மாரி - விமர்சனம்

தனுஷ் ரசிகர்களுக்கான பந்தயம்!

விமர்சனம் 17-Jul-2015 1:05 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Balaji Mohan
Production : Wunderbar Films, Magic Frames
Starring : Dhanush, Kajal Aggarwal, Vijay Yesudas, Robo Shankar
Music : Anirudh
Cinematography : Om Prakash
Editing : Prasana GK

‘ஆடுகளம்’ படத்தில் சேவல் சண்டை போட்ட தனுஷ், ‘மாரி’ படத்தில் புறா பந்தயத்தை கையிலெடுத்திருக்கிறார். எப்படி இருக்கிறது ஆட்டம்?

கதைக்களம்

மாமூல் வசூல், கட்டப்பஞ்சாயத்து, புறா பந்தயம், அடிதடி என திருவல்லிக்கேணி ஏரியாவையே கன்ட்ரோலில் வைத்திருப்பவர் மாரி (தனுஷ்). மாரி செய்யும் அத்தனை வேலைகளையும் தானும் செய்து ஏரியாவில் ‘கெத்து’ காட்ட வேண்டும் என நினைப்பவர் ‘பேர்டு’ ரவி (மைம் கோபி). இதனால் அடிக்கடி மாரிக்கும், பேர்டு ரவிக்கும் தகராறு ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் திருவல்லிக்கேணி ஸ்டேஷனுக்கு எஸ்.ஐ.யாக வருகிறார் ‘கெட்ட போலீஸ்’ அர்ஜுன் (விஜய் யேசுதாஸ்). எஸ்.ஐ. அர்ஜுனை தன் பக்கம் சேர்த்துக்கொண்டு மாரி இடத்தில் வந்தமர திட்டமிடுகிறார் ‘பேர்டு’ ரவி. இதன்பிறகு என்ன நடந்திருக்கும் என்பதை காலம் காலமாக தமிழ் சினிமா பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதேதான்... சுபம்!

படம் பற்றிய அலசல்

வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பவர் என்ற பெயரெடுத்த தனுஷா இது போன்ற ‘ஒண்ணுமில்லாத’ கதையைத் தேர்ந்தெடுத்து நடித்தார்? என்ற அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது மாரி. சரி... போகட்டும், காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடிப் பேசவும் என தனது முதல் இரண்டு படங்களிலும் கதைக்காகவே பேசப்பட்ட இயக்குனர் பாலாஜி மோகனா ‘மாரி’யின் இயக்குனர் என்பது இன்னொரு அதிர்ச்சி.

தனுஷ் ரசிகர்களை தியேட்டரில் விசிலடிக்க வைக்க வேண்டும், கைதட்ட வைக்க வேண்டும், எழுந்து நின்று திரையை மறைத்துக் கொண்டு ஆட வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே ‘மாரி’யின் ஒவ்வொரு காட்சியும் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதற்கேற்றார்போல் தனுஷ் வரும் ஒவ்வொரு காட்சியையும் அவரின் அறிமுகக் காட்சியைப் போல மாற்ற, பில்டப் கேமரா ஆங்கிள், மாஸ் பிஜிஎம் என ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷும், இசையமைப்பாளர் அனிருத்தும் தீயாக வேலை செய்திருக்கிறார்கள். அதற்கேற்றார்போல் தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள் என்பதும் நிஜம்தான். ஆனால்... கொண்டாடியவர்கள் அனைவரும் தனுஷ் ரசிகர்கள் மட்டுமே என்பதுதான் சோகம். ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் குடும்பங்களை தியேட்டருக்கு அழைத்துக்கொண்டு வந்த தனுஷ், இந்த ‘மாரி’யில் அவர்களை தக்க வைத்துக்கொள்ளத் தவறிவிட்டார்.

படம் ஆரம்பித்ததிலிருந்து ‘புறா பந்தயம்... புறா பந்தயம்’ என பில்டப் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். ஆனால், கடைசி வரை அப்படி ஒன்றே நடக்கவேயில்லை. எல்லாவற்றையும் தாண்டி, படத்தின் பலம் என்று பார்த்தால் ரோபோ ஷங்கரின் டைமிங் காமெடியும், தனுஷின் ஸ்கிரீன் பிரசென்ஸ் மட்டுமே!

