‘நைட்ஷோ’வுக்கு சூர்யாவின் பாரட்டு!

‘நைட்ஷோ’வுக்கு சூர்யாவின் பாரட்டு!

செய்திகள் 27-Jul-2015 1:06 PM IST VRC கருத்துக்கள்

மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘ஷட்டர்’. இந்த படத்தை தமிழில் ‘’நைட் ஷோ’ என்ற பெயரில் தனது ‘திங்க் பிக் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார் இயக்குனர் ஏ.எல்.விஜய். இந்த படத்தை முன்னணி படத் தொகுப்பாளர்களில் ஒருவரான ஆன்டனி இயக்கியிருக்கிறார். பல வெற்றிப் படங்களில் எடிட்டராக பணிபுரிந்த ஆன்டனி இயக்கும் முதல் படம் இது. இந்த படத்தில் சத்யராஜ், அனுமோல், யூகி சேது, ஐசரி கணேஷின் மகன் வருண் முதலானோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் நடந்தது. டிரைலரை நடிகர் சூர்யா வெளியிட, சத்யராஜ், இயக்குனர்கள் எஸ்.ஜே.சூர்யா, கௌதம் மேனன், கே.வி.ஆனந்த், ஐசரி கணேஷ் முதலானோர் பெற்றுக் கொண்டனர்.

பிறகு நடிகர் சூர்யா பேசும்போது, ‘‘என் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படங்கள் என்று கருதப்படும் பெரும்பாலான படங்களுக்கும் எடிட்டர் ஆன்டனி தான்! அந்த படங்களின் வெற்றியில் ஆன்டனிக்கு முக்கிய பங்கு உண்டு! ஆன்டனி இப்போது ’நைட்ஷோ’ படம் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகியுள்ளார். ஒரு படத்திற்கு தியேட்டருக்கு ரசிகர்களை வரவழைப்பதில் டிரைலருக்கு முக்கிய பங்குண்டு! அந்த வகையில் ஆன்டனி படத்தொகுப்பாளராக பணிபுரியும் படத்தின் டிரைலர்கள் மிரட்டலாக இருக்கும். இந்த படத்தை பொறுத்தவரையில் இயக்குனரும், எடிட்டரும் அவரே என்பதால சொல்ல வேண்டுமா? ‘நைட்ஷோ’ டிரைலர் மிரட்டலாக இருக்கிறது. இதிலிருந்தே படத்தின் வெற்றி உறுதியாகி விட்டது. மலையாளம், மராத்தி மொழிகளில் வெளியாகி வெற்றிப் பெற்றுள்ள இந்த கதை தமிழிலும் மாபெரும் வெற்றி பெறும். ‘காக்கா முட்டை’, ‘பாகுபலி’ என கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் வெற்றிபெற்று வரும் இந்த சூழ்நிலையில் இப்படமும் நிச்சயமாக வெற்றிப் படமாக அமையும். இந்த படத்தை தயாரித்திருக்கும் இயக்குனர் ஏ.எல்.விஜய் ஏற்கெனவே என்னிடம் இரண்டு கதைகள் சொல்லியிருக்கிறார். ஆனால் நான் தான் அதற்கு இன்னும் நேரத்தை ஒதுக்கவில்லை! இந்த படம் வெற்றிப் படமாக அமைய படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எச்சரிக்கை - டிரைலர்


;