ஸ்ரீமந்த்துடு (செல்வந்தன்) - விமர்சனம்

மகேஷ்பாபுவிற்காக கண்டிப்பாக தியேட்டருக்குச் சென்று ரசிக்கலாம்!

விமர்சனம் 8-Aug-2015 11:07 AM IST Top 10 கருத்துக்கள்

தெலுங்கில் ரிலீஸாகும் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள், ரொம்பவும் அரிதாகத்தான் அதேநாளில் இங்கு தமிழில் ‘டப்’ செய்யப்பட்டு வெளியாகும். அப்படி ஒரு படம் தற்போது தமிழில் வெளியாகியிருக்கிறது. கொரட்டல சிவா இயக்கத்தில், மகேஷ்பாபு, ஸ்ருதிஹாசன் நடித்திருக்கும் தெலுங்குப்படமான ‘ஸ்ரீமந்த்துடு’ இங்கே தமிழில் ‘செல்வந்தன்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. எப்படியிருக்கிறது ஸ்ரீமந்த்துடு?

மிகப்பெரிய தொழிலதிபர் ஜெகபதி பாபுவின் மகனான மகேஷ்பாபு ரொம்பவும் எளிமையானவர். கம்பெனி பொறுப்புகளையும், பணத்தையும் விரும்புவதைவிட வேலையாட்களையும், உதவி செய்வதையுமே விரும்புவர். ஒரு திடீர் சந்திப்பில் ஸ்ருதிஹாசனை சந்திக்கும் மகேஷ்பாபு, அவர்மீது காதல் கொள்கிறார். அவர் படிக்கும் அதே கல்லூரியில் சேர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக ஸ்ருதிக்கு நெருக்கமாகிறார். ஸ்ருதிக்கும் அவர் மேல் காதல் வரும் சமயத்தில், மகேஷ்பாபு மிகப்பெரிய பணக்காரர் என்பது தெரிந்ததும் விலகிச் செல்கிறார். ஸ்ருதியிடம் தன் காதலைச் சொல்லி, தன்னைவிட்டு விலகிச் செல்வதற்கான காரணத்தை கேட்கிறார் மகேஷ்பாபு. ‘‘அடிப்படை வசதியே இல்லாத ஒரு குக்கிராமத்தில் பிறந்த எனக்கும், மிகப்பெரிய பணக்காரரான உனக்கும் கண்டிப்பாக பொருந்தாது. என் கிராமத்தை மாற்றியமைப்பதற்குத்தான் நான் இந்த ‘ரூரல் டெவலப்மென்ட்’ படிப்பையே படித்துக்கொண்டிருக்கிறேன்!’’ என்று சொல்கிறார்.

மேற்கொண்டு ஸ்ருதியிடம் எதுவும் பேசாத மகேஷ்பாபு, தன் வீட்டைவிட்டு ஸ்ருதியின் கிராமத்தை நோக்கி சைக்கிளில் பயணிக்கிறார். அதன் பிறகு மகேஷ்பாபு என்ன செய்தார் என்பதே இந்த ‘ஸ்ரீமந்த்துடு’வின் மையக்கதை.

இதுவும் வழக்கமான ஒரு ஹீரோ பில்டப் தெலுங்கு சினிமாதான். ஆனால், வழக்கமான மசாலா படமாக இல்லாமல் ஹீரோவுக்கான பில்டப் காட்சிகளை பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார்கள். குறிப்பாக இப்படத்தில் மகேஷ்பாபுவின் ஸ்கிரீன் பிரசென்ஸ் பட்டையைக் கிளப்பியுள்ளது. அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும்படியும், மாஸாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வசனமும் கவனமாகவும், ஷார்ப்பாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஹீரோ எப்போது சண்டை போடுவார் என ஒவ்வொரு ரசிகர்களையும் ஏங்க வைத்து, சண்டையைக் காட்டியிருக்கிறார்கள். நிச்சயம் இப்படம் மகேஷ்பாபுவின் ரசிகர்களுக்கு செமத்தியான விருந்துதான்.

முதல்பாதியில் மகேஷ்பாபு யார்?, அவர் எப்படிப்பட்டவர்?, அவருக்கும் ஸ்ருதிருக்கமான காதல், தன் அப்பாவின் தொழில் எதிரிகளை மகேஷ்பாபு எப்படி முடக்குகிறார் என்பன போன்ற விஷயங்களோடு விறுவிறுப்பாக உருவாக்கியிருக்கிறார்கள். இரண்டாம்பாதி கொஞ்சம் ஸ்லோவாகவும், நீண்ட நேரம் பயணிப்பதாகவும் இருக்கிறது. ஆனாலும் இடையிடையே சண்டை, குத்துப்பாட்டு என படம் போரடிக்காமல் நகர்வதற்குத் தேவையான விஷயங்களை சரியான விகிதத்தில் கையாண்டிருக்கிறார்கள்.

