புலி - இசை விமர்சனம்

புலி - இசை விமர்சனம்

இசை விமர்சனம் 4-Aug-2015 11:20 AM IST Chandru கருத்துக்கள்

சச்சின், வில்லு படங்களைத் தொடர்ந்து மீண்டும் ‘புலி’ மூலம் இணைந்திருக்கிறது விஜய் - டிஎஸ்பி கூட்டணி. சிம்புதேவனின் இயக்கத்தில் மிகப்பிரம்மாண்டமாய் தயாராகி வரும் இப்படத்தின் பாடல்கள் எப்படி இருக்கின்றன? (அனைத்துப் பாடல்களையுமே வைரமுத்து எழுதியுள்ளார்)

ஏன்டி ஏன்டி...
பாடியவர்கள் : விஜய், ஸ்ருதிஹாசன்


ஏற்கெனவே மேக்கிங் வீடியோவாக வெளிவந்து பிரபலமடைந்துள்ள இப்பாடலின் பெரிய பலமே விஜய், ஸ்ருதிஹாசனின் மேஜிக் குரல்கள்தான். ‘கண்டாங்கி கண்டாங்கி’ பாடலை லேசாக ஞாபகப்படுத்தும் இந்த மெலடிப் பாடல் நிச்சயமாக இந்த வருடத்தின் ‘டாப் 10’ பாடல்களில் ஒன்றாக இடம்பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அழகான கிடார் இசையுடன் துவங்கும் இப்பாடல் முழுவதும் இசையால் மாயம் செய்திருக்கிறார் டிஎஸ்பி. வைரமுத்துவின் அழகான தமிழ் வரிகள் பாடலை மேலும் சுவாரஸ்மாக்குகின்றன.

சொட்டவால...
பாடியவர்கள் : சங்கர் மகாதேவன், எம்.எம்.மான்சி


கடம், தவில், நாதஸ்வரம் என நாட்டுப்புற இசைக் கருவிகள் மூலம் ரசிகர்களை தாளம் போட வைக்க வேண்டும் என்ற முடிவுடன் இந்த ‘சொட்டவால...’ பாடலை உருவாக்கியிருக்கிறார் டிஎஸ்பி. ஆனால், சரணத்திலிருக்கும் துள்ளலும், சுவாரஸ்யமும் பல்லவியில் கொஞ்சம் குறைகிறது. விஜய்யின் ஜாலியான நடனத்தோடு இப்பாடலைப் பார்ப்பது கூடுதல் சந்தோஷத்தைத் தரலாம்.

மன்னவனே மன்னவனே...
பாடியவர்கள் : சூரஜ் சந்தோஷ், எம்எல்ஆர் கார்த்திகேயன், சின்மயி, அனிதா


அரண்மனை செட்டில் மிகப்பிரம்மாண்டமாய் உருவாக்கப்பட்டிருக்கும் இப்பாடலுக்கான இசையையும் கொஞ்சம் பிரம்மாண்டமாய் உருவாக்கியிருக்கிறார் டிஎஸ்பி. உடை, அலங்காரம், நடனம் என இப்பாடலில் மிகப்பெரிய விஷுவல் விருந்து காத்திருக்கிறது என்பது பாடலைக் கேட்கும்போதே தெரிகிறது. வைரமுத்துவின் வரிகளை நான்கு பேர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.

ஜிங்கிலியே....
பாடியவர்கள் ; ஜாவேத் அலி, பூஜா ஏ.வி.


காட்டுவாசிகளின் பாரம்பரிய இசையில் ஒலிக்கிறது இந்த ‘ஜிங்கிலியே...’. அதிரடிக்கும் டிரம்ஸ், வித்தியாசமான ஊது ஒலிகள் என ஜாலியாக பயணிக்கும் இப்பாடலில் இடையிடையே சிறப்பு சப்தங்களும் வந்துபோகின்றன. ‘சித்திர குள்ளா... சித்திர குள்ளி’ போன்ற வரிகள் இப்பாடலில் ‘குள்ள விஜய்’ தோன்ற வாய்ப்பிருப்பதை உறுதி செய்கிறது. ‘நாட்டுக்குள்ள நல்லவனே... கட்டிலுக்கு கெட்டவனே..’ என இப்பாடல் முழுவதும் வரிகளில் ‘கிளு கிளு’ப்பை ஏற்றியிருக்கிறார் வைரமுத்து.

புலி....
பாடியவர்கள் : மனோ, ப்ரியதர்ஷினி


டைட்டிலுக்கு விளக்கமளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த ‘புலி’ பாடல். ஹீரோவுக்கான பில்டப் பாடல் போன்றோ அல்லது அறிமுகப் பாடலாகவோ இப்பாடல் இடம்பெறலாம். இசையையும் மீறி பெரிதாக கவனம் பெறுகிறது வைரமுத்துவின் வரிகள். ‘மண்ணை மீறாமலே விதைகள் முளைக்குமா... தறி படாத நூலு என்ன ஆடையாகுமா..?’ என பாடல் முழுவம் தத்துவங்களை தெறிக்கவிட்டிருக்கிறது கவிப்பேரரசுவின் பேனா. மனோவின் வாய்ஸில் உற்சாக ஊற்று.

மனிதா மனிதா...
பாடியவர்கள் ; திப்பு


நாட்டுக்காகப் போராடும் வீரன் ஒருவன் மக்களையும் போராட அழைக்கும் ஊக்கப்பாடலாக இந்த ‘மனிதா மனிதா...’ உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘உடையட்டும் உடையட்டும் விலங்குகள் உடையட்டும்... முடிவெடு தமிழினமே...’ என பாடலின் ஒவ்வொரு வரியிலும் ஊட்டசத்து கொடுத்திருக்கிறார் வைரமுத்து. திப்புவின் ‘ஹைபிட்ச்’ வாய்ஸ் இப்பாடலுக்கு பெரும் பலம். க்ளைமேக்ஸ் பாடலாக இருக்கலாம். கதையோட்டத்துடன் கேட்கும்போது இன்னும் சுவாரஸ்யம் தரும்.

மொத்தத்தில்...இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் புதிதாக இந்த ஆல்பத்தில் எதையும் முயற்சிக்கவில்லை. கதைக்கேற்ற இரண்டு பாடல்களோடு தனது வழக்கமான பாணி டியூன்களையே ‘புலி’ ஆல்பத்திலும் கொடுத்திருக்கிறார். கேட்பதற்கு பெரிய சுவாரஸ்யம் தராத இந்தப் பாடல்கள் பார்ப்பதற்கு பெரிய ஆர்வத்தைத் தரும் என நம்புவோம்!

ஒரு வரி பஞ்ச் : ‘புலி’ இசையில் பாய்ச்சல் குறைவு!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;