யட்சன் - இசை விமர்சனம்

யட்சன் - இசை விமர்சனம்

இசை விமர்சனம் 5-Aug-2015 11:49 AM IST Chandru கருத்துக்கள்

கௌதம்மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ், மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் என தமிழ் சினிமாவில் இசை மூலம் மேஜிக் நிகழ்த்தும் கூட்டணிகளில் விஷ்ணுவர்தன் - யுவன் ஷங்கர் ராஜாவும் ஒன்று. இந்த கூட்டணி மூலம் இதுவரை 7 ஆல்பங்கள் வெளிவந்து, அத்தனையும் ஹிட்டாகியுள்ளன. 8வதாக வெளிவந்திருக்கிறது ‘யட்சன்’. ஆர்யா, கிருஷ்ணா இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் பாடல்களும் ‘ஹிட்’ வரிசையில் இடம்பிடித்திருக்கின்றனவா? (அனைத்துப்பாடல்களையும் எழுதியிருப்பவர் பா.விஜய்).

பரபர...
பாடியவர்கள் : ரஞ்சித், விஜய் யேசுதாஸ்


ஆல்பத்தின் முதல் பாடலே ஃபிரஷ்ஷாகவும், எனர்ஜியாகவும் ஆரம்பிக்கிறது. யுவனின் அதிரடி இசைக்கு ரஞ்சித், விஜய்யின் குரல்கள் ஈடுகொடுத்து பரபரத்துள்ளன. பாடலின் ஆரம்பத்தில் ஒலிக்கும் சிறப்பு சப்தம் ஒன்றை பாடல் முழுவதும் பின்னணியில் படரவிட்டிருப்பது வித்தியாசமாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. நிச்சயம் ஹிட்டாகக்கூடிய வாய்ப்புள்ள ஜாலிப் பாடல்.

கொஞ்சலாய்...
பாடியவர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, தன்வி ஷா


விஷ்ணுவர்தன் படங்களில் எப்போதுமே யுவன் பாடும் பாடல் ரொம்பவும் ஸ்பெஷல். இந்த ‘கொஞ்சலாய்...’ பாடலும் மீண்டும் மீண்டும் என்னனக்கேள் என்கிறது நம் காதுகளை கெஞ்சலாய். பாடலின் நடுவே தன்வி ஷாவின் குரல் வந்து தாலாட்டுகிறது. கிடாரின் வித்தியாசமான இசையுடன் பயணிக்கும் இப்பாடலை ‘ஹெட்போனில்’ கேட்பது கூடுதல் சுகம். கொஞ்சலாய், ஊஞ்சலாய், மஞ்சலாய் என எதுகை மோனையில் பாடல் முழுவதும் வரிகளில் ரகளை செய்திருக்கிறார் பா.விஜய். இந்த வருடத்தின் ஹிட் பாடல்களில் நிச்சயம் இப்பாடலுக்கு இடம் உண்டு.

காக்கா பொண்ணு...
பாடியவர்கள் : ஆண்டனி தாசன், ப்ரியதர்ஷினி, யுவன் ஷங்கர் ராஜா


ஹிப் ஹாப்பையும், லோக்கல் குத்தையும் சூப்பராக மிக்ஸ் செய்து வித்தியாசமான பாடல் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் யுவன். குத்துக்கு கானா வரிகள், ஹிப் ஹாப்பிற்கு ஸ்டைலிஷ் இங்கிலீஷ் வரிகள் என பா.விஜய்யை செமத்தியாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன். இப்பாடலுக்கு தியேட்டரில் ரசிகர்கள் ஆட்டம் போடப்போவது உறுதி. ஜாலி மூடில் கார் பயணத்தின்போது கேட்டால் உற்சாகம் ஊற்றெடுக்கும். பாடியவர்கள் அனைவருமே அசத்தியிருக்கிறார்கள்.

இன்னும் என்ன...
பாடியவர் : யுவன் ஷங்கர் ராஜா


அக்மார்க் யுவன் ஸ்டைல் பாடல். பாடியிருப்பதும் யுவனேதான். அவரது குரலில் ஏற்கெனவே நாம் கேட்ட பல பாடல்களை இப்பாடல் ஞாபகப்படுத்தினாலும் பியானோ, கிடார், டிரம்ஸ் ஆகியவற்றின் வழியே உணர்ச்சிகரமான இசையை பாடல் முழுவதும் யுவன் படரவிட்டிருப்பது இப்பாடலை சட்டென்று பிடித்துப்போக காரணமாகிறது. தன் தனித்துவமான குரல் மூலம் இந்த ஜாஸ் ஸ்டைல் சோலா பாடலில் ரசிகர்களை மயக்குகிறார் யுவன்.

சாம்பியன்...
பாடியவர்கள் : ரேபிட் மேக், ஷீஸாய் (சைக்கோ யூனிட்)


வெஸ்டர்ன் ஸ்டைல் அதிரடிப் பாடல். ‘சைக்கோ யூனிட்’டுடன் இணைந்து அதகளம் பண்ணியிருக்கிறார் யுவன். 2 நிமிடம் 50 வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த ராக் பாடல், ‘பப்’களில் இனி அதிகமாக ஒலிக்கும் பாடலாக இடம்பிடிக்கும். ஆல்பத்தின் கடைசிப் பாடலையும் அசத்தலாக கொடுத்திருக்கிறார்கள்.

மொத்தத்தில்.... விஷ்ணு - யுவன் கூட்டணி ‘யட்சன்’ மூலம் மீண்டும் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் ஆல்பத்தைத் தந்திருக்கிறார்கள். யுவன் ரசிகர்களுக்கு இந்த ஆல்பம் நிச்சயம் ஜாக்பாட்தான். யட்சன் மூலம் ‘ஐயம் பேக்’ என சொல்லாமல் சொல்லியிருக்கிறார் யுவன்!

ஒரு வரி பஞ்ச் : யட்சன் - கச்சிதம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பறந்து செல்ல வா - டிரைலர்


;