இஞ்சி இடுப்பழகி - டீஸர் விமர்சனம்

இஞ்சி இடுப்பழகி - டீஸர் விமர்சனம்

கட்டுரை 31-Aug-2015 3:28 PM IST Chandru கருத்துக்கள்

பொதுவாக ஒரு படத்திற்காக ஹீரோக்கள் மட்டுமே தங்களது உடல் எடையை கூட்டி, குறைத்து அந்தந்த கேரக்டராகவே மாறுவார்கள். ஆனால், முதல்முறையாக ஒரு நடிகையாக அனுஷ்கா தன் உடல் எடையை கணிசமாக கூட்டி நடித்திருக்கும் படம் ‘இஞ்சி இடுப்பழகி’. 2 கிலோ ஏறினாலே, ஜிம்மில் மாங்கு மாங்கென வியர்வையை வடிக்கும் நடிகைகளுக்கு மத்தியில், ஜஸ்ட் லைக் தட் 20 கிலோ எடையைக் கூட்டியிருக்கிறார் அனுஷ்கா. இந்த ஒரு விஷயத்திற்காகவே இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற பேராவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அனுஷ்கா ரசிகர்கள். விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் முன்னோட்டமாக தற்போது ஃபர்ஸ்ட் லுக் டீஸரை வெளியிட்டிருக்கிறார்கள். எடை குறைப்பு அவசியத்தை பின்னணியாக கொண்டு உருவாகும் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் டீஸரை ‘வெயிட்’டாக உருவாக்கியிருக்கிறார்களா?

மொத்தம் 34 வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த டீஸரில் எந்த வசனமும் இல்லை. எதிர்பார்த்ததைப் போலவே குண்டு அனுஷ்காவின் தரிசனத்தை மட்டுமே ரசிகர்களுக்குத் தந்திருக்கிறார்கள். ஹீரோ ஆர்யாவும் இரண்டொரு ஷாட்டில் சிரித்துவிட்டுப் போயிருக்கிறார். அனுஷ்காவின் அம்மாவாக ஊர்வசி தலைகாட்டுகிறார். மரகதமணியின் பின்னணி இசையும், காட்சிகளின் ஜாலி கேலியையும் பார்த்தால் இப்படம் சீரியஸ் விஷயத்தை, சிரிக்கச் சிரிக்க சொல்லப்போகிறது என்பதையே காட்டுகிறது. நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் கலர்ஃபுல் கலாட்டா. குறிப்பாக குண்டு அனுஷ்காவையும் அத்தனை அழகாக காட்டியிருக்கிறார். டீஸரின் இறுதியில் எடைபார்க்கும் இயந்திரத்திலிருந்து வெளிவரும் அட்டையிலேயே ஆடியோ ரிலீஸ் தேதியையும் அறிவித்திருப்பது கிரியேட்டிவ் டச்.

மற்றபடி, ‘இப்படத்தை உடனே பார்க்க வேண்டுமே’ என்ற பெரிய ஆவல் எதையும் இந்த டீஸர் ஏற்படுத்தவில்லை. ஆனால், டிரைலரில் நிச்சயம் அதை ஈடுகட்டுவார்கள் என்ற நம்பிக்கை எழுகிறது.

பிவிபி சினிமாஸ் தமிழ், தெலுங்கு (சைஸ் ஜீரோ) என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கும் இப்படத்தை பிரகாஷ் கோவேலமுடி இயக்குகிறார். படத்தின் பாடல்களை செப்டம்பர் 6ஆம் தேதி வெளியிடவிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொல்லிவிடவா - டீசர்


;