‘10 எண்றதுக்குள்ள’ படத்தின் சுவாரஸ்யத் தகவல்கள்...

‘10 எண்றதுக்குள்ள’ படத்தின் சுவாரஸ்யத் தகவல்கள்...

கட்டுரை 13-Aug-2015 10:29 AM IST Chandru கருத்துக்கள்

‘ஐ’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ‘கோலிசோடா’ விஜய்மில்டனுடன் களமிறங்கியிருக்கிறார் விக்ரம். படத்தின் பெயர் ‘10 எண்றதுக்குள்ள’. விக்ரமின் ஜோடி சமந்தா. இசை டி.இமான். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும், ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்ஷனும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நேற்று இணையதளங்களில் வெளியாகி, ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படம் குறித்த சுவாரஸ்யத் தகவல்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

* சென்னையில் தொடங்கி நேபாளம் வரை ஜீப்பிலேயே இந்தியாவின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு ஹீரோ பயணிக்கும் ‘ரோடு டிராவல்’ கதைதான் ‘10 எண்றதுக்குள்ள’ படமாக உருவாகி வருகிறது.

* கல்லூரி நாட்களில் விஜய் மில்டன் இயக்கவிருந்த குறும்படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்கவிருந்தவர் நம்ம ‘கென்னி’தானாம். ஆனால் அந்த குறும்படம் முழுமையடையாமலேயே கைவிடப்பட்டுள்ளது.

* ‘சாமுராய்’ படத்தில் பணியாற்றியபோதுதான் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனுக்கும், விக்ரமுக்கும் இடையே நட்பு மலர்ந்துள்ளது.

* ‘கோலி சோடா’ படத்தை குடும்பத்தோடு பார்த்துவிட்டு, விஜய் மில்டனுக்கு வாழ்த்துச் சொன்ன கையோடு கதை இருந்தால் சொல்லும்படியும் கேட்டுள்ளார் விக்ரம். அதன்பிறகு உருவானதுதான் ‘10 எண்றதுக்குள்ள’.

* இப்படத்தில் விக்ரமின் கேரக்டர் பெயர் என்ன என்பது படத்தின் க்ளைமேக்ஸில்தான் தெரிய வருமாம். இதனால் படத்தில் தன் பெயரை யாராவது கேட்டால், ‘பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட்’ என்ற பாணியில், ‘கோஹ்லி... விராட் கோஹ்லி’, ‘ஹாசன்... கமல்ஹாசன்’ என விளையாட்டாக கூறிக்கொண்டே வருவாராம் விக்ரம்.

* நேபாளத்திலுள்ள பக்தாபூர் எனும் இடத்தில் இப்படத்திற்காக 24 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார்கள். படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பிய ஒருசில நாட்களிலேயே மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது. அதில் பக்தாபூரிலுள்ள முக்கியமான நினைவுச் சின்னங்கள், சுற்றுலாத்தளங்கள் பெருத்த சேதமடைந்துவிட்டன. அந்த இடங்களை ‘10 எணறதுக்குள்ள’ படத்தில் எந்த சேதமும் இல்லாமல் கண்டுகளிக்கலாமாம்.

* ராஜஸ்தான் மாநிலத்தின் புஷ்கர் எனுமிடத்தில் நடைபெற்ற உலகப் பிரசித்தி பெற்ற ஒட்டகச் சந்தை ஒன்றில், 22 ஆயிரம் ஒட்டகங்களுக்கு மத்தியில் விக்ரம், சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது காட்சிப்படி பர்ஸ் ஒன்றை விக்ரம் திருட, அவரை நிஜத் திருடன் என நினைத்து சிலர் மடக்கிவிட்டனராம். பின்னர் ஒரு வழியாக பேசி சமாளித்துத் திரும்பியிருக்கிறார்கள்.

* படம் முழுவதும் விக்ரமுடன் பயணிக்கும்படியான ஹீரோயின் வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறது சமந்தாவிற்கு. இருவருக்குள்ளும் காதல் இருந்தாலும், ‘ஐ லவ் யூ’ என கடைசிவரை சொல்லிக் கொள்ளவே மாட்டார்களாம். அதோடு இப்படத்தில் டூயட், குரூப் டான்ஸ், ஃபாரின் சாங் என எதுவுமே கிடையாதாம்.

* சமந்தா தவிர இப்படத்தில் இன்னொரு ஹீரோயினும் இருக்கிறார்... அவர் சார்மி. ஆனால், அவருக்கு இப்படத்தில் கெஸ்ட் ரோல்தான். அதேபோல் படத்தில் ஏகப்பட்ட வில்லன்களும், காமெடியன்களும் இருக்கிறார்கள். சென்னை, ஆந்திரா, மும்பை, ராஜஸ்தான், நேபாளம் என ஒவ்வொரு ஊராக பயணிக்கும்போதும் அந்தந்த ஊருக்குத் தகுந்தபடி ஆட்கள் மாறிக் கொண்டே இருப்பார்களாம். பசுபதி, ராகுல் தேவ், அபிமன்யூ சிங் ஆகியோர் படத்தின் முக்கிய வில்லன்கள்.

* அந்தந்த மாநிலத்தின் பாரம்பரிய இசைக்குத் தகுந்தபடி ஒவ்வொரு பாடலுக்கும் இசையமைத்திருக்கிறாராம் டி.இமான். இதனால் இப்படத்தின் பாடல்கள் பெரிய அளவில் வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறது படக்குழு.

* இன்று (13-8-2015) இப்படத்தின் டீஸர் வெளியாகிறது. பாடல்கள் விரைவில் வெளியிடப்படும். படத்தை ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 21ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;