மினியன்ஸ் (Minions) - ஹாலிவுட் விமர்சனம்

அனிமேஷன் அசத்தல்!

விமர்சனம் 16-Jul-2015 12:44 PM IST Chandru கருத்துக்கள்

அனிமேஷன் படங்கள் என்பது தனி உலகம். அங்கே லாஜிக் என எதுவுமே கிடையாது... எல்லாமே மேஜிக்தான். அப்படி ஒரு மேஜிக்கை நிகழ்த்த வருகிறது ‘மினியன்ஸ்’ ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படம். ஏற்கெனவே டிஸ்பிக்கபிள் மீ (Despicable Me), டிஸ்பிக்கபிள் மீ2 (Despicable Me 2) என இரண்டு பாகங்களாக வெளிவந்த படங்களின் முன்கதையாக விரிகிறது இப்படம். இப்படத்தின் நாயகர்கள் யார் என்பதை சொல்லவும் வேண்டுமா? சாட்சாத் மினியன்களேதான்!

‘டிஸ்பிக்கபிள் மீ’ படத்தின் முதன்மை கதாபாத்திரமான ‘க்ரு’வின் (Gru) வசம் மினியன்கள் எப்படி வந்தடைகின்றன என்பதே இந்த ‘மினியன்ஸ்’ படத்தின் மினி ஸ்டோரி. காலம் காலமாக தங்களுக்கென ஒரு தலைவனைத் தேடி அலைகிறது மினியன்கள் கூட்டம். பார்ப்பதற்கு வாழைப்பழத்திற்கு கை, கால் முளைத்ததுபோல் தோற்றமளிக்கும் ‘மினியன்கள்’, தங்களுக்கான தலைவன் கிடைக்காமல் அலைந்து அலைந்து கடைசியாக அண்டார்டிகாவின் பனிப்பிரதேச குகை ஒன்றில் தங்குகின்றன.

அங்கிருந்து யாரும் வெளியேறத சூழ்நிலையில், கெவின் (Kevin), ஸ்டூவர்ட் (Stewart), லிட்டில் பாப் (Little Bob) என 3 மினியன்கள் மட்டும் தங்களுக்கான ‘பாஸை’த்தேடி நியூயார்க் நகரை நோக்கி பயணிக்கிறார்கள். அந்த பயணத்தின்போது ஒர்லாண்டாவில் வில்லி ஸ்கேர்லட் ஓவர்கில்லைச் (Scarlett Overkill) சந்திக்கிறார்கள். அவளின் திறமைக்கண்டு வியக்கும் அந்த 3 மினியன்களும் அவளிடம் போய் தஞ்சமடைகிறார்கள். அவள் தரும் வேலை ஒன்றை முடிக்க கிளம்புகிறது அந்த மூவர் படை. அது என்ன வேலை? அதை செய்து முடித்தார்களா? இல்லையா? மினியன் கூட்டத்திற்கு நிரந்தர தலைவர் கிடைத்தாரா இல்லையா? என்பது க்ளைமேக்ஸ்!

லாஜிக்கை மூட்டை கட்டி வைத்துவிட்டு கற்பனைக்கும் எட்டாத வகையில் இப்படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் கதாசிரியர் பிரையன் லின்ச் (Brian Lynch). அதற்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள் இரட்டை இயக்குனர்களான கெயில் பால்டா (Kyle Balda) மற்றும் பியர் காஃபின் (Pierre Coffin). குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் பார்த்து ரசிக்கும் வண்ணம் படம் முழுவதும் நகைச்சுவைகளை அள்ளித் தெளித்திருக்கிறார்கள். போகிறபோக்கில் ஆம்ஸ்ட்ராங் நிலாவில் கால் தடம் பதித்தது, இங்கிலாந்து ராணியின் சிம்மாசனம், எகிப்திய அரசன் என பலரையும் கிண்டலடித்திருக்கிறார்கள்.

அனைத்து மினியன்களும் பார்ப்பதற்கு ஒரே போன்ற தோற்றத்திலிருந்தாலும் படத்தின் நாயகர்களான கெவின், ஸ்டூவர்ட், லிட்டில் பாப் ஆகிய 3 மினியன்களையும் ரசிகர்கள் எளிதில் அடையாளம் காணும் வண்ணத்தில் அவர்களின் உருவத்திலும், நடை, உடை, பாவணைகளிலும் சின்னச் சின்ன வித்தியாசங்களைக் காட்டி அசத்தியிருக்கிறார்கள். அதேபோல் வில்லியாக வரும் ஸ்கேர்லட் ஓவர்கில்லின் கேரக்டரும் பிரமாதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அவள் செய்யும் சாகஸங்கள் அனிமேஷனில் மட்டுமே சாத்தியம். அந்த கேரக்டருக்கு நடிகை சான்ட்ரா புல்லக்கின் (Sandra Bullock) குரல் கூடுதல் பலம்.

ஒன்றரை மணி நேரம் மட்டுமே ஓடும் இப்படத்திற்கு கெய்ட்டர் பெரீரா (Heitor Pereira) இசையமைத்திருக்கிறார். யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை ஹன்ஸா பிக்சர்ஸ் வெளியிடுகிறது. உலகம் முழுவதும் வெளியாகி வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கும் இந்த அனிமேஷன் திரைப்படம் விரைவில் இங்கேயும் வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;