சண்டிவீரன் - விமர்சனம்

எடுத்துக்கொண்ட ‘கதைக்கரு’விற்காக மட்டும் பாராட்டலாம்!

விமர்சனம் 7-Aug-2015 5:10 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : A. Sarkunam
Production : B Studios
Starring : Atharvaa, Anandhi
Music : S. N. Arunagiri
Cinematography : P. G. Muthiah

இதுவரை 4 படங்களில் நடித்துவிட்டார் அதர்வா. ஆனாலும் ‘பரதேசி’யைத் தவிர மற்ற படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. குறிப்பாக பாக்ஸ் ஆபிஸில் எந்தப்படமும் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. தனது 5வது படத்தில் கிராமத்துப் பின்னணியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் அதர்வா. ‘சண்டிவீரன்’ அதர்வாவுக்கு கை கொடுப்பானா?

கதைக்களம்

சிங்கப்பூரில் சம்பாதித்த பணத்தை வைத்து சொந்த ஊரில் தொழில் செய்து பிழைத்துக்கொள்ள வருகிறார் அதர்வா. அங்கே, மில் அதிபர் லாலின் மகளான ஆனந்தியை காதலிக்கிறார். சொந்த தொழில் தொடங்கும் நேரத்தில் தன் பக்கத்து ஊர் நண்பனின் வீட்டிற்கு செல்லும்போது, அந்த ஊரே குடிதண்ணீர் கிடைக்காமல் உப்புத்தண்ணீரில் வாழ்க்கை நடத்தும் அவலத்தைப் பார்க்கிறார். இரண்டு ஊருக்கும் பொதுவான குளம் ஒன்றை ஒவ்வொரு வருடமும் ஏலம் எடுக்கும் லால், அதை பக்கத்து ஊர்க்காரர்கள் குடிப்பதற்கு பயன்படாதபடி அசுத்தம் செய்து வீம்பு செய்வதை தெரிந்து கொள்கிறார் அதர்வா. இதனால் அதர்வா தன் பணத்தை வைத்து குளத்தை ஏலத்தில் எடுக்க முயல்கிறார். இதில் லாலுக்கும், அதர்வாவுக்கும் மோதல் ஏற்படுகிறது. அதோடு அதர்வாவும், ஆன்ந்தியும் காதலிப்பதையும் தெரிந்து கொதிக்கிறார் லால். இந்நிலையில், திடீரென்று நடக்கும் சம்பவம் ஒன்றால் இரண்டு ஊருக்கும் கலவரம் ஏற்படுகிறது. இந்த கலவரத்தைப் பயன்படுத்தி அதர்வாவை தீர்த்துக்கட்ட திட்டம் போடுகிறார் லால். இதன் பிறகு நடக்கும் சம்பவங்களே ‘சண்டிவீரன்’.

படம் பற்றிய அலசல்

‘களவாணி’, ‘வாகை சூட வா’ படங்கள் மூலம் கிராமத்து நேட்டிவிட்டியை கண்முன் நிறுத்திய இயக்குனர் சற்குணம் இந்த ‘சண்டிவீரன்’ மூலம் மீண்டும் கிராமத்து கதையில் களமிறங்கியிருக்கிறார். இப்படத்திலும் கிராமத்து மனிதர்களின் வீம்பு, காதல், அடிதடி, வெட்டுக்குத்து ஆகியவற்றை சிறப்பாகவே படமாக்கியிருக்கிறார். ஆனால், தண்ணீர் கிடைக்காமல் தத்தளிக்கும் ஒரு கிராமத்தின் வலியை தன் கதை மூலம் ரசிகர்களுக்கு கொண்டு செல்ல அவர் எடுத்திருக்கும் முயற்சியில் பாதி வெற்றியைத்தான் அவரால் பெற முடிந்திருக்கிறது.

சமூக கருத்தோடு கூடிய ஒரு நல்ல ‘கரு’வை கையிலெடுத்த இயக்குனர், அதன் அழுத்தத்தை திரைக்கதை மூலம் முழுமையாக ரசிகர்களுக்கு கொண்டு செல்லத் தவறியிருக்கிறார். குறிப்பாக படத்தின் இரண்டாம்பாதியில் கதை அங்கேயும், இங்கேயும் அலைபாய்கிறது. தண்ணீருக்காகப் போராடும் ஒரு ஹீரோவின் முழுமையான உணர்ச்சிகளை காட்சிகளின் மூலம் வெளிக்காட்டத் தவறிவிட்டார் இயக்குனர். பாடல்கள் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் படத்தோடு ஒன்றவில்லை. குறிப்பாக ஊரே பரபரப்பில் இருக்கும் நேரத்தில் ஹீரோவும், ஹீரோயினும் டூயட் பாடுவது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. டெக்னிக்கலாக இப்படம் ஓகே ரகம்தான்.

நடிகர்களின் பங்களிப்பு

கிராமத்துப் பையன் வேடத்திற்கு அதர்வா கொஞ்சம் பொருந்திப்போகவில்லை என்றாலும், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சின்ன சின்ன காமெடி, ரொமான்ஸ், ஆக்ஷன் என எல்லா ஏரியாக்களிலும் அதர்வாவுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஆனாலும் ஹீரோவுக்கான ஒரு முழுமையான படமாக இப்படம் அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ‘களவாணி’ ஓவியாவை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் ஆனந்தி. பக்கத்து வீட்டு கிராமத்துப் பெண் போல பாவடை தாவணியில் அழகாக இருக்கிறார். கிடைத்த கேரக்டரில் நன்றாக நடித்திருக்கிறார். அதகள வில்லனாக அறிமுகமாகி கடைசியில் காமெடி பீஸாக்கப்பட்டிருக்கிறார் நடிகர் லால். இந்த மூவரைத் தவிர வேறு யாருக்கும் சொல்லிக்கொள்ளும்படியான கதாபாத்திரங்கள் கொடுக்கப்படவில்லை.

பலம்

1. கதைக்கரு
2. சுவாரஸ்யமான முதல்பாதி

பலவீனம்

1. இரண்டாம்பாதி திரைக்கதை

மொத்தத்தில்...

எடுத்துக்கொண்ட கதையை இன்னும் கொஞ்சம் சீரியஸாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருந்தால் ஒரு முழுப்படமாக திருப்தியளித்திருப்பான் இந்த ‘சண்டிவீரன்’.

ஒரு வரி பஞ்ச் : எடுத்துக்கொண்ட ‘கதைக்கரு’விற்காக மட்டும் பாராட்டலாம்!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டோரா - டீசர்


;