சகலகலா வல்லவன் (2015) - விமர்சனம்

சுராஜின் ‘டெரர்’ சிகிச்சை!

விமர்சனம் 31-Jul-2015 1:44 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Suraj
Production : Lakshmi Movie Makers
Starring : Jayam Ravi, Trisha, Anjali, Soori, Vivek
Music : S. Thaman
Cinematography : U. K. Senthil Kumar
Editing : R.K Selva

3 வருடங்களாக படமே வெளிவராமல் இருந்த ஜெயம் ரவிக்கு தற்போது அடுத்தடுத்து படங்கள் வெளியாகி வருகின்றன. ‘ரோமியா ஜூலியட்’ வெளியாகி 50 நாட்களுக்குள்ளாக தனது அடுத்த படமான ‘சகலகலா வல்லவனை’ களமிறக்கியிருக்கிறார் ஜெயம் ரவி. ‘அலெக்ஸ் பாண்டியன்’ சுராஜ் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

கதைக்களம்

ஊருக்குள் ‘அப்பாடக்கரா’க சுற்றிக் கொண்டிருக்கும் ஜெயம் ரவியும், சூரியின் அத்தை மகளான அஞ்சலியும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். இந்நிலையில் ஜெயம்ரவியின் அத்தை மகளான த்ரிஷாவுக்கு சென்னையில் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. த்ரிஷாவின் கழுத்தில் தாலி ஏறும் நேரத்தில் மாப்பிள்ளையை போலீஸ் அரெஸ்ட் செய்ய, அந்த இக்கட்டான சூழ்நிலையில் குடும்ப மானத்தைக் காப்பாற்ற மணமகனாகிறார் ஜெயம் ரவி. மாடர்ன் கேர்ள் த்ரிஷாவுக்கு, ஊர்க்காரரான ஜெயம் ரவியை சுத்தமாக பிடிக்காமல் போக விவாகரத்து கேட்கிறார். இதன் பிறகு நடக்கும் அடிதடி காமெடி களேபரங்களை புளித்து சலித்துப்போன காமெடி காட்சிகளைக் கொண்டு உருவாக்கினால் அதுவே ‘அப்பாடக்கர் ஜெயம்ரவியின் சகலகலா வல்லவன்’.

படம் பற்றிய அலசல்

வழக்கமான சுராஜ் ஃபார்முலாதான் இப்படத்திலும். கதையே இல்லாமல் முழுப்படத்தையும் எடுத்து வைத்திருக்கிறார்கள். முதல்பாதி முழுக்க ஜெயம் ரவியும், அஞ்சலியும் காதல் செய்ய இடையிடையே அடிவாங்கியபடி காமெடி செய்கிறார் சூரி. இரண்டாம்பாதியில் ஜெயம் ரவியும், த்ரிஷாவும் அடித்துக் கொள்ள அப்போதும் சூரி காமெடியனாக அடி வாங்கிக் கொண்டேயிருக்கிறார் (ஆனால் வலிப்பது ரசிகர்களுக்குத்தான்).

இரண்டாம்பாதியில் இரட்டை வேட விவேக்கை அறிமுகம் செய்து காமெடி சர்ப்ரைஸ் வேறு கொடுத்திருக்கிறார் சுராஜ். வேடம் மட்டுமல்ல விவேக் பேசும் வசனங்களும் காட்சிகளும் இரட்டை அர்த்தம்தான். சென்சாரில் ‘யு’ வாங்கி குடும்பத்துடன் பார்க்கக்கூடிய சான்றிதழ் பெற்றிருக்கும் இப்படத்தில் கிளாமர் காட்சிகளும், இரட்டை அர்த்த வசனங்களும் ஏகத்துக்கும் கொட்டிக் கிடக்கின்றன. தெலுங்கில் தன் இசையமைப்பில் ஹிட்டான பழைய பாடல்களை தூசி தட்டி அப்பாடக்கருக்கு மாற்றம் செய்து கொடுத்திருக்கிறார் தமன். பின்னணி இசையிலும் தெலுங்கு வாடைதான். சுராஜ் படத்திற்கேற்ற கலர்ஃபுல் ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் ஆர்.கே.செந்தில்குமார். இப்படத்தின் எடிட்டிங் யுக்திகள் படத்தின் கதையைப்போலவே ரொம்பப் பழசு.

