‘‘அப்பாவிடம் கற்றுக்கொண்ட பாடம்’’ - நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

‘‘அப்பாவிடம் கற்றுக்கொண்ட பாடம்’’ - நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

செய்திகள் 29-Jun-2015 9:32 AM IST VRC கருத்துக்கள்

நடிகர் சிவகுமார் தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 35 ஆண்டுகளாக ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த மாணவ மாணவிகளைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி வருகிறார். தனது 100-வது படத்தின்போது சிவகுமார் கல்வி அறக்கட்டளையை தொடங்கியவர், கடந்த 36 ஆண்டுகளாக தகுதியான மாணவ மாணவிகளை அடையாளம் கண்டு தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார். இந்த ஆண்டுக்கான சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 36-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா சென்னை சர்.பிட்டி தியாகராயர் கலையரங்கில் நேற்று (28-6-15) சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் 25 மாணவ மாணவிகளுக்கு தலா ரூபாய் 10,000 வீதம் மொத்தம் 2,50,000 பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாடு குழு நடத்தும் ஏழை மாணவர்களுக்கான ‘தாய்தமிழ் பள்ளி’க்கு 1 லட்சமும், முதல் தலைமுறையாக படிக்கும் ஏழை மாணவர்களின் வளர்ச்சிக்காக பாடுபடும் வாழை இயக்கத்திற்கு 2 லட்சமும் வழங்கப்பட்டது. நடிகர் சிவகுமாரின் மகள் பிருந்தா சிவகுமார் நிகழ்ச்சியை இறைவணக்கம் பாடி தொடங்கி வைத்தார். கார்த்தி அனைவரையும் வரவேற்றார். மாணவ, மாணவிகளுக்கு சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இதனைத் தொடர்ந்து சிவகுமார் பேசும்போது,

‘‘இங்கு பரிசு பெற்றிருக்கும் உங்கள் அனைவருக்கும் உண்மையிலேயே முன்னோடி நான் தான். சிறுவயதில் படிக்க கஷ்டப்பட்டவன் நான்! ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொண்டால் போதும்! கல்வி, ஒழுக்கம் இவை இரண்டும் இருந்தால் நீங்கள் உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் சாதிக்கலாம். 1979-ஆம் மே மாதம் தொடங்கப்பட்ட ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’ தொடர்ந்து ப்ளஸ்-டூ தேர்வில் உயர்ந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. 30 ஆண்டுகள் என் பொறுப்பில் இயங்கிய அறக்கட்டளையை அதற்கு பிறகு ‘அகரம் ஃபவுண்டேஷன்’ பொறுப்பேற்று சிறப்பாக கல்விப்பணி செய்து வருகிறது.

சிறிய அளவில் ஏழை மாணவர்களுக்கு செய்த உதவியை என்னுடைய பிள்ளைகள் சூர்யா, கார்த்தி ஆகியோர் இப்போது நல்ல முறையில் செய்து வருகிறார்கள். கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள் படிக்க எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். கல்வி ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை எந்தளவு உயர்த்தும் என்பதையும் நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். என்னைப்போல் ஏழைக் குடும்பத்தில் பிறந்து நன்றாக படிக்கிற பிள்ளைகளுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வதில் மிகுந்த மனநிறைவு அடைகிறேன். தடைகளைத் தாண்டி பெற்ற முதல் வெற்றி இது! இன்னும் போக வேண்டிய பயணம் வெகுதூரம் உள்ளது. மாணவர்கள் தங்களுடைய கவனம் சிதறாமல் தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்’’ என்று பேசினார்.

‘அகரம் ஃபவுண்டேஷன்’ நிறுவனர் சூர்யா பேசும்போது, ‘‘ஒரு காரியத்தை தொடங்குவது பெரிய விஷயம் இல்லை. தொடங்கிய காரியத்தை தொடர்ந்து நடத்துவதுதான் பெரிய விஷயம். அப்பாவிடம் நாங்கள் கற்றுக்கொண்ட முக்கியமான பாடம் அது. ஆரம்பிக்கும் முன்பு ஆயிரம் முறை யோசிப்பார். ஆரம்பித்துவிட்டால், அந்த காரியம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று பாடுபடுவார். 36 வருஷமா நடக்கும் இந்த நிகழ்வு அதற்கு ஒரு உதாரணம்.
‘அகரம் ஃபவுண்டேஷன்’ நம் சமூகத்தில் இருக்கும் அடித்தட்டு மக்களின் கல்வி வளர்ச்சிக்கு தன்னால் முடிந்த பணிகளை செய்து வருகிறது. இந்த ஆண்டோடு அகரம் அறக்கட்டளை மூலம் உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 1300 பேராக உயர்கிறது. தகுதியுள்ள ஏழை மாணவர்களின் கல்லூரி கனவை பல நல்ல உள்ளம் கொண்டவர்களின் உதவியோடு நனவாக்கி இருக்கிறோம். தரமான கல்வி ஏழை மாணவர்களுக்கு கிடைக்க கரம் கோர்த்து உதவும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இங்கு வந்திருக்கும் அனைத்து மாணவ மாணவிகளும் அப்பா சொன்ன கல்வி, ஒழுக்கம் இவை இரண்டையும் மனதில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள். உங்களுக்கு வெற்றி நிச்சயம்’’ என்றார்.

நிகழ்ச்சியின் இறுதியில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு நன்றியுரை ஆற்றினார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - டிரைலர்


;