‘கபாலி’யின் 40 வருடப் பயணம்!

‘கபாலி’யின் 40 வருடப் பயணம்!

செய்திகள் 18-Aug-2015 10:20 AM IST Chandru கருத்துக்கள்

மற்ற மொழிகளைப் பொறுத்தவரை ‘சூப்பர்ஸ்டார்’ என்பது பொதுவான அடைமொழி. அந்தந்த சீஸனில் எந்த ஹீரோ சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்து முன்னணி நாயகனாக ஜொலிக்கிறாரோ அவர்தான் சூப்பர்ஸ்டார். பாலிவுட்டில் அமிதாப்பும் சூப்பர்ஸ்டார்தான், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான் ஆகியோரும் சூப்பர்ஸ்டார்தான். அதேபோல் தெலுங்கில் சிரஞ்சீவியும் சூப்பர்ஸ்டார்தான், மகேஷ்பாபு, பவன் கல்யாணும் சூப்பர்ஸ்டார்தான். ஆனால் கோலிவுட்டைப் பொறுத்தவரை ‘சூப்பர்ஸ்டார்’ என்ற வார்த்தை அடைமொழி அல்ல... அது ஒரு அடையாளம். அந்த அடையாளத்திற்குச் சொந்தமானவர் ஒரே ஒருவர்தான்... அவர் ரஜினி!

பஸ் கன்டக்டராக பணிபுரிந்த சிவாஜி ராவை, இயக்குனர் கே.பாலசந்தர் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் செய்து வைத்தார். சரியாக இதே நாளில் (ஆகஸ்ட் 18), 40 வருடங்களுக்கு முன்னர், அதாவது 1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி பாலசந்தர் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படம் வெளியானது. இப்படத்தின் ஹீரோ கமல்ஹாசன் என்பது இன்னொரு சிறப்பு. சாதாரண நடிகராக அறிமுகமாகி, வில்லனாக மிரட்டி, இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடிக்கத் தொடங்கி, தனி ஹீரோவாக உயர்ந்து, ‘சூப்பர்ஸ்டார்’ எனும் அடையாளத்தை பல வருட முயற்சிகளுக்குப் பிறகு எட்டிப் பிடித்தார். அன்றுமுதல் ‘சூப்பர்ஸ்டார்’ என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருபவர் ரஜினி மட்டுமே!

இந்த 40 வருட சினிமா பயணத்தில் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகளை சந்தித்திருக்கிறார் ரஜினி. ஆனால் ஒருபோதும் தன்னிலை மாறியதில்லை. அதுவே ரசிகர்கள் மத்தியில் ரஜினியின் இமேஜ் உயர்வதற்கு மிக முக்கியக்காரணம். ரசிகர்கள் மட்டுமின்றி, இந்திய சினிமா நட்சத்திரங்கள் அனைவருக்கும் பிடித்தமான நடிகர் ஒருவர் உண்டென்றால், அது நிச்சயம் நமது ரஜினியாகத்தான் இருக்க முடியும். அவ்வளவு ஏன், பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனே, ‘‘ரஜினிதான் உண்மையான சூப்பர்ஸ்டார்’’ எனக் கூறியிருப்பது ஒன்று மட்டுமே போதும், ரஜினியின் புகழ் இந்திய சினிமாவில் எத்தனை உயரத்தில் இருக்கிறது என்பதைச் சொல்வதற்கு.

இன்னும் பல வருடங்கள் தமிழ் சினிமாவில் கோலோச்சட்டும் இந்த ‘கபாலி’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;