மோகன்லால், இளையராஜா இணையும் பிரம்மாண்ட படம்!

மோகன்லால், இளையராஜா இணையும் பிரம்மாண்ட படம்!

செய்திகள் 1-Aug-2015 12:38 PM IST VRC கருத்துக்கள்

தமிழில், ‘காஞ்சிவரம்’ படத்தை இயக்கிய ப்ரியதர்ஷன் மீண்டும் பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார். ஏ.எல்.விஜய், அமலா பால் தம்பதியர் சேர்ந்து தயாரிக்கும் இப்படம் குறுகிய காலத்தில் எடுத்து முடிக்கப்படவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து ப்ரியதர்ஷன் பிரம்மாண்ட மலையாள படம் ஒன்றை இயக்கவுள்ளார். இப்படம் 28 கோடி ரூபாய் செலவில் தயாராகவிருக்கிறது. மலையாளத்தை பொறுத்தவரை அதிக செலவு செய்து எடுக்கப்பட்ட படம் மம்முட்டி நடித்த ‘பழசிராஜா’ என்று கூறப்படுகிறது.

ப்ரியதர்ஷன் இயக்கவிருக்கும் இந்த பிரம்மாண்ட படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கிறார். அசர்பைஜான் என்ற வெளிநாட்டை சேர்ந்த ’ரௌஃப் ஜி மெஹ்தி’ என்ற கம்பெனியும், கேரளாவை சேர்ந்த ‘ஃபுல் ஹவுஸ் புரொடக்‌ஷன்’ என்ற கம்பெனியும் இணைந்து தயாரிக்கும் இப்படம் மலையாளம் மற்றும் அசர்பைஜான் நாட்டு மொழியான ‘அசரி’யிலும் நேரடியாக எடுக்கப்படவிருக்கிறது. பிறகு ரஷ்யா, டர்க்கிஷ், சீனா மொழிகளில் டப்பிங் ஆக இருக்கிறது.
இப்படத்தில் மோகன்லாலுடன் பிரதாப் போத்தன் உட்பட பல மலையாள நடிகர் நடிகைகளும், அசர்பைஜான் நாட்டை சேர்ந்த கிட்டத்தட்ட 20 கலைஞர்களும் நடிக்க இருக்கிறார்கள். இந்த பிரம்மாண்ட படத்திற்கு இசை அமைக்கும் பொறுப்பினை இசைஞானி இளையராஜாவிடம் வழங்கியுள்ளனர். மோகன்லால் நடிப்பில் ப்ரியதரஷன் இயக்கிய ‘கலாபானி’ (தமிழ் – சிறைச்சாலை) படத்திற்கு இளையராஜா தான் இசை அமைத்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து இப்படம் மூலம் ப்ரியதர்ஷனும், இளையராஜாவும், மோகன்லாலும் மீண்டும் இணைகிறார்கள்.

ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க ரஷ்யாவில் நடைபெறவிருக்கிறதாம். தன் தாயை தேடி ரஷ்யா செல்லும் ஒரு பெண்ணின கதையை சொல்லும் இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா கோபிநாத் நடிக்கிறார். சாபு சிரில் கலை இயக்குனராக பணி புரியும் இப்படத்தில் சில ரஷ்ய தொழில்நுட்ப கலைஞர்களும் பணிபுரிய இருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிப்டிப்பு வரும் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி துவங்கவிருக்கிறது. இந்த படம் சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டைட்டில் மோஷன் போஸ்டர்


;