மிஷன் இம்பாஸிபிள் 5 : ரோக் நேஷன் - விமர்சனம்

5ஆம் பாகத்திலும் டாம் க்ரூஸ் ரசிகர்களை ஏமாற்றவில்லை!

விமர்சனம் 6-Aug-2015 4:30 PM IST Top 10 கருத்துக்கள்

ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்குப் பிறகு அதேபோன்ற சாகஸ காட்சிகளுக்கும், சண்டைக்காட்சிகளுக்கும் பெயர்போன படம் ‘மிஷன் இம்பாஸிபிள்’ (Mission: Impossible). ஹாலிவுட்டின் மேன்ஸம் ஹீரோ டாம் க்ரூஸ் (Tom Cruise) நாயகனாக நடிக்க, இதுவரை இப்படத்தின் 4 பாகங்கள் வெளிவந்திருக்கின்றன. கடைசியாக வெளிவந்த ‘கோஸ்ட் புரோட்டோகால்’ (Mission : Impossible - Ghost Protocol) படத்தின் சில காட்சிகள் இந்தியாவிலும் எடுக்கப்பட்டிந்தன. அதோடு ஒரு சிறிய வேடத்தில் பாலிவுட் ஹீரோ அனில் கபூரும் நடித்திருந்தார். இதனால் கடந்த 4ஆம் பாகத்திற்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் 5ஆம் பாகம் ‘மிஷன் : இம்பாஸிபிள் - ரோக் நேஷன்’ (Mission: Impossible - Rogue Nation) இன்று இந்தியாவில் வெளியாகியிருக்கிறது. தமிழில் இப்படம் ‘முரட்டு தேசம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது. கடந்த 4 பாகங்களைப் போலவே இப்படமும் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறதா?

மிஷன் இம்பாஸிபிள் சீரிஸின் கதைகள் பெரும்பாலும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்டவையாக இருக்கும். உலகை அச்சுறுத்தும் பயங்கரவாதிகளிடமிருந்து மக்களைக் காப்பதற்காக அரசு சாராமல் தன்னிச்சையாக இயங்கும் நிறுவனம் ‘IMF’ (Impossible Mission Force). அதாவது முடியாத காரியங்களை சாதிக்கும் சக்தி. இந்த நிறுவனத்தின் முக்கிய உளவாளி ஈத்தன் ஹன்ட் (Ethan Hunt - டாம் க்ரூஸ்). பயங்கரவாதிகளிடமிருந்து தகவல்களைத் திருடி வருவதில் வல்லவர். எப்படிப்பட்ட ஆபத்தான இடமாக இருந்தாலும் அதற்குள் புகுந்து காரியத்தை சாதித்து விடுவார்.

இப்படிப்பட்ட IMF நிறுவனத்தை முடக்கவும், உளவாளி ஈத்தன் ஹன்ட்டை அழிக்கவும் ஒரு சில நாடுகள் ஒன்று சேர்ந்து ‘சின்டிகேட்’ என்ற தீவிரவாத அமைப்பை உருவாக்குகின்றன. சின்டிகேட்டின் முதல் திட்டமாக ஈத்தன் ஹன்ட்டை நாசவேலையில் ஒன்றில் சிக்க வைத்து, அவரை அரசுக்கு எதிரான ஆளாக மாற்றுகிறார்கள். இதனால் ‘IMF’ஐ தடை செய்வதோடு, ஈத்தன் ஹன்ட்டையும் கைது செய்ய உத்தரவிடுகிறது அமெரிக்க அரசு. அதேநேரம் ‘சின்டிகேட்’ பயங்கரவாதிகளிடமும் வசமாக சிக்கிக் கொள்கிறார் ஈத்தன். இந்த இக்கட்டான சூழ்நிலையில், அவர்களிடமிருந்து ஈத்தன் எப்படி தப்பிக்கிறார்? தன்மீது சுமத்தப்பட்ட வீண்பழியை எவ்வாறு துடைக்கிறார்? IMF மீதான தடையை எப்படி உடைக்கிறார்? என்பதே இந்த 5ஆம் பாகத்தின் கதை.

