பாபநாசம் - விமர்சனம்

சுவாரஸ்யம் வற்றாத ஜீவநதி!

விமர்சனம் 3-Jul-2015 12:49 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Jeethu Joseph
Production : Wide Angle Creations, Raj Kumar Theatres
Starring : Kamal Haasan, Gautami, Nivetha Thomas
Music : M. Ghibran
Cinematography : Sujith Vaassudev
Editing : Ayoob Khan
Release Date : 3 July 2015

மோகன்லாலின் அபார நடிப்பில் வெளிவந்து, மலையாள திரையுலக வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த ‘திருசியம்’ படத்தின் ரீமேக் உலகநாயகனின் கைவண்ணத்தில் இங்கே ‘பாபநாசம்’ ஆகியிருக்கிறது... என்ன செய்திருக்கிறார் நம் சுயம்புலிங்கம்?

கதைக்களம்

2 மகள்கள், மனைவி, தான் என பாபநாசத்தில் அமைதியாகவும், கௌரவமாகவும் வாழ்ந்து வருபவர் கமல். குருவிக்கூடு போன்று பார்த்துப் பார்த்து பாதுகாப்பாக கமல் வளர்த்து வந்த குடும்பத்தை திடீரென உள்ளே புகுந்து ஒருவன் கலைக்க முயல, அதைத் தடுக்கும் போராட்டத்தின்போது அவன் இறந்துவிடுகிறான். கொலை விஷயம் போலீஸுக்குத் தெரிந்தால், தானும் தன் குடும்பமும் ஜெயிலுக்குப் போக வேண்டுமே என நினைக்கும் கமல் ஒரு மிகப்பெரிய திட்டம் ஒன்றைத் தீட்டுகிறார். அது என்ன திட்டம்? கமலும் அவரது குடும்பமும் போலீஸிடமிருந்து தப்பியதா? இல்லையா? கமல் குடும்பத்திற்கு வில்லனாக வந்தது யார்? என்பன போன்ற பல கேள்விகளுக்கு விடையாகப் பாய்கிறது இந்த ‘பாபநாசம்’.

படம் பற்றிய அலசல்

பொதுவாக வேறொரு மொழியில் வெற்றிபெற்ற படத்தை ரீமேக் செய்து வெற்றிபெறுவது எளிதான காரியமே. ஆனால், அது இங்கிருக்கும் ரசிகர்களுக்கு அதிகம் பரிட்சயம் இல்லாத கதையாகவும், ஆக்ஷன் அதிரடிப் படமாகவும் இருக்கும்பட்சத்தில்தான். ‘திருசியம்’ படத்தின் வெற்றி ஊரறிந்த விஷயம். அதிலும் இது ஒரு குடும்ப த்ரில்லர் கதை வேறு. ஒரு த்ரில்லர் கதையின் சுவாரஸ்ய முடிச்சுகள், அதை அவிழ்க்கும் விதங்கள் என அத்தனையும் தெரிந்த பின்பு அந்தப் படத்தை மீண்டும் ஒரு ரசிகனைப் பார்க்க வைப்பதென்பது மிகச் சவாலான காரியம். அந்த சவாலான காரியத்தை தன் அற்புதமான நடிப்பின் மூலம் கமலும், அருமையான இயக்கம் மூலம் ஜீத்து ஜோசப்பும் சாத்தியமாக்கியிருக்கிறார்கள்.

‘திருசியம்’ படத்தின் கதையில் எந்தவித சிறு மாற்றமும் செய்யாமல், அதேநேரம் தமிழ் ரசிகர்களின் ‘நேட்டிவிட்டி’க்குத் தகுந்தபடி இப்படத்தை மறுஉருவாக்கம் செய்திருக்கிறார் இயக்குனர் ஜீத்து ஜோசப். கமல் போன்ற ஒரு ஜாம்பவானை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென்பது அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். மோகான்லாலை இயக்கியவராயிற்றே! ரொம்பவும் எளிமையான கதைக்களம், அதில் சிக்கலான சுவாரஸ்ய முடிச்சுகள், அதை சாமர்த்தியமாக கட்டவிழ்த்திருக்கும் விதம் என, ஒரு படத்தின் வெற்றிக்கு திரைக்கதைதான் ஹீரோ என்பதை ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறது இப்படம்.

அழகான ஒளிப்பதிவு, ரம்மியமான இசை, 3 மணி நேரம் செல்வதே தெரியாமல் காட்சிகளை கோர்த்திருக்கும் விதம் என இப்படத்தின் பாசிட்டிவ் பாயின்ட்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இப்டத்தின் நெகட்டிவ் பக்கங்களை யோசிக்கவே முடியாதபடி கட்டிப்போடுகிறது ‘பாபநாச’த்தின் விறுவிறு பாய்ச்சல்!

