நீங்கா துயரில் ஆழ்த்திய ‘மெல்லிசை மன்னர்’

நீங்கா துயரில் ஆழ்த்திய ‘மெல்லிசை மன்னர்’

செய்திகள் 14-Jul-2015 8:45 AM IST Chandru கருத்துக்கள்

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் இசையமைப்பாளர்களில் ஒருவரும், ‘மெல்லிசை மன்னர்’ என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவருமான எம்.எஸ்.விஸ்வநாதன், உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை இயற்கை எய்தினார். கடந்த சில வாரங்களாக உடல் நலம் குன்றியதன் விளைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 87 வயதான எம்.எஸ்.வி.யின் மறைவு தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியத் திரையுலகிற்கே மிகப்பெரிய இழப்பு!

மனயங்கத் சுப்பிரமணியன் விஸ்வநாதன் (எம்.எஸ்.வி.) 1928ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார். 1945ஆம் ஆண்டு தொடங்கிய எம்.எஸ்.வி.யின் திரைப்பயணம் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து வந்தது. தமிழ் சினிமா மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தியுடன் இணைந்து மட்டுமே கிட்டத்தட்ட 650க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் எம்.எஸ்.விஸ்வநாதன். இரட்டை இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.கே.ராமமூர்த்தி கடந்த 2013ஆம் ஆண்டு இந்த மண்ணுலகை விட்டுச் சென்றார். தற்போது எம்.எஸ்.வி.யும் நம்மைவிட்டுப் பிரிந்து சென்று நீங்கா துயரில் ஆழ்த்தியிருக்கிறார்.

இன்று அதிகாலை 4.15 மணியளவில் மரணமடைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் உடல், திரையுலகைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது சாந்தோம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அன்னாரின் இறுதிச் சடங்குகள் நாளை காலை பெசன்ட்நகர் மின் மயானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;