ரன்வேயில் ஓடிக்கொண்டிருக்கும் விமானத்தின் கதவில் டாம் க்ரூஸ் தொங்கியபடி பறக்கும் சாகஸத்துடன் ஆரம்பிக்கிறது இப்படம். இந்தக்காட்சியில் டூப் போடாமல், கிராபிக்ஸ் இல்லாமல் ரிஸ்க் எடுத்து டாம் க்ரூஸ் நடித்த வீடியோ ஏற்கெனவே இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததால், இந்தக் காட்சிக்கு திரையில் தோன்றியதும் தியேட்டர் அதிர்ந்தது.

இதற்கு முந்தைய பாகங்களை ஒப்பிடுகையில் இந்த 5ஆம் பாகத்தில் சண்டைக்காட்சிகளும், சாகஸங்களும் கொஞ்சம் குறைவுதான். ஆனால், படம் முழுவதும் ஒரு ‘த்ரில்லிங்’ உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது இயக்குனர் கிறிஸ்டோபர் மெக்யூரியின் திரைக்கதை. ஆனாலும் கிடைத்த சின்னச் சின்ன இடங்களிலும் ஆக்ஷனில் அசத்தியிருக்கிறார் டாம் க்ரூஸ். குறிப்பாக தண்ணீருக்கடியில் அவர் செய்யும் சாகஸக் காட்சியைச் சொல்லலாம். அதேபோல் வில்லன்களுடன் சண்டையிடும் பைக் சேசிங் காட்சிகளும் அட்டகாசம். இப்படத்தின் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் குறைவான அளவே கிராபிக்ஸை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதுதான். இதனால் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஆக்ஷன் காட்சிகளில் படபடப்பு எகிறுகிறது.

டாம் க்ரூஸுக்கு இணையாக இப்படத்தில் கலக்கியிருக்கிறார் நடிகை ரெபெக்கா பெர்குஸன் (Rebecca Ferguson). பைக் ஓட்டுவது, ஹீரோவை வில்லன்களிடமிருந்து காப்பாற்றுவது, கடைசியில் ஹீரோவையே ஏமாற்றிவிட்டு பறந்து செல்வது என படம் முழுக்க அதகளம் செய்திருக்கிறார். வில்லன் ஒருவருடன் சிறிய கத்தியை வைத்துக் கொண்டு ரெபெக்கா போடும் சண்டைக்காட்சி பரபர ரகம். இவர்களைத் தவிர படத்தில் நடித்திருக்கும் மற்ற நட்சத்திரங்களும் அவரவர்கள் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். அதில் வில்லனாக நடித்திருக்கும் Sean Harris ஹைலைட். நம்மூர் ரகுவரன்போல் அமைதியாக இருந்தே அனைத்து காரியத்தையும் சாதித்துவிடுகிறார்.

ஆரம்பத்தில் வில்லன் தன்னை சிறைபடுத்தியதைப்போலவே க்ளைமேக்ஸில் அவனையும் டாம் க்ரூஸ் மடக்கும் காட்சி, ஹீரோயிஸமாக இருந்தாலும் ரசிக்க முடிகிறது. அதிலும் ‘மிஷன் இம்பாஸிபிள்’ தீம் மியூசிக்கோடு அந்தக் காட்சியைப் பார்க்கும்போது நம் உடம்பு சிலிர்க்கிறது.

முந்தைய படங்களைவிட ஆக்ஷன் குறைவாக இருந்தாலும், ஒரு முழுப்படமாக நம்மை திருப்தியாகவே அனுப்பி வைக்கிறது. ‘காட்சிக் காட்சி சண்டையும், சாகஸங்களும் வேண்டும்’ என நினைப்பவர்களுக்கு இப்படம் கொஞ்சம் சோர்வை ஏற்படுத்தலாம். ஏனென்றால் கதைக்கு முக்கியமானதாக இருக்கும் சில காட்சிகள் வெறும் பேச்சுகளிலேயே நகர்கிறது என்பதால்.

மொத்தத்தில்.... இந்த 5ஆம் பாகத்திலும் டாம் க்ரூஸ் ரசிகர்களை ஏமாற்றவில்லை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;