விஸ்வரூபம் எடுக்கும் ‘ஜிகர்தண்டா’ பிரச்சனை!

விஸ்வரூபம் எடுக்கும் ‘ஜிகர்தண்டா’ பிரச்சனை!

செய்திகள் 11-Jul-2015 11:26 AM IST VRC கருத்துக்கள்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய படம் ‘ஜிகர்தண்டா’. இப்படத்தை ‘குரூப் கம்பெனி’ நிறுவனம் சார்பில் ‘ஃபைவ் ஸ்டார்’ கதிரேசன் தயாரித்திருந்தார். இப்படம் சம்பந்தமாக தயாரிப்பாளர் கதிரேசனுக்கும், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜுக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் கார்த்திக் சுப்பராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் இத்திரைப்படத்தின் ஹிந்தி உரிமையை தனக்கு தெரியாமல் தயரிப்பாளர் விற்க முயற்சி செய்வதாகவும், இப்படத்தின் காப்பிரைட்ஸ் தன் வசமே இருப்பதாகவும், இத்திரைப்படத்தை இயக்கிய வகையில் தனக்கு சேர வேண்டிய சம்பள பாக்கி 40 லட்சம் கோரி வழக்கு தாக்கல் செய்தார். கடந்த 21-5-2015-ஆம் தேதி தனது காப்பிரைட்ஸ் உரிமையையும், ஹிந்தி மொழி உட்பட அனைத்து மொழி மாற்று உரிமையையும் தயாரிப்பாளர் கதிரேசன் வேறு எவருக்கும் விற்க கூடாது என்றும் தடை உத்தரவை வாங்கியிருந்தார் கார்த்திக் சுப்பராஜ்!

இந்த நிலையில் இந்த தடை உத்தரவை எதிர்த்து தயாரிப்பாளர் கதிரேசன் எதிர் மனு தாக்கல் செய்தார். இதில் ‘ஜிகர்தண்டா’ படம் மீது போடப்பட்ட தடை உத்தரவை நீக்க கோரி கேட்டுக் கொண்டிருந்தார் கதிரேசன். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ‘ஜிகர்தண்டா’ படம் சம்பந்தமாக போடப்பட்டிருந்த தடையை நீக்கியது. இதனை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் மீது 5 கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரப் போவதாக இந்நிறுவனத்தின் நிர்வாகி கலைச்செல்வி கூறியுள்ளார். இது சம்பந்தமாக அவர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசும்போது,

‘‘கார்த்திக் சுப்பராஜ் எங்கள் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி ‘ஜிகர்தண்டா’ படத்தின் கதை மற்றும் அனைத்து உரிமைகளையும் ஏற்கெனவே எங்களுக்கு கொடுத்தாகி விட்டது. ஆனால் அவர் வேண்டுமென்றே தவறான தகவல்களை மையப்படுத்தி உண்மைக்கு புறம்பானவற்றை கூறி கோர்ட்டில் எங்கள் மீது வழக்கு தொடுத்து தடை உத்தரவும் பெற்றிருந்தார். அந்த தடை உத்தரவை நீக்க கோரி நாங்கள் அளித்த மனுவை தொடர்ந்து, உயர்நீதிமன்றம் அந்த தடை உத்தரவை நீக்கி இருக்கிறது. இந்நிலையில் எங்கள் மீது கார்த்திக் சுப்பராஜ் மீண்டும் மீண்டும் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். ஏற்கெனவே படப்பிடிப்பை தாமதப்படுத்தி எங்களுக்கு 1 கோடியே 36 லட்சம் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ். அத்துடன் அவர் இப்போது தவறான தகவல்களை பரப்பி வருவதால் இத்திரைப்படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை விற்க முடியவில்லை. இதனால் எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் மீது எங்கள் நிறுவனத்தின் சார்பில் 5 கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறோம்’’ என்று அவர் கூறினார். இதனால் ‘ஜிகர்தண்டா’ பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - டிரைலர்


;