சிவாஜி, ரஜினி சென்டிமென்ட்! - கீர்த்தி சுரேஷ் சிறப்பு பேட்டி!

சிவாஜி, ரஜினி சென்டிமென்ட்! - கீர்த்தி சுரேஷ் சிறப்பு பேட்டி!

கட்டுரை 29-Jul-2015 10:28 AM IST VRC கருத்துக்கள்

பளீர் சிரிப்பு, அழகான முகம், தமிழில் சரளமாக பேசக்கூடிய ஆற்றல் ஆகியவற்றுடன் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கும் புதிய ஹீரோயின் கீர்த்தி சுரேஷ்! கேரள வரவு என்றாலும் தமிழ் மண் வளத்துடன் வளர்ந்தவர்! இவர் நடிக்க முதலில் கமிட் ஆன படம் ஏ.எல்.விஜய்யின் ‘இது என்ன மாயம். இப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே சிவகார்த்திகேயனுடன் ‘ரஜினி முருகன்’, பாபி சிம்ஹாவுடன் ‘பாம்பு சட்டை’, தனுஷுடன் பிரபு சாலமன் இயக்கும் படம், ஜீவாவுடன் ‘கவலை வேண்டாம்’, ஒரு சில தெலுங்கு படங்கள் என இப்போது கீர்த்தி படு பிசி! இவரது அப்பா சுரேஷ் பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளர்! அம்மா மேனகா, முன்னாள் தமிழ், மலையாள நடிகை! கீர்த்தியின் முதல் தமிழ் படமான ‘இது என்ன மாயம்’ இம்மாதம் 31-ஆம் தேதி ரிலீசாகவிருப்பதை முன்னிட்டு கீர்த்தியுடன் பேசினோம்!

நீங்கள் நடித்த ஒரு படம் கூட ரிலீசாகவில்லை! அதற்குள் கையில் இத்தனை படங்கள்! என்ன மாயம் செய்தீர்கள்?

நான் எந்த மாயமும் செய்யவில்லை! எல்லாம் கடவுள் கிருபையால் நடக்கிறது! இல்லாவிட்டால் ஒரு படத்தில் நடித்து அறிமுகமாவதற்குள் அடுத்தடுத்து இப்படி பல பட வாய்ப்புகள் வருமா என்ன? அதற்கு முதலில் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கிறேன். அப்பா மலையாளத்தில் பெரிய தயாரிப்பாளர் என்பதாலும், என்னை சின்ன வயசிலிருந்தே எல்லோருக்கும் தெரியுங்கிறதாலயும் மலையாள சினிமா என்ட்ரி ஈசியாக நடந்துருச்சு. ஆனால் தமிழ்ல அப்படியில்லை. நான் முதன் முதலாக நடிச்ச ‘கீதாஞ்சலி’ மலையாள படத்தை பார்த்துட்டு தான் விஜய் சார் என்னை நடிக்க அழைத்தார். ‘கீதாஞ்சலி’ படத்தை இயக்கிய ப்ரியதர்ஷன் அங்கிளோட அசிஸ்டென்டா இருந்தவர் விஜய் சார்! எங்களுக்கெல்லாம் அவரை ஏற்கெனவே தெரியுங்கிறதால உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன்.

‘இது என்ன மாயம்’ மற்றும் இதர படங்கள் குறித்து?

‘இது என்ன மாயம்’ படத்தில் ‘மாயா’ங்கிற கேரக்டர்ல நடிச்சிருக்கேன். என் கேரக்டரை சுற்றி தான் கதை வரும் என்பதால இதற்கு மேல் சொல்ல முடியாது. ‘ரஜினி முருகன்’ படத்துல சென்னையில படிச்ச மதுரைப் பொண்ணா நடிச்சிருக்கேன். ஒரு கமர்ஷியல் படத்துல ஒரு ஹீரோயின் எப்படி இருப்பாங்களோ அப்படிப்பட்ட கேரக்டர் எனக்கு! ‘பாம்பு சட்டை’ ஷூட்டிங் போய்கிட்டிருக்கு! தனுஷ் சார் கூட நடிக்கிற படம், ஜீவாவுடன் நடிக்கிற ‘கவலை வேண்டாம்’ படங்கள் குறித்து இப்போதைக்குச் சொல்ல முடியாது. ‘இது என்ன மாயம்’ படத்தை தயாரிச்ச நிறுவனத்தோட தயாரிப்பு தான் ‘பாம்பு சட்டை’ங்கிறதால அதுல நடிக்கிறது ஈசியா இருக்கு!

