தாக்க தாக்க – விமர்சனம்

விக்ராந்தின் ஆக்‌ஷன் சாம்ராஜ்யம்

விமர்சனம் 28-Aug-2015 3:21 PM IST Top 10 கருத்துக்கள்

Production : Versatile Studios
Direction : Sanjeev
Starring : Vikranth, Aravind , Abinaya, Rahul Venkat, Parvathi Nirban
Music : Jakes Bejoy
Cinematography : Sujith Sarang
Editing : Sreejith Sarang

இதுவரை சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த விக்ராந்த், தனது அண்ணன் இயக்கத்தில் ஒரு முழுநீள ஆக்‌ஷன் ஹீரோவாக களமிறங்கியிருக்கும் படம் ‘தாக்க தாக்க’.

கதைக்களம்

கட்டாயப்படுத்தி விபசாரத்தில் தள்ளப்படும் ஒரு இளம் பெண்ணுக்கு பிறக்கும் ஒரு குழந்தை எப்படி அனாதையாகிறார்? அந்த அனாதை இந்த சமூகத்தில் வளரும்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்னென்ன? அவன் பெரிய ஆளாகி தன் தாய்க்கும், தனக்கும் துரோகம் செய்தவர்களை எப்படி பழி வாங்குகிறார் என்பதே ‘தாக்க தாக்க’ படத்தின் ஒரு வரி கதை. அதை உயிருக்கு உயிரான இரண்டு அனாதை நண்பர்களின் (விக்ராந்த், அரவிந்த்) வாழ்க்கைப் பின்னணியில் சொல்லப்பட்டுள்ளது.

படம் பற்றிய அலசல்

பெற்றோரின் அரவணைப்போடு வளரும் ஒரு குழந்தைக்கு தான் நல்ல எதிர்காலம் அமையும் என்ற கருத்தை வலியுறுத்தி இப்படத்தை இயக்கியுள்ளார் சஞ்சீவ்! அதற்காக அரசியல் போட்டி, ரௌடியிசம், அப்பாவி பெண்களை கடத்திச் சென்று கட்டாய விபசாரத்தில் ஈடுபடுத்துவது போன்ற பல சமூக விரோத செயல்களை திரைக்கதையாக்கியிருக்கிறார். அதை விறுவிறுப்பான, அதே நேரம் வித்தியாசமான காட்சி அமைப்புகளுடன் படமாக்கியிருக்கிறார் என்றாலும், கதையில் இடம்பெறும் அதிகபடியான வன்முறை காட்சிகள் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் சில காட்சிகள் படத்தை கொஞ்சம் தொய்வடைய செய்கிறது.

அறிமுக ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங்கின் கதையை மீறாத ஒளிப்பதிவு, அறிமுக இசை அமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் நேர்த்தியான பின்னணி இசை, அறிமுக பட தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங்கின் எடிட்டிங் என படத்தின் முக்கிய டெக்னிக்கல் விஷயங்கள் பாராட்டும் படி அமைந்திருப்பதோடு அவை படத்திற்கு பக்க பலமாகவும் அமைந்துள்ளது. அத்துடன் காதல் காட்சிகளை, பொழுதுபோக்கு அம்சங்களை நம்பாமல் படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேரையும் அந்தந்த பாத்திரங்களாகவே உருவப்படுத்தியிருக்கும் இயக்குனர் சஞ்சீவின் பணியும் பாராட்டுக்குரியது. ஆனால் விக்ராந்தின் நட்புக்கு மதிப்பளித்து ஒரு பாடலில் அவருடன் இணைந்து ஆடியுள்ள விஷால், ஆர்யா, விஷ்ணு விஷால் ஆகியோரின் பங்களிப்பு இப்படத்திற்கு எந்த விதத்திலும் பலம் சேர்க்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.

நடிகர்களின் பங்களிப்பு

இப்படத்தில் விக்ராந்தின் நடிப்பில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. தன்னை இப்படம் மூலம் அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு இப்படத்தில் கடுமையாக உழைத்துள்ளார் விக்ராந்த். படம் முழுக்க இறுக்கமான முகத்துடன் வரும் விக்ராந்த், அதிக வசனங்கள் பேசாமல் அதிரடி ஆக்‌ஷனில் அசத்தலான நடிப்பை வழங்கியுள்ளார். வில்லனாக வரும் அறிமுக நடிகர் ராகுல் வெங்கட், விபச்சார கும்பல் தலைவனாக வரும் அருள்தாஸ் ஆகியோரும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்கள். விக்ராந்தின் நண்பர் அரவிந்தின் காதலியாக வரும் அபிநயா, விக்ராந்தை நேசிக்கும் பெண்ணாக வரும் பார்வதி நிர்பன் ஆகியோருக்கு வாய்ப்புகள் குறைவு என்றாலும் நடிப்பை பொறுத்தவரை யாரும் குறை வைக்கவில்லை.

பலம்

1. விறுவிறுப்பான திரைக்கதையும், வித்தியாசமான காட்சி அமைப்புகளும்
2. நடிகர்களை அந்தந்த பாத்திரங்களாக கையாண்டிருக்கும் விதம்
3. ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் விஷயங்கள்

பலவீனம்

1.அதிகபடியான வன்முறை காட்சிகள் மற்றும் பெண்களை இழிவுப்படுத்தும் சில காட்சி அமைப்புகள்
2. காமெடி, பாடல்கள் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாதது.

மொத்தத்தில்

முழுக்க முழுக்க ஒரு அதிரடி ஆக்‌ஷன் படமாக அமைந்துள்ள இப்படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்க வாய்ப்பு இருப்பதோடு, விக்ராந்துக்கும் நல்ல பெயர் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

ஒருவரி பஞ்ச்: விக்ராந்தின் ஆக்‌ஷன் சாம்ராஜ்யம்

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;