விஜய், அஜித் ரசிகர்கள் இணைந்து கொண்டாட காத்திருக்கும் ‘வாலு’

விஜய், அஜித் ரசிகர்கள் இணைந்து கொண்டாட காத்திருக்கும் ‘வாலு’

கட்டுரை 12-Aug-2015 10:50 AM IST Chandru கருத்துக்கள்

எஸ்.எஸ்.சக்கரவர்த்தியின் ‘நிக் ஆர்ட்ஸ்’ நிறுவனம் தயாரிக்க, விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் ஆகியோர் நடித்திருக்கும் படம் ‘வாலு’. 2012ஆம் ஆண்டு இப்படத்திற்கு பூஜை போடப்பட்டு, அந்த வருட தீபாவளிக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பலதரப்பட்ட காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிக்கொண்டே வந்து, தற்போது 2015ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தனை தடைகளையும் தாண்டி வெளிவரவிருப்பதால் ‘வாலு’ படத்திற்கான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் எகிறிக் கிடக்கிறது.

இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட ரிலீஸ் தடைகள் மட்டுமின்றி இன்னும் சில சுவாரஸ்யமான காரணங்களும் இருக்கின்றன. இப்படத்தில் இணைந்து நடிக்க ஆரம்பித்த பிறகே சிம்பு, ஹன்சிகாவிற்கு இடையே காதல் மலர்ந்தது. படம் வெளிவருவதற்கு முன்பே இருவரும் சுமூகமாக பிரிந்தும்விட்டனர். இதுவும் இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலை ரசிகர்களுக்கு ஏற்படுத்த இன்னொரு காரணம். இதுமட்டுமின்றி நடிகர் அஜித்தின் தீவிர ரசிகரான சிம்பு ‘வாலு’ படத்தின் பாடல் ஒன்றில் எம்ஜிஆர், ரஜினிக்குப் பிறகு அஜித்தை குறிப்பிட்டு பாடல் ஒன்றை இயற்றியிருப்பதால் அஜித் ரசிகர்கள் மத்தியிலும் இப்படம் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்பாடலில் ‘தல’ அஜித்தின் ஃபேவரைட் கெட்அப்பான சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் தோன்றி அசத்தியிருக்கிறாராம் சிம்பு.

அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி தற்போது சிம்புவின் ‘வாலு’ படத்திற்கு விஜய் ரசிகர்களின் ஆதரவும் பெரிய அளவில் கூடியிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ‘வாலு’ படம் ரிலீஸ் ஆவதற்கு தன்னால் முடிந்த உதவிகளை நடிகர் விஜய் செய்திருப்பதுதான். தவிர, ‘புலி’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சிம்புவின் அப்பாவான டி.ஆர். ‘இளையதளபதி’ விஜய்யைப் புகழ்ந்து தள்ளிவிட்டார். அதோடு நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலும் ‘நான் விஜய்யின் ரசிகன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் டி.ஆர். இதனால் சிம்பு படத்திற்கு தங்களது முழு ஆதரவை வழங்க தயாராகி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.

‘வாலு’வின் டீஸர், டிரைலகர்கள் இப்படத்தை ஒரு முழுநீள ஆக்ஷன் படம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பஞ்ச் டயலாக்கும், அதிரடி சண்டைக்காட்சிகளும் டிரைலரில் நிறைந்திருப்பதால் இப்படம் சிம்பு ரசிகர்களுக்கு மட்டுமே பிடிக்கும் என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், உண்மையில் இப்படத்தில் அழகான காதலும், கண்கலங்க வைக்கும் சென்டிமென்ட்டும் நிறையவே இருக்கிறதாம். இதனால் இப்படம் பெண்களையும் அதிகம் கவரும் என்கிறார்கள் ‘வாலு’ படக்குழுவைச் சேர்ந்தவர்கள்.

தமன் இசையில் உருவாகி வெளிவந்திருக்கும் ‘வாலு’ படத்தில் பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டாகி உள்ளன. தவிர அனிருத், ஸ்ருதிஹாசன், டிஆர், சிம்பு ஆகியோரின் குரல்களிலும் உருவான பாடல்கள் இப்படத்தில் இருப்பதால் பாடல்கள் ரசிகர்களுக்கு பெரிய விருந்தளிக்கலாம்.

மொத்தம் 2 மணி நேரம் 34 நிமிடங்கள் ஓடும் இப்படத்திற்கு சென்சாரில் ‘யு’ சான்றிதழ் கிடைத்திருப்பதோடு, வரிச்சலுகையும் கிடைத்திருப்பதால் கூடுதல் சந்தோஷத்திலிருக்கிறது ‘வாலு’ படக்குழு. கடைசி நேரத்தில் களமிறங்கினாலும் ‘வாலு’ படத்திற்கு தமிழகத்தில் 300க்கும் அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. உலகளவில் இப்படம் 700க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கான முன்பதிவு நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது. படத்தின் மீதிருக்கும் எதிர்பார்ப்பால் பெரும்பாலான மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட்டுகள் வேகவேகமாக முன்பதிவு ஆகி வருகின்றன.

இப்படத்துடன் வெளியாகும் இன்னொரு படமான ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்திலும் சந்தானம் நடித்திருப்பதால் இரண்டு படங்களையுமே ரொம்பவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் ஹீரோ சந்தானம். ‘வாலு’ படத்தின் இயக்குனர் விஜய்சந்தருக்கு இது அறிமுக படமென்பதால் அவரும் இப்படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

பல தடைகளைத் தாண்டி வெளிவரவிருக்கும் ‘வாலு’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற ‘டாப் 10 சினிமா’ தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அச்சம் என்பது மடமையடா - தள்ளி போகாதே பாடல் வீடியோ


;