பாயும் புலி - விமர்சனம்

எதிர்பார்த்த பாய்ச்சல் இல்லை!

விமர்சனம் 4-Sep-2015 4:31 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Suseenthiran
Production : Vendhar Movies
Starring : Vishal, Kajal Aggarwal, Soori
Music : D. Imman
Cinematography : Velraj
Editing : Anthony

‘பாண்டியநாடு’ கூட்டணி ‘பாயும் புலி’யோடு வந்திருக்கிறது. இது இயக்குனர் சுசீந்திரனின் திரைக்கதை பாய்ச்சலா? அல்லது விஷாலின் ஆக்ஷன் பாய்ச்சலா?

கதைக்களம்

தொழிலதிபர்களுக்கு கொலை மிரட்டல்விடுத்து கோடி கோடியாய் பணம் சம்பாதிக்கும் கும்பலுக்கும், போலீஸுக்கும் இடையே யுத்தம் நடக்கிறது. இந்த யுத்தத்தில் கடத்தல் கும்பலின் முக்கிய ஆள் ஒருவரை போலீஸ் சுட்டுக்கொல்ல, பதிலுக்கு எஸ்.ஐ. ஒருவரை போட்டுத்தள்ளுகிறது ரௌடி கும்பல். இதனால் அந்த ரௌடி கும்பலை அழிக்க அசிஸ்டென்ட் கமிஷனர் விஷால் வரவழைக்கப்படுகிறார். முக்கிய குற்றவாளிகள் அனைவரையும் என்கவுன்டர் செய்கிறார் விஷால். எல்லாம் முடிந்தது என போலீஸ் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், மீண்டும் தொழிலதிபர்களுக்கு கொலை மிரட்டல் வருகிறது..? விஷாலுக்கு புதிய வில்லன் ஒருவர் முளைக்கிறார். அவர் யார்? விஷால் ஜெயித்தாரா இல்லையா? என்பதே ‘பாயும் புலி’.

படம் பற்றிய அலசல்

தனது ‘பாண்டியநாடு’ படத்தில் ஹீரோயிசத்தையே வித்தியாசமான முறையில் கையாண்டு ரசிகர்களிடம் வெகுவாகப் பாராட்டுப் பெற்றவர் இயக்குனர் சுசீந்திரன். இதனால் இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் ‘பாயும் புலி’க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. அதோடு, இது ஒரு போலீஸ் கதை என்பதால் இன்னும் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருந்தது இப்படத்தின் டிரைலர். ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கியிருக்கிறார் சுசீந்திரன்.

ரௌடியிஸம், தொழிலதிபர்கள் மிரட்டல், கொலை, அதைக் கண்டுபிடிக்கும் போலீஸ் என கதையில்தான் புதுமை இல்லை என்று பார்த்தால், திரைக்கதையும், காட்சிகளிலும்கூட பெரிய சுவாரஸ்யம் எதையும் ஏற்படுத்தவில்லை இப்படம். தேவையில்லாத 3 பாடல்களோடு படத்தின் முதல்பாதி மெதுவாக நகர்ந்து, ஒரு சின்ன ட்விஸ்ட்டோடு இடைவேளை போடுகிறார்கள். இரண்டாம் பாதியில் சுவாரஸ்யமாக படம் நகரும் என்ற அறிகுறி இருந்தது. ஆனால், அதையும் முழுப்படத்திலும் தக்கவைக்கத் தவறிவிட்டனர். குறிப்பாக, வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் க்ளைமேக்ஸ் ரசிகர்களின் பொறுமையைத்தான் சோதிக்கிறது. போலீஸ் கதையில் லாஜிக் என்பது மிக முக்கியமான விஷயம். ஆனால் அந்த விஷயத்திலும் கோட்டை விட்டிருக்கிறார்கள்.
‘சிலுக்கு மரமே’ பாடல் வலுக்கட்டாயமாக படத்திற்குள் திணிக்கப்பட்டிருந்தாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு. அதோடு பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார் இமான். வேல்ராஜின் ஒளிப்பதிவும் பலமே.

நடிகர்களின் பங்களிப்பு

விறைப்பான போலீஸ் ஆபீஸராக மிடுக்கு காட்டாமல், கூல் அன்ட் ஃபிட் ஆபீஸராக வலம் வருகிறார் விஷால். ரொமான்ஸ், சென்டிமென்ட், ஆக்ஷன் என எல்லா ஏரியாக்களிலும் விஷாலுக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது. காஜல் அகர்வால் பாடல்களுக்கு பயன்பட்டிருக்கிறார். சூரியின் காமெடி பெரிதாக எடுபடவில்லை. சமுத்திரக்கனியின் கேரக்டர் ரசிகர்களுக்கு ‘ஷாக்’ கொடுக்கலாம். ஆனந்த்ராஜ், ஜெயப்பிரகாஷ், வேலா ராமமூர்த்தி, ஆர்.கே. ஆகியோர் சின்னச் சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

பலம்

1. ‘சிலுக்கு மரமே’ பாடலும், இமானின் பின்னணி இசையும்.
2. வேல்ராஜின் ஒளிப்பதிவு

பலவீனம்

கதை, திரைக்கதை, லாஜிக் உள்ளிட்ட விஷயங்கள் இப்படத்தின் முக்கிய பலவீனங்கள்.

மொத்தத்தில்...

சுசீந்திரனின் பலமே திரைக்கதைதான். ஆனால் அதுவே இப்படத்தின் பலவீனமாக அமைந்திருக்கிறது. ஆகவே ரசிகர்களே... ‘பாண்டிய நாடு ஸ்டைலில் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும்’ என்ற உங்களின் எதிர்பார்ப்பை தியேட்டருக்கு வெளியிலேயே விட்டுச் சென்றுவிடுங்கள்.... நல்லது!

ஒரு வரி பஞ்ச் : எதிர்பார்த்த பாய்ச்சல் இல்லை!

ரேட்டிங் : 4/10

(Paayum Puli Review, Paayum Puli Movie Review, Paayum Puli Tamil Movie Review, Paayum Puli Film Review)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;