பாகுபலி - விமர்சனம்

இந்திய சினிமாவில் ஹாலிவுட் தரம்!

விமர்சனம் 10-Jul-2015 3:30 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : S.S.Rajamouli
Production : Arka Media Works
Starring : Prabhas, Rana Daggubati, Tamannaah, Anushka Shetty, Ramya Krishnan, Sathyaraj, Sudeep, Nassar
Music : M. M. Keeravani
Cinematography : K. K. Senthil Kumar
Editing : Kotagiri Venkateswara Rao

மஹதீரா, நான் ஈ என இந்திய சினிமாவில் விஷுவல் உச்சம்தொட்ட எஸ்.எஸ்.ராஜமௌலியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு பாகுபலி. ‘யானைப் பசி’ போன்ற எதிர்பார்ப்பிலிருக்கும் ரசிகர்களுக்குத் தகுந்த தீனி போட்டிருக்கிறாரா ராஜமௌலி?

கதைக்களம்

‘100 பேரைக் கொல்பவன் வீரன். ஒற்றை உசிரையாவது காப்பவனே கடவுள்’ இந்த வாக்கியத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருப்பதே ‘பாகுபலி’ திரைப்படம்.

படம் பற்றிய அலசல்

படம் ஆரம்பிப்பதற்கு முன்பே ஒரு வருட திட்டமிடல், பின்னர் 1 வருட படப்பிடிப்பு, அதன் பின்னர் போஸ்ட் புரொடக்ஷன்களுக்காகவே ஒரு வருடம் என பக்காவாக பிளான் செய்து ஒரு படத்தை ராஜமௌலி உருவாக்கியிருக்கிறார் என்பதை படம் பார்த்த அனைவருமே ஒப்புக்கொள்ளும் அளவுக்கு பிரம்மாண்டங்களால் ரசிகர்களின் விழிகளை விரிய வைத்திருக்கிறார் ராஜமௌலி. இந்திய சினிமாவில் நிச்சயம் இதற்கு முன்பு இப்படிப்பட்ட போர்க்காட்சிகளை நாம் பார்த்திருக்கவே முடியாது. அதற்காகவே ராஜமௌலி டீமுக்கு பிரம்மாண்ட பூங்கொத்து கொடுக்கலாம். ஹேட்ஸ் ஆஃப்!

வழக்கமான ராஜா கதைதான் இந்த பாகுபலியிலும். ஆனாலும் ஆரம்பம் முதல் இறுதிவரை படத்தோடு கட்டிப் போடுகிறது ராஜமௌலியின் இயக்கம். படத்திலிருக்கும் அத்தனை கேரக்டர்களுக்கும் சரிசமமான பங்களிப்பை கொடுத்திருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் ஆகியோரின் கதாபாத்திர வடிவமைப்பு.

படத்தின் முதல் அரைமணி நேரம் ஹீரோ பிரபாஸ் செய்யும் வேலைகளும், கதைக்களம் நகரும் இடங்களும் லாஜிக்கலாக நம்பும்படியாக இல்லையென்றாலும் ‘அந்த மலை உச்சியில் அப்படி என்னதான் இருக்கிறது’ என ஒவ்வொரு ரசிகனையும் ஏங்க வைத்திருக்கிறார்கள். பிரபாஸுக்கான ஃப்ளாஷ்பேக் கதை கொஞ்சம் குழப்புவதுபோல் இருப்பது, பல கேள்விகளுக்கு விடையளிக்காமலேயே படத்தை முடித்திருப்பது என்பன போன்ற விஷயங்களைத் தவிர்த்து பெரிய குறையொன்றும் இல்லை இந்த பாகுபலியில்.

கேட்பதற்கு சுவாரஸ்யமாக இல்லாவிட்டாலும் பார்ப்பதற்கு புதிய அனுபவத்தைத் தருகின்றன பாடல்கள். கிராஃபிக்ஸ், செட், பின்னணி இசை, ஒளிப்பதிவு என ஒவ்வொரு டெக்னிக்கல் விஷயமும் இப்படத்திற்காக பிரம்மாண்டமாக உழைத்திருக்கின்றன.

