‘புலி’ - டிரைலர் விமர்சனம்

‘புலி’ - டிரைலர் விமர்சனம்

கட்டுரை 20-Aug-2015 9:24 AM IST Chandru கருத்துக்கள்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர், பாடல்களைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் டிரைலரும் வெளியிடப்பட்டிருக்கிறது. டீஸரில் எழுந்த சில சந்தேகங்களுக்கு இந்த டிரைலர் மூலம் பதில் சொல்லியிருக்கிறாரா இயக்குனர்?

மொத்தம் 1 நிமிடம் 55 வினாடிகள் ஓடும் இந்த டிரைலர், குழந்தைகளுடன் பார்த்து ரசிக்கும்படியான ஃபேன்டஸி படம்தான் ‘புலி’ என்பதை சூடம் ஏற்றி சத்தியம் செய்கிறது. ‘பாகுபலி’ படத்தைப் போன்ற வரலாற்று டீடெயில்களையோ, லாஜிக் விஷயங்களையோ, தொழில்நுட்ப நேர்த்திகளையோ ‘புலி’ படத்தில் நிச்சயம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், கண்டிப்பாக பொழுதுபோக்கு விஷயங்களில் ‘புலி’ ஒருபடி மேலே நிற்கும் என்பதற்கு இந்த டிரைலர் கட்டியம் கூறுகிறது.

அதேபோல் ஆரம்பத்தில் கூறப்பட்டதுபோல டெக்னாலஜி யுகம், மன்னர் யுகம் என இரண்டு காலகட்டங்களில் நடப்பதுதான் ‘புலி’ படத்தின் கதை என்பதும், இந்த டிரைலர் மூலம் பொய்யாகி இருக்கிறது. மலைவாழ் பழங்குடியினர், சித்திர குள்ள மனிதர்கள், கொடுங்கோல் ஆட்சிபுரியும் ராஜ்ஜியம் ஆகியவற்றை உள்ளடக்கியதே புலி படத்தின் கதைக்களம். இதில் ராஜ்ஜியத்தின் ராணியாக ஸ்ரீதேவி, தளபதியாக சுதீப், இளவரசியாக ஹன்சிகா ஆகியோரும், மலைவாழ் பழங்குடியினராக ஸ்ருதிஹாசன், தம்பி ராமையா, சத்யன், நரேன் ஆகியோரும் குள்ளமனிதர்களாக வித்யூலேகா, ரோபோ ஷங்கர், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட சிலரும் நடித்திருக்கிறார்கள். ராஜ்ஜியத்திற்கும், மலைவாழ் மக்களுக்கிடையே நடக்கும் நில உரிமை பிரச்சனையைத் தீர்த்து வைக்கப் போராடும் போராளியாக விஜய் நடித்திருக்கிறார். விஜய் யார்? அவர் எங்கிருந்து வந்தவர்? டிரைலரின் இறுதியில் நீண்ட தலைமுடியுடன் காணப்படும் இன்னொரு விஜய்யின் ஃப்ளாஷ்பேக் எப்படி இருக்கும்? விஜய்க்கும் சித்திரக் குள்ளர்களுக்குமான உறவு என்ன? என்பன போன்ற பல சஸ்பென்ஸ்களுடன் முடிகிறது இந்த டிரைலர்.

கலை வடிவமைப்பு, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், ஒளிப்பதிவு, கலர் கிரேடிங், பின்னணி இசை, பாடல்கள் என அனைத்து விஷயங்களும் ஒரு ஃபேன்டஸி படத்திற்கு எப்படி இருக்க வேண்டுமோ அதை பிரதிபலித்திருக்கின்றன. இதுபோன்ற படங்களைப் பார்க்க வரும் ரசிகர்கள், தங்களின் ‘ஜீனியஸ்’ மூளையை கழற்றி வைத்துவிட்டு, குழந்தைகள் மனநிலையுடன் தியேட்டருக்குள் நுழைந்தால் மட்டுமே படத்துடன் ஒன்ற முடியும். இல்லாதபட்சத்தில் ‘இது எப்படி? அது எப்படி?’ என யோசித்து யோசித்தே டயர்டாகிவிடுவோம்.

இது ஒரு ஃபேன்டஸி படம் என்ற வகையில் அதற்கான முழுத்தகுதியும் ‘புலி’ படத்திற்கு இருப்பதை உறுதி செய்கிறது இந்த டிரைலர். விஜய் ரசிகர்களைப் பொறுத்தவரை அவர்கள் எதிர்பார்க்கும் சண்டைக்காட்சிகள், பஞ்ச் வசனங்கள், அசத்தல் நடனங்கள் என அத்தனையும் இந்த ‘புலி’யிலும் இருக்கும் என்பது நிச்சயம்.

மொத்தத்தில்... ‘புலி’ குழந்தைகளின் பொழுதுபோக்கு ராஜ்ஜியமாக இருக்கும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;