தனி ஒருவன் - விமர்சனம்

அர்விந்த் சுவாமியின் ஒன் மேன் ஷோ!

விமர்சனம் 28-Aug-2015 12:58 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Mohan Raja
Production : AGS Entertainment
Starring : Jayam Ravi, Arvind Swamy, Nayantara
Music : Hiphop Tamizha
Cinematography : Ramji
Editing : Gopikrishna

ரோமியோ ஜூலியட், சகலகலா வல்லவன் படங்களைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்திருக்கிறது ‘தனி ஒருவன்’. முதல்முறையாக வில்லனாக இப்படத்தில் களமிறங்கியிருக்கிறார் அர்விந்த் சுவாமி. படம் எப்படி?

கதைக்களம்

தனது 15 வயதில் தன் அப்பா தம்பி ராமையாவை எம்.எல்.ஏ. ஆக்குவதற்காக கொலைப்பழியை ஏற்றுக் கொண்டு ஜெயிலுக்குப் போகிறார் அர்விந்த் சுவாமி. அதன்பிறகு வெளியே வந்து படித்து பெரிய ஆளாகி சயின்டிஸ்ட்டாக மாறும் அர்விந்த் சுவாமி, தனது புத்திசாலிதனத்தின் மூலம் கெட்ட வழிகளில் பணம் சம்பாதித்து சர்வதேச அளவிலான குற்றவாளிகளுடன் தொடர்பு வைக்கிறார். இன்னொருபுறம் சின்னச் சின்ன குற்றங்களுக்குப் பின்னணியில் இருக்கும் பெரிய பெரிய ஆட்களை தேடிக் கண்டுபிடித்து அழிக்க வேண்டும் என்ற வெறியுடன் ஐ.பி.எஸ். அதிகாரியாக மாறுகிறார் ஜெயம் ரவி.

இந்த இருவரும் ஒரு புள்ளியில் சந்தித்துக் கொள்கின்றனர். அதன்பிறகு தீமைக்கும், நன்மைக்கும் இடையே ஆரம்பமாகிறது யுத்தம். இந்த யுத்தத்தின் இறுதியில் வழக்கம்போல் நன்மைதான் வெல்லும் எனத் தெரிந்தாலும், ஹீரோ வில்லனை எப்படி வீழ்த்துகிறார் என்பதற்கான சுவாரஸ்யமான பக்கங்கள்தான் ‘தனி ஒருவன்’.

படம் பற்றிய அலசல்

தனது முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் புதிய ஒரு கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் மோகன் ராஜாவாக மாறியிருக்கும் இயக்குனர் ‘ஜெயம்’ ராஜா. இந்தியாவில் மருத்துவத்துறையில் நடக்கும் முறைகேடுகளின் பின்னணியில் நிகழும் கொலைகள், வழிப்பறி சம்பவங்கள், ஆள் கடத்தல்கள் என புதிய கோணத்தில் கொஞ்சம் விலாவாரியாக திரைக்கதை அமைத்திருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு திரைக்கதையில் ஹீரோவைவிட வில்லன் பவர்ஃபுல்லாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து, அதற்கேற்றார்போல் சித்தார்த் அபிமன்யூ கேரக்டரை வடிவமைத்திருக்கிறார்கள். வில்லன் மட்டுமின்றி ஹீரோ, ஹீரோயின், ஹீரோவுடைய நண்பர்கள் என படத்தில் வரும் பெரும்பாலான கேரக்டர்களை கதையின் தேவைக்கேற்ப பயன்படுத்தியிருப்பது படத்தின் பலம்.

முன் பாதியில் ஒரு பாடல், பின்பாதியில் ஒரு பாடல் என இரண்டே பாடல்களை ‘நச்’சென கொடுத்திருக்கிறார் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி. பின்னணி இசையில் படம் முழுக்க ‘தீமைதான் வெல்லும்’ பாடலையே பயன்படுத்தியிருக்கிறார். ஒளிப்பதிவு, டி.ஐ. போன்ற விஷயங்களில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். அதேபோல் படத்தின் முதல்பாதியில் கதைக்கு தேவையென ஏகப்பட்ட ‘டீடெயில்’களை அடுக்கியிருக்கிறார்கள். இது அவசியம்தான் என்றாலும், கொஞ்சம் அலுப்பை ஏற்படுத்துகிறது.

நடிகர்களின் பங்களிப்பு

பேராண்மை, நிமிர்ந்து நில் படங்களைப்போல் இப்படத்திலும் ஜெயம் ரவிக்கு நேர்மையான மனிதராக வலம் வரும் கேரக்டர். ஐ.பி.எஸ். மித்ரனாக நன்றாகவே நடித்திருக்கிறார். வெறும் ஹீரோயினாக இல்லாமல் படத்தின் கேரக்டராக வந்து நடிப்பில் பிரமாதப்படுத்தியிருக்கிறார் நயன்தாரா. இப்படத்தின் ‘நிஜ ஹீரோ’ வில்லன் அர்விந்த் சுவாமி தான். மனிதர் சித்தார்த் அபிமன்யூவாக வாழ்ந்திருக்கிறார். ‘மங்காத்தா’ அஜித்திற்குப் பிறகு ஒரு ஸ்டைலிஷ் வில்லனாக கண்முன் நிற்கிறார் அர்விந்த்சாமி. ரசிகர்களுக்குப் பிடித்த வில்லனாக, குறிப்பாக ரசிகைகளுக்கு ரொம்பப் பிடித்த வில்லனாக இனி அர்விந்த்சாமி இருப்பார். நாசர், தம்பி ராமையா, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட மற்றும் பலர் அந்தந்த கேரக்டர்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

பலம்

1. அர்விந்த் சுவாமியின் அசத்தலான நடிப்பு
2. படத்தை போரடிக்காமல் நகர்த்தியிருக்கும் திரைக்கதை.
3. கதாபாத்திர வடிவமைப்பு

பலவீனம்

1. படத்தின் முதல்பாதியில் கொஞ்சம் அலுப்பை ஏற்படுத்தும் டீடெயிலிங் காட்சிகள்
2. ஆங்காங்கே எட்டிப்பார்க்கும் லாஜிக் மீறல்கள்

மொத்தத்தில்....

ஒரு போலீஸ் கதையாக, ஒரு சமூக கருத்தை சொல்லும் கதையாக, ஹீரோ வில்லனுக்கிடையே நடக்கும் மோதல் கதையாக ‘தனி ஒருவன்’ படமும் ஏற்கெனவே தமிழில் பலமுறை சொல்லப்பட்ட ஒரு கதைதான். ஆனால், சொல்ல வந்த விஷயத்தை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் கொடுத்த விதத்தில் தனித்து நிற்கிறது இப்படம்.

ஒரு வரி பஞ்ச் : அர்விந்த் சுவாமியின் ஒன் மேன் ஷோ!

ரேட்டிங் : 5.5/10

(Thani Oruvan Movie Review, Thani Oruvan Tamil Movie Review, Thani Oruvan Review, Thani Oruvan Film Review)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் புதிய டீசர் - வீடியோ


;