‘49-ஓ’வில் கவுண்டமணியின் அரசியல் நய்யாண்டி!

‘49-ஓ’வில் கவுண்டமணியின் அரசியல் நய்யாண்டி!

செய்திகள் 7-Sep-2015 11:07 AM IST Top 10 கருத்துக்கள்

நகைச்சுவை சக்ரவர்த்தி கவுண்டமணி கதாநாயகனாக நடித்திருக்கும் ‘49ஓ’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையிலுள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. கவுண்டமணி ஹீரோவாக நடித்துள்ள படம் இது என்பதால் சத்யராஜ், சிவகார்த்திகேயன் உட்பட பல வி.ஐ.பி.க்கள் அவரை வாழ்த்தி பேச வந்திருந்தனர். விழாவில் பேசிய அத்தனை பேரும் கவுண்டமணியை பாராட்டியே பேசினர். சுருக்கமாக சொன்னால் விழா நடந்த இரண்டு மணி நேரமும் அரங்கத்தில் ஒரே சிரிப்புதன்! அனைவரும் பேசி முடித்த பிறகு கவுண்டமணி பேசும்போது,

‘‘இப்படத்தில் நடிக்க சொல்லி என்னிடம் கதையை சொல்ல இப்படத்தின் இயக்குனர் ஆரோக்கியதாஸ், கிட்டத்தட்ட ஒரு வருட காலம் அலைந்தார். கடைசியில் அவரிடம் ‘கதையின் முன்னாடியையும், பின்னாடியையு விட்டுடுங்கள்! இடையில் வருவதை சொல்லுங்கள்’ என்றேன்! நான் அப்படி கூறியதும் அவர் ‘ஆறு ஆடி தாய் மண்ணு’ என்றார். அவர் சொன்ன அந்த வார்த்தை எனக்கு பிடித்தது. இந்த கதையில் நடிக்கிறேன் என்று சொன்னேன். அவரிடம் தயாரிப்பாளர் யார் என்று கேட்டேன். டாக்டர் சிவபாலன் என்றார். அவரை கூட்டிட்டு வாருங்கள் என்றேன். அவரை அழைத்து வந்தார்! அவரிடம் உங்களுக்கு இந்த கதை பிடித்திருக்கிறதா? என்று கேட்டேன். எனக்கும் கதை பிடித்திருக்கு, இந்த கதையை தயாரிக்கலாம் என்றார்.

டாக்டர் சிவபாலனை ரொம்பவும் பாராட்டணும். காரணம் இந்த படத்தில் டப்பாங்குத்து பாட்டு, காதல், டூயட் எதுவும் இல்லை! இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு படத்தை தயாரிக்க ரொம்பவும் தைரியம் வேண்டும். இந்த படத்தோட கதையை பற்றி சொல்லணும்னா பாடலாசிரியர் யுகபாரதி எழுதிய பாடல் வரியான ‘விவசாயம் இல்லேனா இந்த உலகம் எதுடா? உயிரு எதுடா…’ என்பதுதான்! இந்த படம் விவசாயிகளை பற்றிய கதை. அதை அரசியல் நயாண்டி கலந்து சொல்லியிருக்கிறேன்! ஆனா இது அனைவருக்குமான படம்! ‘49-ஓ’ என்றால் நோட்டா என்பார்கள். நோட்டானா என்ன? நாம் யாருக்கு ஓட்டு போடணும்? யாருக்கும் ஓட்டு போட பிடிக்கலைனா என்ன செய்யணும்? இது போன்ற நிறைய விஷயங்களை இப்படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர்!

திஸ் ஈஸ் பெஸ்ட் மூவி! இது ஒரு நல்ல படம். எல்லாரும் பார்க்க வேண்டிய படம். நான் மறுபடியும் மறுபடியும் சொல்றேன் இது நல்ல ஒரு படம்! திஸ் ஈஸ் பெஸ்ட் மூவி! அனைவரும் பாரக்க வேண்டிய படம்!’ என்றார் கவுண்டமணி அழுத்தம் திருத்தமாக!

படத்தின் டிரைலரை சத்யராஜ் வெளியிட, சிவகார்த்திகேயன் பெற்றுக் கொண்டார். இந்த படத்தை இயக்கியிருக்கும் ஆரோக்கிய தாஸ் இயக்குனர்கள் கௌதம் மேனன், விக்ரம் குமார் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். ‘ஜீரோ ரூல்ஸ் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் டாக்டர் சிவபாலன் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு கே.இசை அமைத்துள்ளார். ஆதி கருப்பையா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் கவுண்ட மணியுடன் ஜெயபாலன், திருமுருகன், பாலாசிங், குரு சோமசுந்தரம், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மூணார் ரமேஷ், சாம்ஸ், வைதேகி, விசாலினி, அல்வா வாசு, ‘அவன் இவன்’ ராம்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இம்மாதம் 17 ஆம் தேதி இப்படம் ரிலீசாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டாளி - டிரைலர்


;