நண்பருக்காக ‘ஆரஞ்சு மிட்டா’யை தயாரித்த விஜய் சேதுபதி!

நண்பருக்காக ‘ஆரஞ்சு மிட்டா’யை தயாரித்த விஜய் சேதுபதி!

செய்திகள் 13-Jul-2015 12:18 PM IST VRC கருத்துக்கள்

விஜய்சேதுபதி தயாரித்து, நடிக்கும் படம் ‘ஆரஞ்சு மிட்டாய்’. விஜய்சேதுபதியின் நண்பர் பிஜு விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்து, இயக்கும் இப்படம் வருகிற 31-ஆம் தேதி ரிலீசாகிறது. இதையொட்டி நடந்த இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி பேசும்போது,

‘‘ஆம்புலன்ஸ் ஓட்டுனர் உட்பட மூன்று பேரை சுற்றி சுழலும் கதை ‘ஆரஞ்சு மிட்டாய்’. அந்த மூவரில் 55 வயதுடைய ஒரு மனிதர் இருக்கிறார். அவரது வாழ்க்கையில் நடந்த இனிப்பு, புளிப்பு, கசப்பு கலந்த சம்பவங்கள் தான் படத்தின் மைய கதை! ஆரஞ்சு மிட்டாய் என்றாலே இனிப்பு, புளிப்பு, கசப்பு கலந்தது தானே! அதனால் தான் படத்திற்கு ‘ஆரஞ்சு மிட்டாய்’ என்று பெயர் வைத்தோம்! அந்த 55 வயது முதியவராக நான் நடிக்கிறேன். இந்த வயதில் இருக்கும் ஒருவரது வாழ்க்கையில் ஏற்படும் வலி, பயம், எதிர்காலம் பற்றிய சிந்தனை தான் படம். முதலில் இந்த கேரக்டரில் வேறு ஒரு நடிகர் நடிப்பதாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. அதனால் தான் நான் நடித்தேன்! இந்த கதையை பிஜு விஸ்வநாத் ரொம்ப நாட்களாக சுமந்து கொண்டிருந்தார்.

நிறைய தயாரிப்பாளர்களிடம் அவர் இந்த கதையை சொல்லியிருக்கிறார். ஆனால் கதையில் யதார்த்தம் மட்டும் தான் இருக்கிறது, கமர்ஷியல் விஷயங்கள் எதுவும் இல்லை என்று கூறி யாரும் தயாரிக்க முன் வரவில்லை. அதனால் தான் நானே தயாரிக்க முடிவு செய்தேன். தயாரிப்பில் எனக்கு உதவும் நோக்கத்தோடு என் பள்ளி தோழன் கணேஷும் இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார். படம் திருப்தியாக வந்திருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ‘மேற்கு தொடர்ச்சி மலை’ என்ற படத்தை தயாரிக்கிறேன். ஆனால் இதில் நான் நடிக்கவில்லை’’ என்றார் விஜய் சேதுபதி!

‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் அஷ்ரிதா, ரமேஷ் திலக், அருபாலா, வினோத் சாகர், திருச்சி மணிவண்ணன், விஷாலினி, தமிழ் செல்வி ஆகியோர் நடிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;