பேபி – விமர்சனம்

பே(தா)ய் பாசம்!

விமர்சனம் 4-Jul-2015 11:16 AM IST Top 10 கருத்துக்கள்

Production : Sri Annamalaiyar Studios & R.K.Entertainers
Direction : D.Suresh
Starring : Manoj, Shira, Baby Srivarshini, Babay Sathanya, Anjali Rao
Music : Satheesh, Harish
Cinematography : Jones Anand
Editing : Bagath Sing

பேய் பட வரிசையில் மற்றுமொரு பேய் படம்! இயக்குனர் பாலாஜி சக்திவேலிடம் இணை இயக்குனராக பணியாற்றிய டி.சுரேஷ் இயக்கியிருக்கும் இந்த ‘பேபி’ என்ன சொல்ல வருகிறது?

கதைக்களம்

பிரிந்து வாழும் கணவன், மனைவி மனோஜ், ஷிரா! மனோஜிடம் அவந்திகா (பேபி சாதன்யா) என்ற குழந்தையும், ஷிராவிடம் அதிதி (பேபி ஸ்ரீவர்ஷினி) என்ற குழந்தையும் வளர்கிறது. அதிதி எப்போதும் ஒரு பொம்மையுடன் விளையாடிகொண்டிருப்பதோடு, அவளிடம் தனிப்பட்ட பல குணாதிசயங்களை காண்கிறார் ஷிரா! ஒரு கட்டத்தில் அதிதி தனக்குப் பிறந்த குழந்தை இல்லை என்று ஷிராவுக்கு தெரிய வருகிறது. ஷிரா இது பற்றி மனோஜிடம் கேட்க, அதிதி நமக்கு பிறந்த குழந்தை இல்லை, அவந்திகாதான் நம் சொந்த குழந்தை என்று நடந்த சம்பவங்களை கூறுகிறார். அதனை தொடர்ந்து இருவரும் இரு குழந்தைகளுடன் ஒன்றாக ஷிரா வீட்டில் வாழ ஆரம்பிக்கிறார்கள்! இந்நிலையில் அடிக்கடி ஒரு பேய் அதிதியை பின் தொடர்ந்து அவளிடம் பாசத்தை காட்டுகிறது. அதே நேரம் அதே பேய் வந்து அவந்திகாவை பயமுறுத்துகிறது. அதிதி யாருக்கு பிறந்த குழந்தை? அந்த பேய் யார்? பேயின் பிடியிலிருந்து குழந்தைகள் தப்பிக்கிறார்களா? இல்லையா? இதுபோன்ற பல கேள்விகளுக்கு விளக்கம் தரும் படமே ‘பேபி’.

படம் பற்றிய அலசல்

வழக்கமாக பேய் படங்களில் வரும் பேய் ஆட்டம் இல்லை, அலறல் சத்தம் இல்லை, அதிகபடியான கிராஃபிக்ஸ் வேலைகள் இல்லை! ஐந்தே ஐந்து கதாபாத்திரங்கள், ஒரு அடுக்கு மாடி குடியிருப்பின் 12-ஆவது மாடியில் இருக்கும் ஒரு வீடு, அந்த வீட்டுக்கு செல்லும் லிஃப்ட், நடந்து வரும் பாதை, மொட்டை மாடி, ஒரு மருத்துவமனை இது மட்டும்தான் இப்படத்தின் கதைக்களம். அதை வைத்து சென்டிமென்ட் கலந்து, திகிலடைய செய்யும் விதமாக விறுவிறுப்பான ஒரு ஹாரர் படமாக இயக்கியிருக்கிறார் டி.சுரேஷ்! முதல் படத்திலேயே தனது திறமையை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்து, குருநாதரின் பெயரை காப்பாற்றியுள்ளார் சுரேஷ்!

முதலில் ஆர்வமாக அதிதியை தத்து எடுக்கும் மனோஜ் பின்னர் அதே குழந்தையை வெறுப்பது கதையில் முரண்பாடாக இருக்கிறது. இதுபோன்ற சில காட்சிகளை தவிர்த்து பார்த்தால் ‘பேபி’ வித்தியாசமான ஒரு பேய் படம் தான்! ஒரு ஹாரர் படத்திற்கு என்ன மாதிரியான பின்னணி இசை, ஒளிப்பதிவு வேண்டுமோ அதை நன்கு அறிந்து இயக்குனருடன் ஒன்றி பயணித்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளரும், இசை அமைப்பாளர்களும்! விஷுவல் எஃபெக்ட்ஸ் செய்த பீட்டரின் பங்களிப்பும் பாராட்டத்தக்கது.

கலைஞ்ரகளின் பங்களிப்பு

இப்படத்தில் உண்மையிலேயே மனோஜ் அந்த கேரக்டருடன் ஒன்றி சிறப்பாக நடித்துள்ளார். மனோஜின் மனைவியாக வரும் ஷிரா, அதிதியின் தாயாக வரும் அஞ்சலி ராவ் ஆகியோருடன், இரு குழந்தைகளும் யதார்த்தமான நடிப்பை வழங்கி படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றனர். ஸ்ரீவர்ஷினி, தன்னை எப்போதும் கவனித்து வந்த அம்மா, அவந்திகா வந்ததும் அவளிடம் அதிகம் பாசத்தை காட்டுவதை கண்டு ஏங்கும் காட்சிகளில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துகிறாள் என்றால், அவந்திகா பேயை பார்த்து பயப்படுவது, போகிற இடங்களில் எல்லாம் பேய் இருக்குமோ என்று பயந்து நடுங்குவது என படம் முழுக்க அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

பலம்

1. சென்டிமென்ட் கலந்து விறுவிறுப்பாக அமைக்கப்பட்டுள்ள திரைக்கதையும், இயக்கமும்.
2. மிரட்டலான பின்னணி இசையும், ஒளிப்பதிவும்
3. பொழுதுபோக்கு விஷயங்களையும், அதிகபடியான கிராஃபிக்சையும் நம்பாமல் கதையை மட்டும் நம்பி பயணித்திருப்பதும், கிளைமேக்ஸும்!

பலவீனம்

1.தேவையில்லாத இரண்டு பாடல்கள்
2. ஒரு சில லாஜிக் மீறல்கள்

மொத்தத்தில்...

வழக்கமான பேய் படங்களை பார்த்து சலித்து போனவர்களுக்கு இந்த ‘பேபி’யை பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. தியேட்டரில் பார்க்கும்போது வித்தியாசமான பேய் பட அனுபவத்தை தருவாள் இந்த பேபி!

ஒரு வரி பஞ்ச் : பே(தா)ய் பாசம்!

ரேட்டிங் : 4.5/10

(Baby Review, Baby Movie Review, Baby Tamil Movie Review, Baby Horrer Movie Review)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;