ஆக்ஷன், ரொமான்ஸ், சின்ன சின்ன காமெடி, பஞ்ச் டயலாக் என படம் முழுக்க அதகளம் பண்ணியிருக்கிறார் மகேஷ்பாபு. குறிப்பாக படத்தின் முதல்பாதியில் திருமண விருந்து ஒன்றில் தன்னை அடிக்க வரும் வில்லன்களை யாருக்கும் தெரியாமல் விருந்து நடக்கும் இடத்திலேயே வைத்து போட்டுத்தள்ளும் காட்சியில் தியேட்டர் அதிர்கிறது. அதேபோல் ஸ்ருதிக்கும், மகேஷ்பாபுவுக்கும் மலரும் காதலையும் அற்புதமாக படமாக்கியிருக்கிறார் கொரட்டல சிவா. வெறும் கிளாமர் கேர்ளாக சுற்றிவராமல், நடிப்பதற்கு ஸ்கேப் உள்ள கேரக்டர் கிடைத்திருக்கிறது ஸ்ருதிக்கு. ஆனால், அதையும்மீறி பாடல்களில் ஸ்ருதியின் அட்டகாசமான நடனமும், உடைகளும் ரசிகர்களை கவர்ந்திழுக்கின்றன. சம்பத் ராஜ், முகேஷ் ரிஷி வில்லன்களாக மிரட்டியிருக்கிறார்கள். ஸ்ருதியின் அப்பா கேரக்டரில் அப்பாவியாக நடித்து கண்கலங்க வைத்திருக்கிறார் ராஜேந்திர பிரசாத். மில்லியனர் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்திப்போகிறார் ஜெகபதி பாபு. மகேஷ்பாபுவின் அம்மாவாக சுகன்யாவிற்கு ரொம்பவும் சின்ன வேடம்தான். ராகுல் ரவீந்திருக்கும் சிறிய கேரக்டரே கொடுக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவாளர் மதியின் அற்புதமான படப்பிடிப்பு. காட்சிக்கு காட்சி மகேஷ்பாபுவை அவர் காட்டியிருக்கும் விதம் அத்தனை அருமையாக இருக்கிறது. சண்டை, பாடல்கள், பில்டப் காட்சிகள் என எல்லா இடங்களிலும் தன் கேமரா கோணங்களால் ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார். ஒவ்வொரு சண்டைக்காட்சியிலும் படபட்பை எகிற வைத்திருக்கிறார் அனல் அரசு. பாடல்கள் வழக்கமான தெலுங்கு ஹிட் ரகம். பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார் டிஎஸ்பி. இரண்டாம்பாதியில் எடிட்டர் கொஞ்சம் கத்தரி வைத்திருக்கலாம். அதேபோல் க்ளைமேக்ஸும் சாதாரணமாகவே இருக்கிறது.

மொத்தத்தில்... இப்படத்தின் கதை இதுதான் என்பது முதலிலேயே தெரிந்துவிடுகிறது. அதேபோல் அடுத்தடுத்து காட்சிகள் இப்படித்தான் நகரும் என்பதையும் எளிதில் யூகித்துவிடலாம். ஆனால், அதை படமாக்கிய விதமும், உருவாக்கப்பட்ட காட்சிகளும்தான் ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் தந்திருக்கிறது. ஒரு சூப்பர்ஸ்டாராக தன் ரசிகர்களுக்கு ‘ஃபுல் மீல்’ விருந்து படைத்திருக்கிறார் மகேஷ்பாபு. ஆக்ஷன், ரொமான்ஸ், ஹ்யூமர் என எல்லாவிஷயங்களும் கலந்திருப்பதால் ஃபேமிலி ஆடியன்ஸுக்கும் இப்படம் பிடிக்க வாய்ப்பிருக்கிறது. இரண்டாம்பாதியின் திரைக்கதையில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம் என்பதைத் தவிர பெரிய குறையொன்றுமில்லை.

ஆனாலும் மகேஷ்பாபுவிற்காக கண்டிப்பாக தியேட்டருக்குச் சென்று ரசிக்கலாம் இந்த ‘ஸ்ரீமந்த்துடு’வை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்பைடர் - டிரைலர்


;