வாலு - விமர்சனம்

சிம்பு ரசிகர்களுக்கு ‘வாலு’ சரவெடி... மற்றவர்களுக்கு புஷ்வாணம்!

விமர்சனம் 14-Aug-2015 2:54 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Vijay Chander
Starring : Silambarasan, Hansika Motwani, Santhanam, VTV Ganesh
Music : Thaman
Cinematography : Shakthi
Editing : T. S. Suresh
Production : NIC Arts

3 வருடங்களுக்குப் பிறகு வெளிவந்திருக்கும் சிம்பு படம். காத்திருப்புக்குத் தீனி போட்டிருக்கிறதா ‘வாலு’?

கதைக்களம்

சந்தானம், விடிவி கணேஷ் உள்ளிட்ட நண்பர்களுடன் வெட்டியாக ஊற்றிக் கொண்டிருக்கும் சிம்புவுக்கு ஹன்சிகாவைப் பார்த்ததும் காதல் மலர்கிறது. ஒன்றிரண்டு சந்திப்புகளுக்குப் பிறகு தன் காதலை அவரிடம் சொல்கிறார். ஆனால் அவரோ, தனக்கும் தன் மாமா பையனுக்கும் ஏற்கெனவே பேசி முடிக்கப்பட்டுள்ளது, இன்னும் 2 வருடத்தில் கல்யாணம் என்கிறார். ஹன்சிகா தன்னை காதலிப்பதற்கு இரண்டு வருடம் தேவையில்லை... 10 நாட்கள் போதும் என சந்தானத்திடம் சவால்விடும் சிம்பு களத்தில் குதிக்கிறார். 10 நாட்களில் தான் சொன்னதைச் செய்தாரா சிம்பு என்பதே ‘வாலு’.

படம் பற்றிய அலசல்

இந்தப் படம் இப்படித்தான் இருக்கும் என்பது உள்ளே படம் பார்க்க வரும் அத்தனை பேருக்கும் ஏற்கெனவே தெரிந்திருக்கும். அதைப்போலவே, கதை, திரைக்கதை, காட்சியமைப்புகள் என எல்லாமே அரதப் பழசாகவும், ஹீரோயிஸத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தும் உருவாக்கப்பட்டிருக்கிறது. 3 வருடங்களுக்குப் பிறகு தங்களின் ஹீரோவை திரையில் பார்க்கிறோம் என்பதால், முதல் கால்மணி நேர படத்தை சிம்பு ரசிகர்களின் உற்சாக கூச்சல்களுக்கிடையேதான் கண்டுகளிக்க வேண்டியிருக்கிறது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என சிம்பு ரசிகர்கள் அமர்க்களப்படுத்திவிட்டார்கள் சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி, தல ரசிகர்களுக்கும் படம் முழுக்க தீனி போட்டிருக்கிறார் இயக்குனர் விஜய் சந்தர்.

சிம்பு ரசிகர்களைத் தாண்டி படம் பார்க்க வரும் மற்றவர்களைப் பற்றி எந்த கவலையும்படாமல் படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள். அதனால்தானோ என்னவோ ரசிகர்களைத் தவிர்த்த மற்றவர்களுக்கு படத்தோடு பெரிதாக ஒன்ற முடியவில்லை. ஆங்காங்கே கொஞ்சம் சிரிப்பூட்டும் சந்தானத்தின் காமெடி, உற்சாகமூட்டும் பாடல்கள், சிம்புவின் ‘வாலு’த்தனம் ஆகியவையே படத்தை கொஞ்சம் காப்பாற்றியிருக்கின்றன. பின்னணி இசைக்கு பெரிதாக மெனக்கெடாமல் ஏற்கெனவே வெளிவந்த தமிழ்ப் படங்களின் இசையை எடுத்து ஆங்காங்கே தூவிவிட்டிருக்கிறார் தமன். ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் ஹீரோயிஸத்துக்கு பெரிதாக கைகொடுத்திருக்கிறது.

நடிகர்களின் பங்களிப்பு

தனது ரசிகர்களை 100% திருப்திப்படுத்தும் நோக்கத்தில் படம் முழுக்க அதகளப்படுத்தியிருக்கிறார் சிம்பு. பஞ்ச் டயலாக், ஸ்டைலிஷ் வாக், அடிதடி சண்டை, ரொமான்ஸ் என எல்லா ஏரியாக்களிலும் புகுந்து விளையாடி ‘ஹீரோயிஸம்’ காட்டியிருக்கிறார் சிம்பு. மற்றபடி நடிப்பதற்கெல்லாம் பெரிய வேலையில்லை இப்படத்தில். முந்தைய படங்களில் ஹன்சிகா என்ன செய்தாரோ அதையேதான் இப்படத்திலும் செய்திருக்கிறார். பாடல்களுக்கும், காதல் காட்சிகளுக்கும் மட்டும் பயன்பட்டிருக்கிறார். இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட காட்சிகள் என்பதால் கொஞ்சம் குண்டாகத் தெரிகிறார் ஹன்சிகா. வழக்கம்போல் சந்தானத்தின் காமெடி பஞ்ச்கள், விடிவி கணேஷின் அலம்பல்கள் படம் நகர்வதற்கு கைகொடுத்துள்ளது. அறிமுக வில்லன் ஆதித்யா, படம் முழுவதும் முறைத்துக் கொண்டே இருக்கிறார். சிம்புவுக்கும், அவருக்கும் மிகப்பெரிய க்ளைமேக்ஸ் ஃபைட் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்க, பேசியே வில்லனை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டார் சிம்பு.

பலம்

1. சிம்பு, சந்தானம், விடிவி கணேஷ்
2. பாடல்கள்

பலவீனம்

1. அரதப்பழசான கதை
2. யூகிக்கக்கூடிய காட்சியமைப்புகளுடன் கூடிய பலவீனமான திரைக்கதை

மொத்தத்தில்...

சிம்புவின் ஹீரோயிஸத்தையும், சந்தானத்தின் காமெடியை மட்டும் நம்பி வருபவர்களுக்கு இப்படம் ஓரளவு திருப்தியைத் தரலாம்.

ஒரு வரி பஞ்ச் : சிம்பு ரசிகர்களுக்கு ‘வாலு’ சரவெடி... மற்றவர்களுக்கு புஷ்வாணம்!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வாலு - லவ் என்றவன் பாடல் வீடியோ


;