நடிகர்களின் பங்களிப்பு

சி சென்டர் ஆடியன்ஸை தன் வசப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இப்படத்தை ஜெயம் ரவி தேர்வு செய்திருக்கலாம். ஆனால், இந்தக் கதைக்கு ஜெயம் ரவி பொருந்தவில்லை என்பதே உண்மை. இருந்தாலும் தன் பங்களிப்பை முடிந்தளவு சிறப்பாக கொடுத்திருக்கிறார். அடிதடி, கிளு கிளு காட்சிகள், பாரின் டூயட், சென்டிமென்ட் என மசாலா ஹீரோ அவதாரம் எடுத்திருக்கிறார் ஜெயம் ரவி. தன் இரண்டாவது இன்னிங்ஸிற்கான படமாக இது அமையாவிட்டாலும், ரசிகர்கள் தன்னிடம் எதை எதிர்பார்த்து வருவார்கள் என்பது தெரிந்து தாராளம் காட்டியிருக்கிறார் அஞ்சலி. நிஜத்தைப்போலவே இப்படத்திலும் நாய்கள் மேல் பாசமுள்ளவராக நடித்திருப்பதைத் தவிர, வேறெதும் பெரிதாக இப்படத்தில் செய்யவில்லை நடிகை த்ரிஷா. இந்த கேரக்டரில் நடிக்க சம்மதித்த அவரின் தைரியத்தை பாராட்டியே ஆக வேண்டும் ( ! ).

ஒரு சில இடங்களில் சூரி சிரிக்க வைத்தாலும், காட்சிகளில் புதுமையில்லாததால் போகப்போக சோர்வடைய வைக்கிறார். விவேக்கின் என்ட்ரி ரசிகர்களை சிரிக்க வைப்பதற்குப் பதிலாக சூடேற்றுகிறது. மனிதர் மீண்டும் டபுள் மீனிங்கில் இறங்கிவிட்டார். பிரபு உட்பட படத்தின் மற்ற கதாபாத்திரங்களுக்குப் பெரிய அளவில் வேலையில்லை. ‘மெட்டை’ ராஜேந்திரன் போரடிக்கிறார்.

பலம்

1. இளைஞர்களைக் கவரும் வகையில் அஞ்சலி, த்ரிஷா என இரண்டு கிளாமர் குயின்களை களமிறக்கியிருப்பது.
2. ஒன்றிரண்டு இடங்களில் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கும் காமெடி.

பலவீனம்

கதை, திரைக்கதை, வசனம், டெக்னிக்கல் விஷயங்கள் என படத்தின் உயிர்நாடி அனைத்துமே பலவீனம்தான்.

மொத்தத்தில்...

இப்படத்தின் டிரைலர், விளம்பரங்களையும், சுராஜின் முந்தைய படங்களையும் பார்த்து ‘‘இப்படம் இப்படித்தான் இருக்கும்’’ என ஒரு முடிவுக்கு வந்தவர்கள் தாராளமாக தியேட்டருக்கு விசிட் அடிக்கலாம். நிச்சயம் உங்களை இயக்குனர் ஏமாற்றமாட்டார்!

ஒரு வரி பஞ்ச் : சுராஜின் ‘டெரர்’ சிகிச்சை!

ரேட்டிங் : 3.5/10

(Sakalakala Vallavan Movie Review, Sakalakala Vallavan Review, Sakalakala Vallavan Tamil Movie Review, Appatakkar Movie Review, Appatakkar Review)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;