மறைந்த அப்துல் கலாமுக்கு கலைஞர்களின் இரங்கல் செய்தி!

மறைந்த அப்துல் கலாமுக்கு கலைஞர்களின் இரங்கல் செய்தி!

செய்திகள் 28-Jul-2015 11:01 AM IST VRC கருத்துக்கள்

நமது முன்னாள் குடியரசு தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல் கலாம் அவர்களது மறைவையொட்டி நடிகர் சிவகுமார், கவிஞர் வைரமுத்து, இயக்குனர் பாரதிராஜா, நடிகர் விவேக் ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திகளின் விவரம் வருமாறு:

நடிகர் சிவக்குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்

‘‘உண்மை, நேர்மை, திறமை,
கடும் உழைப்பு , நாட்டுப்பற்று
இருந்தால்
ஒருவன் எந்த குக்கிராமத்தில்
பிறந்தாலும்
எவ்வளவு ஏழையாகப்
பிறந்தாலும்
எந்த மதத்தைச்
சேர்ந்தவராக இருந்தாலும்
நாட்டில் உயர்ந்த பதவியைப்
பெற முடியும்.
உன்னத நிலையை
அடைய முடியும்
என்பதற்கு உதாரணமாக
வாழ்ந்தவர்
டாக்டர் அப்துல்கலாம்.
பதவியில் இருந்த போதும்
பதவியில் இல்லாத போதும்
உலக மக்களால் ஒன்றுபோல்
நேசிக்கப் பட்ட மகான் !
இளைஞர்களின் உந்து சக்தியாக
இறுதி மூச்சு வரை வாழ்ந்த
அற்புத மனிதர்!’’ என்று குறிப்பிட்டுள்ளார்

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்திகளில் சில…

‘‘எங்கள் குடும்பத்தின் மூத்த தலைமகனின் வாழ்வு முடிந்துவிட்டதாய் உடைந்து நிற்கிறேன். இந்தியாவிற்கு வெளியே இந்தியாவின் அறிவடையாளமாய் விளங்கிய ஒரு ஞானப் பெருமகன் நம்மிடையே இனி இல்லை என்பதை நம்பமுடியவில்லை. இந்தியாவின் கடைக்கோடியில் கடைசிக் குடிமகனாய்ப் பிறந்து இந்தியாவின் முதற்குடிமகனாய் உயர்ந்தது சந்தர்ப்பத்தால் வந்தது அல்ல; சாதனையால் வந்தது. தடம்மாறும் சமூகமும், தடுமாறும் அரசியலும் அப்துல் கலாமின் ஒழுக்க நெறிகளைப் பின்பற்றினால் நாடு நலம்பெறும். அப்துல் கலாம் இந்தியாவிற்கு எழுதிவைத்துப் போகும் மரண வாசகம் இதுவாகத்தான் இருக்கும்.

அய்யா அப்துல்கலாம் அவர்களே உங்கள் புகழை வாழ்நாளெல்லாம் உயர்த்திப்பிடிக்கும் திருக்கூட்டத்தில் ஒருவனாய் நானும் இருப்பேன். கண்ணீரோடு வணங்குகிறான் அய்யா உங்கள் வைரமுத்து.

பாரதிராஜாவின் அஞ்சலி!

இந்தியாவின் வல்லமையை உலக நாடுகளுக்கு எடுத்துச் சென்ற ஒப்பற்ற தலைமகனின் மறைவு கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவருடைய மறைவு தமிழர்களுக்கும், இந்திய மாணவ சமூகத்திற்கும், ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். திரு. அப்துல் கலாம் அவர்கள் தனி மனிதர் அல்ல.. தமிழனின் அடையாளம். ஆழ்ந்த வருத்தங்களுடன் பாரதிராஜா.

நடிகர் விவேக்…

மாமனிதர்கள் வாழ்ந்தார்கள்
மறைந்தார்கள் அவர்களை பற்றி
பேசினோம் மறந்தோம் என்றில்லாமல்
அவர்களின் வாழ்க்கைக்கு அர்த்தமாய்
அவர்கள் விட்டு சென்ற பணிகளையும்
அவர்கள் கண்ட கனவு உயிர் பெற அயராது
பாடுபடவேண்டும். டாக்டர் கலாம் கண்ட
கனவு நனவாக வேண்டும் 2020-ல் பிற
நாடுகள் வியக்கும் அளவு நம்நாடு வளர்ச்சி
பெறவேண்டும் நம்மால் (இளைஞர்களால்)
நிச்சயம் அது சாத்தியமாகும். நம்மால்
முடியும் என்று அவர் நம்பினார். அவர்
நம்பிக்கையை நிறைவேற்றுவோம்.
ஜெய்ஹிந்த் அப்துல்கலாம்

இவர்கள் தவிர இன்னும் சில திரையுலக பிரபலங்கள் மறைந்த அப்துல் கலாமுக்கு தங்களது ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - கலக்கு மச்சான் ஆடியோ பாடல்


;