நன்றி தெரிவிப்பதிலும் வித்தியாசம் காட்டிய கமல்ஹாசன்!

நன்றி தெரிவிப்பதிலும் வித்தியாசம் காட்டிய  கமல்ஹாசன்!

கட்டுரை 9-Jul-2015 10:40 AM IST VRC கருத்துக்கள்

கமல்ஹான் எதையும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர். அதன்படியே ‘பாபநாசம்’ படத்தின் வெற்றிக்கு உறுதுணை புரிந்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியையும் வித்தியாசமாக செய்து காட்டினார்!

சென்னையிலுள்ள இமேஜ் ஆடிட்டோரியத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் ‘பாபநாசம்’ படத்தில் இடம்பெறும் சுயம்புலிங்கத்தின் வீடான ராணி இல்லம், காவல் நிலையம், டீக்கடை முதலானவற்றை மேடையில் செட்டாக அமைத்திருந்தனர். அதுமட்டுமல்லாமல் ‘பாபநாசம்’ படத்தில் நடித்த அனைவரும் படத்தில் ஏற்று நடித்த கேரக்டர்களில் அவர்கள் அணிந்த அதே உடைகளுடன் மேடையில் அதே கதாபாத்திரங்களாக காட்சி அளித்தனர். இவர்களுடன் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசஃப், இசை அமைப்பாளர் ஜிப்ரான் உட்பட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் மேடையில் தோன்றினர். நாடகத்தை போன்று எழுத்தாளர் சுகா தனது பின்னணி குரலில் ‘பாபநாச’த்தில் பங்கேற்ற ஒவ்வொரு கலைஞர்களையும் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது பழங்காலத்தில் நாடக நிகழ்ச்சிகளை பார்த்த உணர்வு ஏற்பட்டது.

விழா மேடையில் ஒவ்வொருவரும் ஓரிரு வார்த்தைகளுடன் நன்றி தெரிவித்து பேசினர். அதனை தொடர்ந்து கமல்ஹாசன் நன்றி தெரிவித்து பேசும்போது,

‘‘விஸ்வரூபம், ‘தசாவதாரம்’ மாதிரியான பிரம்மாண்ட படங்கள் தந்ததை விட சிறப்பான பாராட்டுக்களையும், வெற்றியையும் இப்படத்திற்கு கொடுத்த அனைவருக்கும் நன்றி! 40 நாட்களில் இப்படத்தை எடுத்து முடித்தோம். பல நாட்கள் மழை பெய்து செட் கரைந்து போயிருக்கிறது. அப்போதெல்லாம் ஒரு பக்கம் வேலை நடக்கும். இன்னொரு பக்கம் நாங்கள் நடித்தோம். அதனால்தான் 40 நாட்களில் இப்படத்தை எடுக்க முடிந்தது.

இதுபோன்ற கதைகள் எப்போதாவது தான் அமையும். அப்படியொரு சிறந்த கதையை எனக்காக கொண்டு வந்த ஜீத்து ஜோசஃபுக்கு நன்றி. அதுமட்டுமல்ல இப்படத்தில் சுயம்புலிங்கம் கேரக்டரில் நடிக்க நான்தான் பொருத்தமானவர் என்று ஜீத்து ஜோசஃபிடம் மோகன்லால் கூறியிருக்கிறார். இந்நேரத்தில் அவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்ற கமல்ஹாசனிடம் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

தமிழ அரசு இப்படத்திற்கு வரிவிலக்கு தரவில்லையே?

இந்த படத்திற்கு ஏன் வரிவிலக்கு கொடுக்கவில்லை என்பதற்கான காரணத்தை இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்களே!

ஆனால் நீங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே?

வரிவிலக்கு அளிக்க மறுப்பதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் சரியாக இருந்ததால் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அரசு சரியான முடிவை தான் எடுத்திருக்கிறது.

நடிகர் சங்க விவகாரத்தில் நீங்களோ, ரஜினியோ தலையிடுவதில்லையே ஏன்?

இதுவரை எங்களை யாரும் அணுகவில்லை. அப்படி வந்திருந்தால் அதில் தலையிடுவோம், பேசுவோம்.

‘உலகநாயகன்’ என்று அழைக்கப்படும் நீங்கள் படத்தில் அடி வாங்குவது போல் நடித்திருப்பது ஏன்?

என்னை பொறுத்தவரை பட்டங்களை விரும்பாதவன் நான்! ரசிகர்கள் அவர்களது சந்தோஷத்திற்காக அப்படி அழைக்கிறார்கள். என்னை நடிகன் என்று சொல்வதையே நான் மிகவும் விரும்புகிறேன்.

நீங்கள் நிறைய கதைகளை எழுதி வைத்திருக்கிறீர்கள்! அந்த கதைகளை ஜீத்து ஜோசஃப் போன்ற மலையாள இயக்குனர்களை வைத்து இயக்குவீர்களா?

சினிமாவுக்கு மொழி கிடையாது. அப்படி தமிழ், மலையாளம் என்று மொழி பார்த்திருந்தால் எம்.ஜி.ஆர். நமக்கு கிடைத்திருக்க மாட்டார். சொல்லப்போனால் நான் பாதி மலையாளி! இங்குள்ளவர்களுக்கு தான் நான் பரமக்குடி காரன் என்று தெரியும். கேரளாவில் உள்ளவர்களுக்கு நான் மலையாளி தான்!

இவ்வாறு கமல்ஹாசன் கேள்விகளுக்கு பதில் அளித்தார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சபாஷ் நாயுடு மோஷன் போஸ்டர்


;