ஜிகினா - விமர்சனம்

Dislike!

விமர்சனம் 22-Aug-2015 10:08 AM IST Top 10 கருத்துக்கள்

Starring : Vijaya Vasanth, Saniyathara
Direction : Ravi Nanda Periyasamy
Cinematography : Balaji v.Ranga
Editor : Gopi Krishna
Music Director : John peters
Producers : N. Subash Chandra Bose & K.Thirukadal Kadal Udhayam

ஃபேஸ்புக் மூலம் காதலிப்பவர்களுக்கு சாட்டையடி கொடுக்க வந்திருக்கும் படமே ‘ஜிகினா’. இப்படத்திற்கு ரசிகர்களிடத்தில் எவ்வளவு ‘லைக்ஸ்’ கிடைக்கும்?

கதைக்களம்

கொடைக்கானல் மலைஉச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வதற்காக நின்று கொண்டிருக்கிறார் படத்தின் நாயகன் விஜய் வசந்த். அவர் தற்கொலை செய்துகொள்வதற்கான காரணங்கள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்த காட்சிகளில் ஃப்ளாஷ்பேக்காக வரிசைப்படுத்துகிறார்கள். அந்த காரணங்கள் என்னென்ன என்பதை விவரிக்கும படமே ‘ஜிகினா’.

கதைக்களம்

ஃபேஸ்புக் பேக் ஐடி நபர்களுக்குள் நிகழும் காதலால் என்னென்ன விபரீதங்கள ஏற்படும் என்பதையே ‘ஜிகினா’ மூலம் சொல்ல வந்திருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான கதைக்களத்தைத்தான் கையிலெடுத்திருக்கிறார் இயக்குனர் ரவி நந்தா பெரியசாமி. ஆனால், அதை சுவாரஸ்யமாக படமாக்குவதில் தடுமாறியிருக்கிறார். லாஜிக் என்பதைப் பற்றி கொஞ்சமும் கவலையே படாமல், அமெச்சூர்தனமான காட்சியமைப்புகளால் ‘ஜிகினா’ பொலிவிழந்து நிற்கிறது.

ஃபேஸ்புக்கில் அழகான ஆண் புகைப்படத்தைப் பார்த்தாலே போதும், பெண் தானாக வந்து நட்பு அழைப்பு கொடுப்பாள் என்று இயக்குனர் எப்படி முடிவு செய்தார் எனத் தெரியவில்லை. தவிர இந்த செல்ஃபோன் யுகத்திலும், ஹீரோவும், ஹீரோயினும் ஒருமுறைகூட தங்களது செல்ஃபோன் நம்பரைக்கூட கேட்காமல் கடைசிவரை ஃபேஸ்புக்கில் ஆடியோ சாட்டிங் மூலம் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் ஏற்றுக் கொள்வதற்கில்லை. இப்படி படம் நெடுக ஏகப்பட்ட ஓட்டைகள். போதாக்குறைக்கு வில்லன் என்ற பெயரில் ‘காமெடி பீஸ்’ கேரக்டர் ஒன்றையும் உலவவிட்டிருக்கிறார்கள்.

டெக்னிக்கலாகவும் இப்படம் ரொம்பவே சுமார். ஒரேயொரு பாடல் மட்டுமே கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் ஆகியவற்றில் பட்ஜெட் பற்றாக்குறை தெரிகிறது.

நடிகர்களின் பங்களிப்பு

தனக்கேற்ற கேரக்டராக தேர்வு செய்து நடித்து வரும் விஜய் வசந்த் இப்படத்திலும் சரியான கேரக்டரைத்தான் தேர்வு செய்திருக்கிறார். அப்பாவி கால் டாக்ஸி ஓட்டுனராக முடிந்தளவிற்கு சிறப்பாக செய்திருக்கிறார் விஜய் வசந்த். மாடர்ன் கேர்ள் கேரக்டரில் சானியதாரா சரியாக பொருந்தியிருக்கிறார். நடிப்பதற்கு பெரிய அளவில் ஸ்கோப் இல்லை. ‘கருகுமணி’ கேரக்டரில் நடித்திருக்கும் ஸ்ரீதேவி நடிப்பில் ஓகே. இந்த 3 கேரக்டர்களைத் தவிர இன்னும் படத்தில் நிறைய நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் யாருக்கும் பெரிய அளவில் வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை.

பலம்

கதைக்கான ஐடியா

பலவீனம்

முக்கியமான விஷயங்கள் அனைத்தும் படத்திற்கு பலவீனமாகவே அமைந்திருக்கின்றன.

மொத்தத்தில்...

அவசியமான ஒரு கதையைத் தேர்ந்தெடுத்திருக்கும் இயக்குனர் அதை சுவாரஸ்யமான ஒரு படமாக மாற்றுவதில் கோட்டைவிட்டிருக்கிறார். கதைக்குத் தேவையான லாஜிக் விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்தி, சுவாரஸ்யமான காட்சிகளை உருவாக்கியிருந்தால் ‘ஜிகினா’ ஜொலித்திருக்கும்.

ஒரு வரி பஞ்ச் : Dislike!

ரேட்டிங் : 3/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 28 II காட்சிகள் - வீடியோ


;