(படம் முழுவதும் தனுஷ் வரும் ஒவ்வொரு காட்சியிலும் ஒன்று சிகரெட் பிடித்துக்கொண்டே இருக்கிறார், இல்லையென்றால் குடித்துக்கொண்டே இருக்கிறார். அதுவும் இல்லையென்றால் ஆடிக்கொண்டே இருக்கிறார். ‘புகைபிடித்தால் புற்றுநோய் வரும்’ என்ற ஒரு வாசகத்தை திரையின் ஓரத்தில் போட்டுவிட்டு, இப்படி படம்முழுக்க காட்சிகளை வைப்பது எந்தவகையில் நியாயம் என்பது இயக்குனருக்கே வெளிச்சம்).

நடிகர்களின் பங்களிப்பு

ரசிகர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற முடிவோடு களமிறங்கிவிட்டதாலோ என்னவோ தனுஷ் படம் முழுவதும் ஒருவித ‘கெத்து’ முகபாவனையிலேயே வலம் வருகிறார். மேலே சொன்னதுபோல் நடிப்பதைவிட ஸ்லோமோஷனில் நடப்பது, தம் அடிப்பது, குடிப்பது, குத்தாட்டம் போடுவது என்பன போன்ற வேலைகளைத்தான் இப்படத்தில் அதிகம் செய்திருக்கிறார் தனுஷ். எப்படிப் பார்த்தாலும் தனுஷிடமிருந்து இப்படிப்பட்ட ஒரு பெர்ஃபாமென்ஸை ‘தனுஷ் ரசிகர்கள் அல்லாதவர்கள்’ நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

கதையே இல்லாத படத்தில் கதாநாயகிக்கு மட்டும் என்ன வேலை இருக்கப்போகிறது. இருந்தாலும் காஜல் அகர்வால் பார்ப்பதற்கு அழகாக, அம்சமாக இருக்கிறார். பொருந்தாத வில்லன் வேடத்தில் விஜய் யேசுதாஸ் நடித்திருந்தாலும் அறிமுகப் படமென்பதால், அவரை வாழ்த்தி வரவேற்போம். ‘ஒண்ணுமேயில்லாத’ படத்தில் முடிந்தளவு ரசிகர்களை சிரிக்க வைத்து குஷிப்படுத்தியிருக்கும் ஒரே ஆத்மா ‘ரோபோ’ ஷங்கர் மட்டும். வெல்டன் பிரதர்! மற்றபடி ‘மைம்’ கோபி, சண்முகராஜன் போன்றோர் அந்தந்த கேரக்டரை சரியாகச் செய்திருக்கிறார்கள்.

பலம்

1. தனுஷின் ஸ்கிரீன் பிரசென்ஸ்
2. ரோபோ ஷங்கரின் டைமிங் காமெடிகள்.

பலவீனம்

கதை, திரைக்கதை, காட்சியமைப்புகள் என முக்கியமான ஒவ்வொரு விஷயமும் இப்படத்தைப் பொறுத்தவரை பலவீனமே.

மொத்தத்தில்...

நீங்கள் ‘வெறித்தனமான தனுஷ் ரசிகரா...? அப்படியென்றால் ‘மாரி’ கண்டிப்பாக உங்களுக்கான படம்தான். போகலாம், ஆடலாம், கத்தலாம், கெத்தாக வெளியே வரலாம். மற்றவர்களைப் பொறுத்தவரை ‘நோ கமெண்ட்ஸ்’.

ஒரு வரி பஞ்ச் : தனுஷ் ரசிகர்களுக்கான பந்தயம்!

ரேட்டிங் : 4/10

(Maari Movie Review, Maari Review, Maari Tamil Movie Review, Mari Review, Maari Dhanush Movie Review)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்குசக்கரம் மோஷன் போஸ்டர்


;