நடிகர்களின் பங்களிப்பு

‘கமல் அருமையாக நடித்திருக்கிறார்’ என்று விமர்சனம் செய்வதைப்போல் ‘க்ளிஷே’வான ஒரு விஷயம் தமிழ்சினிமாவில் வேறொன்றுமே இருக்க முடியாது. ஆனாலும் சுயம்புலிங்கத்தின் விஸ்வரூபத்தைப் பற்றி ஓரிரு வார்த்தைகளாவது ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியம். மோகன்லாலின் கேரக்டரில் கமல் நடிக்கிறார் என்ற செய்தி வந்தபோது, அவரைத் தவிர வேறு யாரும் இந்த கேரக்டரை செய்ய முடியாது என பெரும்பாலானோரும், கமலால் மோகன்லால் அளவுக்கு இயல்பாக செய்ய முடியாது என இன்னொரு சாரரும் கருத்துக்களை தெரிவித்தனர். இவை எல்லாவற்றுக்கும் ‘பாபநாசம்’ படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் பதில் சொல்லியிருக்கிறார் உலகநாயகன். கமல் எனும் நடிகனை இப்படத்தில் எங்கு தேடினாலும் கிடைக்கமாட்டார். சுயம்புலிங்கம் மட்டுமே நம் மனதிற்குள் மண்டியிட்டு அமர்ந்திருக்கிறார். சல்யூட் கமல் ஜி!

கமலின் மனைவியாக கௌதமி சற்று வயதானவர்போல் தோன்றினாலும், தன் அனுபவ நடிப்பின் மூலம் அதை மறக்கடிக்கச் செய்துவிட்டார். அதேபோல் கமலின் மகள்களாக நடித்திருக்கும் நிவேதா தாமஸ், எஸ்தர் அனில், போலீஸ் கான்ஸ்டபிளாக வரும் கலாபவன் மணி, ஐஜியாக வரும் ஆஷா சரத், டீக்கடை ஓனர் எம்.எஸ.பாஸ்கர் என ஒவ்வொருவரும் அசத்தியிருக்கிறார்கள். குறிப்பாக ஐஜியின் கணவராக நடித்திருக்கும் ஆனந்த் மகாதேவன் நடிப்பில் கமலுக்கு நிகராக நின்று விளையாடியிருக்கிறார். க்ளைமேக்ஸில் கமலிடம் உரையாடும் அந்த ஒரே டேக் காட்சி ஒன்று போதும்.... வாழ்த்துக்கள் ஆனந்த் மகாதேவன்!

பலம்

1. ‘நடிப்பில் எப்பவும் நான் ராஜாதான்’ என சொல்லாமல் சொல்லியிருக்கும் கமல்.
2. எத்தனைமுறை பார்த்தாலும் சலிப்பூட்டாத வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் திரைக்கதை.
3. கதாபாத்திர வடிவமைப்பும், அதில் நடித்தவர்களின் பங்களிப்பும்.
4. ஒவ்வொரு காட்சியையும் புத்திசாலித்தனமாக கையாண்டிருக்கும் இயக்கம்.

பலவீனம்

படம் நமக்குள் ஏற்படுத்தும் பாதிப்பினால், இப்படத்தின் குறைகள் எதுவும் நம் கண்ணுக்குப் பெரிதாக புலப்படவில்லை என்பதே உண்மை!

மொத்தத்தில்...

2 மணி நேரம் தியேட்டருக்குள் ரசிகனை அமர வைப்பதற்கே சினிமாக்காரர்கள் படாதபாடுபட்டுக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில்... குத்துப்பாட்டு, வெட்டிச்சண்டை, கிளாமர் காட்சிகள், கிராபிக்ஸ் பூச்சுற்றல்கள் என எதுவுமே இல்லாமலும் முழுதாக 3 மணிநேரம் ரசிகனை நின்று நிதானமாக ரசிக்க வைக்க முடியும் என நிரூபித்திருக்கிறது ‘பாபநாசம்’. அதைச் செய்து காட்டியவர்கள் இரண்டு ஹீரோக்கள். ஒருவர் உலகநாயகன். இன்னொருவர் திரைக்கதை!

ஒரு வரி பஞ்ச் : சுவாரஸ்யம் வற்றாத ஜீவநதி!

ரேட்டிங் : 7/10

(Papanasam Movie Review, Papanasam Tamil Movie Review, Papanasam Review, Papanasam)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தூங்காவனம் படப்பிடிப்பில் ஸ்ருதி ஹாசன் - வீடியோ


;