ஆவிகுமார் – விமர்சனம்

ஹாரர் பட விரும்பிகளுக்கு மட்டும்!

விமர்சனம் 25-Jul-2015 1:37 PM IST Top 10 கருத்துக்கள்

Production : Action Take Movies
Direction : K.Kandeepan
Starring : Udhaya, Nasser, Kanika Thivaari, Jegan, Devadharshini, Munees Kanth
Music : Vijay Antony, Srikanth Deva
Cinematography : Rajesh K. Narayanan
Editing : Anil Malnad

ஹாரர் பட வரிசையில் மாறுபட்ட ஒரு கதைகளத்தில் வந்திருக்கும் படம் ‘ஆவிகுமார்’

கதைக்களம்

உதயா, ஆவிகளுடன் பேசும் திறமையுள்ளவர். அவர் ஆவிகளுடன் பேசும் ஒரு நிகழ்ச்சியில் போலீஸ் அதிகாரியான நாசரும் கலந்துகொள்கிறார். உதயா ஆவிகளுடன் பேசுவதை நம்பாத நாசர், ‘இதை யாரும் நம்பவேண்டாம்’ என்று பேசி விடுகிறார். இதனால நாசருக்கும் உதயாவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படுகிறது. இந்நிலையில் நாசர் உதயாவிடம், ‘ஏற்கெனவே நடந்த ஒரு கொலை வழக்கில் யார் குற்றவாளி என்று கூற முடியுமா?’ என்று சவால் விடுகிறார். அந்த சவாலை ஏற்றுக்கொள்ளும் உதயா, கொலை செய்யப்பட்டவரின் ஆவியுடன் பேசி உண்மையான கொலையாளியின் பெயரை சொல்கிறார். உதயா சொல்லும் கொலையாளி வெளியிலும், வேறு ஒருவர் தண்டனை பெற்று ஜெயிலிலும் இருப்பதால் பிரச்சனை ஏற்படுகிறது. உதயா சொன்ன உண்மையான கொலைகாரன் உதயாவின் உயிருக்கு குறி வைக்கிறான். இந்நிலையில் உதயா குடியிருக்கும் வீட்டில் ஒரு பெண் (கனிகா திவாரி) ஆவியாக அலைகிறார். அந்த ஆவியுடன் அன்பாக பேசிப் பழகும் உதயாவுக்கு தான் சொன்ன கொலைகாரன் தான், கனிகா ஆவியாக அலையவும் காரணமானவன் என்று தெரிய வருகிறது. அதன் பிறகு நடைபெறும் பரபர சம்பவங்கள் தான் ‘ஆவிகுமார்’.

படம் பற்றிய அலசல்

வழக்கமான பேய், ஹாரர் படங்களிலிருந்து வித்தியாசமான படமாக தரவேண்டும் என்ற முனைப்புடன் இப்படத்தை இயக்கியிருக்கும் காண்டீபன் அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றுள்ளார்! மலேசியா பின்னணியில் நடக்கும் கதையில் உதயா, ஆவிகளுடன் பேசி உண்மைகளை கண்டு பிடிப்பது, கோமா நிலையில் இருக்கும் கனிகா திவாரியின் ஆத்மாவுடன் பேசுவது, அவரிடம் அன்பு செலுத்துவது, காதலிப்பது, அவருக்காக வில்லன்களுடன் மோதுவது, கடைசியில் அந்த ஆவியே உதயாவுக்கு இன்ப அதிர்ச்சி தருவது என வித்தியாசமான கதைகளத்தில் பயணிக்கிறது திரைக்கதை! இப்படத்தில், ஒருவர் உடலை விட்டு ஆத்மா பிரிந்திருக்க முடியுமா என்பதற்கு விளக்கம் தந்துள்ளார் இயக்குனர் காண்டீபன்! ஆனால் படத்தின் கிளைமேக்ஸ் முன்பு வரை கதையை நேரத்தியாக நகர்த்திய இயக்குனர் காண்டீபன் மருத்துவமனையில் நடைபெறும் கிளைமேக்ஸ் காட்சியில் கொஞ்சம் தடுமாறியிருப்பதை உணர முடிகிறது. படத்தின் கதையோட்டத்திற்கு ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையும் ராஜேஷ் கே. நாராயணின் ஒளிப்பதிவும் பக்கபலமாக அமைந்துள்ளன!

நடிகர்களின் பங்களிப்பு

கண்களை மூடி தியானம் செய்து ஆவிகளை வரவழைத்து பேசும் உதயாவுக்கு இப்படத்தில் தனது பெர்ஃபாமன்ஸை வெளிப்படுத்தக் கூடிய நல்ல கேரக்டர் கிடைத்துள்ளது. அதை உணர்ந்து நன்றாக நடிக்கவும் செய்துள்ளார் உதயா! படத்தில் கோமா நிலையில் இருப்பவராகவும், ஆவியாகவும் வரும் கனிகா திவாரியிடம் அழகும், இருக்கிறது, நடிப்பு திறமையும் இருக்கிறது. படத்தின் இறுதியில் அவர் உதயாவுக்கு கொடுக்கும் இன்ப அதிர்ச்சி நமக்கும் சர்ப்ரைஸ் தான்! உதயாவின் நண்பாராக வரும் ஜெகனின் காமெடி எடுபடவில்லை! முனீஸ்காந்த், தேவதர்ஷினியின் அலப்பறைகள் கொஞ்சம் ஓவர் என்றாலும், ஓரளவுக்கு ரசிக்க முடிகிறது! கம்பீரமான போலீஸ் அதிகாரியாக வரும் நாசர் மனதில் நிற்கிறார். மற்றும் மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், பாவா லட்சுமணன், புனிதா ஷண்முகம் ஆகியோரும் நடித்துள்ளனர்.

பலம்

1.போரடிக்க வைக்காத திரைக்கதையும், அதை படமாக்கியிருக்கும் விதமும்
2.பின்னணி இசையும், ஒளிப்பதிவும்
3. படத்தின் இறுதியில் வரும் எதிர்பாராத ட்விஸ்ட்.

பலவீனம்

1.லாஜிக் மீறல்கள் மற்றும் மிக நீளமான மருத்துவமனை காட்சிகள்
2.விஜய் ஆண்டனி இசையில் ஒரு பாடலை தவிர்த்து கவனம் ஈர்க்காத மற்ற பாடல்கள்!
3.குறிப்பிடும்படியான பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாதது.

மொத்தத்தில்…

நம்ப முடியாத பல காட்சிகள் இருந்தாலும் சமீபத்தில் வெளியான ஹாரர் படங்களுள் ‘ஆவிகுமார்’ புதிய கோணத்தில் பயணிக்கிறது.

ஒருவரி பஞ்ச் : ஹாரர் பட விரும்பிகளுக்கு மட்டும்!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பொதுவாக எம்மனசு தங்கம் - டிரைலர்


;