நடிகர்களின் பங்களிப்பு

பிரபாஸ், ராணா இருவரும் இப்படத்தின் தூண்கள் என்று அடித்துக் கூறலாம். இருவரும் அந்தந்த கேரக்டர்களுக்காக கடுமையான உடற்பயிற்சி, வாள் பயிற்சி, குதிரையேற்றம் என உச்சபட்ச உழைப்பைக் கொட்டியிருக்கிறார்கள். நிச்சயம் பாகுபலி கேரக்டரும், பல்லால தேவா கேரக்டரும் சினிமா வரலாற்றில் இடம்பிடிக்கும். அவந்திகா கேரக்டருக்கு தமன்னா பொருந்தவில்லை என்பதே பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. தமன்னாவின் விழி வீச்சில் வீழ்ந்த ரசிகர்களுக்கு, அவரின் வாள் வீச்சு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதே உணமை. இரண்டாம் பாக அனுஷ்காவிற்காக இப்போதே தவம் கிடக்க வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை. ஏனென்றால் இந்த முதல் பாகத்தில் தெய்வசேனா (அனுஷ்கா) சங்கிலிகளால் கட்டப்பட்டிருப்பதோடு சரி!

குறிப்பாக தமிழ் நட்சத்திரங்களான ரம்யா கிருஷ்ணனுக்கும், சத்யராஜுக்கும் இந்த முதல் பாகத்தில் பெரிய வாய்ப்புக் கொடுத்திருக்கிறார் ராஜமௌலி. அவர்களும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்கள். அதேபோல் நாசரும் ஒன்றிரண்டு காட்சிகளே வந்தாலும் தன் சகுனித்தனத்தை கண்களாலேயே காட்டி அசத்தியிருக்கிறார். இப்படத்தின் கதாபாத்திர வடிவமைப்பும், நடிகர்களின் பங்களிப்பும் நிச்சயம் நெடுநாள் பேசப்படும்.

பலம்

1. கண்களுக்கும், காதுகளுக்கும் விருந்து படைத்திருக்கும் விஷுவல் எஃபெக்ட்ஸ், பிரம்மாண்டமான செட்கள், பின்னணி இசை, ஒளிப்பதிவு உள்ளிட்ட டெக்னிக்கல் விஷயங்கள்.
2. கதாபாத்திர வடிவமைப்பு, நடிகர்களின் பங்களிப்பு, ராஜமௌலியின் இயக்கம்.
3. இரண்டாம் பாதியில் வரும் போர்க்காட்சிகள்.

பலவீனம்

1. வழக்கமான கதையும், சற்று குழப்பமான ஃப்ளாஷ்பேக்கும்
2. கேட்பதற்கு சுவாரஸ்யம் தராத பாடல்கள்

மொத்தத்தில்...

120 ரூபாய் கொடுத்து படம் பார்க்க வரும் ரசிகனுக்கு, 200 ரூபாய் திருப்பிக்கொடுத்த திருப்தியைத் தர முயன்றிருக்கிறார் ராஜமௌலி. ஒட்டுமொத்த குழுவிற்கும் கிடைத்த வெற்றி இது. லாஜிக் விஷயங்கள், க்ளிஷேக்கள் போன்றவற்றை மறக்கடிக்கச் செய்கிறது ‘பாகுபலி’யின் பிரம்மாண்டம்!

ஒரு வரி பஞ்ச் : இந்திய சினிமாவில் ஹாலிவுட் தரம்!

ரேட்டிங் : 7.5/10

(Baahubali Movie Review, Bahubali Movie Review, Baahubali Review, Baahubali Tamil Movie Review)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகுபலி 2 - பலே பலே பாடல் வீடியோ


;