விக்ரம் பிரபு, சிவகார்த்திகேயன் கூட எல்லாம் நடிச்ச அனுபவம் எப்படி?

விக்ரம் பிரபு வெரி ரெஸ்பெக்டபிள் பர்சன்! ரொம்பவும் அமைதியானவர். ‘இது என்ன மாயம்’ படப்பிடிப்பின்போது ஒரு நாள் பிரபு அங்கிள் செட்டுக்கு வந்தார். என்னை பார்த்ததும் ‘வெரி க்யூட் கேர்ள்’ என்று பாராட்டி நிறைய விஷயங்களை பகிர்ந்தார். என் அம்மா சிவாஜி சாருடன் ஒரு படத்துல நடிச்சிருக்காங்க. இப்ப நான் அவரோட பேரன் விக்ரம் பிரபு கூட நடிச்சிருக்கேன். அதைப்போல அம்மா ரஜினி சார் கூடயும் நடிச்சிருக்காங்க. இப்ப நான் ரஜினி சாரோட பெயர் வர்ற மாதிரி ‘ரஜினி முருகன்’ படத்துல நடிச்சிருக்கேன். இது யதேச்சையா நடந்த விஷயம்ன்னாலும் ரொம்ப சந்தோஷமாக இருக்கு. சிவகார்த்திகேயன் ரொம்ப ஜாலி டைப்! செட்டுல எல்லாரையும் கலாய்ச்சுகிட்டே இருப்பார். நேரம் போவதே தெரியாது. ரொம்பவும் ஃப்ரெண்ட்லி டைப்!

மலையாளம், தமிழ் என்ன வேறுபாடு?

வீட்டுல அப்பா சம்பந்தப்பட்டவங்களோட மலையாளத்துல பேசுவேன். அம்மா தமிழ்நாட்டை சேர்ந்தவர்ங்கிறதால அவர் சம்பந்தப்பட்டவங்களுடன் தமிழ்ல பேசுவேன்! அதனால எனக்கு ரெண்டு மொழியும் நல்லா தெரியும். அதனால மொழி பிரச்சனை ஏதும் இல்லை. மலையாள சினிமாவுல எனக்கு எல்லாரையும் தெரியுங்கிறதால நடிக்கும்போது எந்த பிரச்சனையும் இருந்ததில்லை. ஆனால் தமிழ்ல நடிக்கும்போது ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டப்பட்டேன்! ஏனா மலையாள படங்களோட வொர்க் சீக்கிரம் முடிந்து விடும்! ஆனா தமிழ்ல அதிக நாட்களை எடுத்துக்கிறாங்க! மத்தபடி வேறு எந்த வித்தியாசமும் இல்லை. எல்லோரும் அன்பாதான் பழகுறாங்க, வேலை வாங்குறாங்க!

இனி தமிழுக்கு தான் அதிக முக்கியத்துவமா?

அப்படியில்லை! நல்ல கதை, நல்ல கேரக்டர் வந்தால் எல்லா மொழியிலயும் நடிப்பேன். தமிழ்நாட்டுல பிறந்த என் அம்மா ஒரு சில தமிழ் படங்களில் மட்டும் தான் நடிச்சிருக்கார். ஆனால் அவங்களை மலையாள படவுலகம் வரவேற்று பெரிய நடிகை ஆக்கியது! அதைப் போல கேரளாவில பிறந்த நான் ஓரிரு மலையாள படங்களில் மட்டுமே நடிச்சிருக்கேன்! அதற்குள்ள தமிழ் சினிமா என்னை வரவேற்று எனக்கு நிறைய படங்களை கொடுத்திருக்கு. இந்த வாய்ப்பையெல்லாம் நல்லபடி தக்கவச்சுக்கணுமேனு தான் என்னோட கவலை!’’ என்ற கீர்த்தி சுரேஷ், ‘‘இது என்ன மாயம்’ படத்தை பார்த்துட்டு உங்க அபிப்ராயத்தை சொல்லுங்க’’ன்னு சொல்லி பேச்சை முடித்துக் கொண்டார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பைரவா - பட்டைய கெளப்பு பாடல் வீடியோ


;