வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க – விமர்சனம்

‘VSOP’ யில் காமெடியை சரியாக மிக்சிங் செய்யவில்லை!

விமர்சனம் 14-Aug-2015 3:14 PM IST Top 10 கருத்துக்கள்

Production : The Show People
Direction : M.Rajesh
Starring : Aarya, Santhanam, Thamanna, Baanu, Karunakaran, Vidhyu Lekha
Music : D. Imaan
Cinematography : Neerav Sha
Editing : Vivek Harshan

‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜேஷ், ஆர்யா கூட்டணி அமைத்துள்ள படம், ஆர்யாவின் 25-ஆவது படம் என்ற சிறப்புகளுடன் வந்திருக்கும் ‘VSOP’ அந்த எதிர்பார்ப்புகளுக்கு ஈடு கொடுத்துள்ளதா?

கதைக்களம்

சின்ன வயதிலிருந்தே உயிருக்குயிரான நண்பர்கள் ஆர்யாவும், சந்தானமும். இவர்கள் இருவரும் ஒரு முக்கிய பிரச்சனைக்கான உண்ணாவிரத போராட்டத்திற்கு தலைமை தாங்குகிறார்கள். போராட்டம் நடக்கும் இடத்திற்கு மீடியாக்காரர்கள் வந்து குவிவதோடு, ஆண்களுக்காக குரல் கொடுக்கும் ‘விஐபி’ ஷகிலா மற்றும் அசிஸ்டென்ட் போலீஸ் கமிஷனர் விஷாலும் வந்து விடுகிறார்கள். அதன் பிறகு ஃப்ளேஷ்பேக்கில் சொல்லப்படும் கதையில், பானுவை திருமணம் செய்துகொள்ளும் சந்தானத்தை கலாய்க்க, ஆர்யா செய்யும் ஒவ்வொரு குறும்புகளும் பானுவிற்கு எரிச்சலையூட்ட, நண்பனை கட் பண்ணி விட்டு வந்தால் தான் முதலிரவு என்று கண்டிஷன் போடுகிறார்! நண்பனை கட் பண்ணி விடுவதா? அவனுக்கு ஒரு பெண்ணை கட்டி வைத்து விட்டால் தன் பிரச்சனைகளுக்கு முடிவு ஏற்படும் என்று நினைக்கும் சந்தானம், மேட்ரிமோனியல் அலுவலகத்தில் பணிபுரியும் தமன்னாவை ஆர்யாவுடன் கோர்த்து விடுகிறார். ஆனால் தமன்னாவுக்கு ஆர்யாவை பிடிக்காது! இந்நிலையில் இவர்களுக்குள் நடக்கும் நட்பு, காதல், சண்டை, ஒருவருக்கொருவர் குழி பறிப்பது இப்படி செல்லும் காமெடி கலாட்டா தான் ‘VSOP’.

படம் பற்றிய அலசல்!

தனது முந்தைய படங்களைப் போலவே கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், என்டர்டெயின்மென்ட் விஷயங்கள் மட்டும் இருந்தால் போதும் என்ற முடிவோடு தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார் எம்.ராஜேஷ்! ஆனால் முந்தைய படங்களிலில் இருந்ததை போன்ற சுவாரஸ்யமான காமெடி காட்சிகள், ஹ்யூமர் வசனங்கள், ஜாலியான காதல் காட்சிகள் ஆகிய விஷயங்கள் இப்படத்தில் ரொம்பவும் மிஸ்ஸிங்! அதனால் படம் கொஞ்சம் ஸ்லோவாக பயணிப்பதை போன்ற உணர்வை தருவதோடு ராஜேஷ் படம் எப்போதும் இப்படிதான் இருக்கும் என்ற நிதர்சனத்தையும் உணர்த்துகிறது.

டி.இமான் இசையில் அமைந்துள்ள ‘லக்கா மாட்டிக்கிச்சு…’ மற்றும் ‘சப்ஸ்கிரைபர்… பாடல்கள் என்டர்டெயின்மென்ட் ரகம்! ‘லக்கா மாட்டிக்கிச்சு’ குத்துப் பாடலில் ஆர்யாவுக்கு ஈடு கொடுத்து நடனம் ஆடியுள்ள சந்தானத்திற்கு ஒரு ‘ஓ ’போடலாம்! குறை சொல்ல முடியாத நீரவ்ஷாவின் ஒளிப்பதிவும், விவேக் ஹர்ஷனின் படத்தொகுப்பும் ‘VSOP’ க்கு பக்க பலமாக அமைந்துள்ள அம்சங்கள்.

நடிகர்களின் பங்களிப்பு

வெள்ளந்தியான ஒரு கேரக்டரில் நடித்திருக்கும் ஆர்யா, சந்தானம் தன்னை தான் கலாய்க்கிறார் என்று தெரிந்தும் அடிக்கடி, ‘செம கலாய் மச்சி…’ என்று அப்பாவியாக பேசும்போது அவர் மீது நமக்கு பரிதாபம் தான் ஏற்படுகிறது. ஆர்யா, தனது கேரக்டரின் தன்மையை உணர்ந்து நன்றாக நடித்துள்ளார். சந்தானம் தனது வழக்கமான பாணியில் நய்யாண்டி, நக்கல் வசனங்கள் பேசி சிரிக்க வைக்க முயற்சித்திருப்பதோடு நன்றாக நடிக்கவும் செய்துள்ளார். நாளுக்கு நாள் தமன்னாவின் அழகும், நடிப்பும் மெருகேறிக்கொண்டே வருகிறது! ‘பாகுபலி’யில் பார்த்த அதே அழகுடன் வரும் தமன்னாவை இப்படத்திலும் நன்றாக ரசிக்கலாம்! சந்தானத்தின் மனைவியாக வரும் பானுவின் தோற்றத்திலும், நடிப்பிலும் நிறைய வித்தியாசங்கள்! கீப் இட் அப் பானு! அசிஸ்டென்ட் கமிஷனராக கேமியோ கேர்கடரில் வந்து கலகலக்க வைக்கும் விஷால், ஆர்யாவை மணக்க துடிக்கும் வித்யூலேகா, ஆர்யா, சந்தானத்திற்கு உதவ வரும் கருணாகரன், ஆண்களுக்கு ஆதரவு குரல் கொடுக்கும் ஷகிலா ஆகியோரது பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.

பலம்

1. ஆங்காங்கே சிரிக்க வைக்கும் ஆர்யா சந்தானத்தின் காமெடி காட்சிகள்
2. தமன்னா

பலவீனம்

1. கதை, திரைக்கதையில் புதுமை இல்லாத்தது.
2. எளிதில் யூகிக்கக் கூடிய காட்சி அமைப்புகள்
3. இசை

மொத்தத்தில்…

கதை, லாஜிக் விஷயங்கள் பற்றி கவலைப்படாமல் ஓரளவுக்கு ஜாலியாக இருக்க நினைப்பவர்களுக்கு இந்த ‘VSOP’ கை கொடுக்கலாம்!

ஒரு வரி பஞ்ச் : ‘VSOP’ யில் காமெடியை சரியாக மிக்சிங் செய்யவில்லை!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;