான் சிந்தினோம். ஆனால் தொழில்நுட்பக் கலைஞர்கள் தொழிலாளர்கள் எல்லாமே ரத்தம் சிந்தினார்கள். ஒருவருக்கு 6 வது மாடி யிலிருந்து விழுந்து மண்டை உடைந்து விட்டது. படப்பிடிப்பு மறுநாள் நிறுத்தப்பட்டுவிட்டது.மருத்துவமனை போய் பார்த்தபோது எப்படி இருக்கிறீர்கள் என்றேன் 'நான் நல்லாருக்கேன். படப்பிடிப்பு எப்படி போய்க் கொண்டு இருக்கிறது?' என்றார். எனக்கு அழுகையே வந்துவிட்டது, தொழிலாளர்கள் அவர்கள் இல்லாமல் சினிமா இல்லை" என்றார் சக்தி கண்கலங்கிய படி!

தொடர்ந்து நடிகர் கார்த்தி பேசும்போது,

‘‘ படத்தின் பெயர் 'தற்காப்பு' . போஸ்டரைப் பார்த்தாலே 'தற்காப்பு' நல்ல படம் எனறு தெரிகிறது. நம்பிக்கை வருகிறது. லிங்குசாமி சார் சொல்வார் நல்ல படமா இல்லையா என்பது போஸ்டரிலேயே தெரியும் என்று. எனக்கும் என் அப்பா பற்றிய நினைவு வருகிறது. அப்போது அப்பா சொல்வார் அப்பாவிடமும் குருவிடமும் பாராட்டை எதிர்பார்க்கக் கூடாதுன்னு! அப்படி ஒரு பாராட்டு வரவே கூடாது. பாராட்டு வராத வரைதான் வேலை செய்வோம் என்று.எனக்கு சக்தியை நன்றாகத் தெரியும் ஸ்டண்ட் க்ளாஸில் பார்ப்பேன் .நானும் விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை ஆனால் முயன்றால் முடியும். எதுவும்10 நாள் வரவில்லை என்றால் முயன்றால்11 வது நாள் வரும். முயற்சியை மட்டும் விடக்கூடாது. உடனே வெற்றிவராது. ஆனால் முயற்சி கவனிக்கப்படும் இதைத்தான் நானும் செய்கிறேன். சக்திக்கும் சொல்கிறேன்‘’ என்றார்.

விழாவில் இயக்குநர்கள் பி.வாசு, எஸ்.பி ஜனநாதன், சமுத்திரக்கனி, ஜி.என்.ஆர். குமரவேலன், கிருஷ்ணா, நடிகர் ஜெயம் ரவி, தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால், 'ஆஸ்ட்ரோ' என்.சி. ராஜாமணி, கமலா திரையரங்க உரிமையாளர் கணேஷ் , ஒளிப்பதிவாளர் ஜோன்ஸ் ஆனந்த், இசையமைப்பாளர் எ.ஏச் ஃபைசல், பாடல்கள் எழுதிய மோகன்ராஜ், படத்தொகுப்பாளர் சான் லோகேஷ் ஆகியோரும் கலந்துகொண்டு பேசினார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு பட்டங்கள் பிடிக்காது - ரகுல் ப்ரீத்


;