யாகாவாராயினும் நா காக்க – விமர்சனம்

யாகாவாராயினும் ‘நட்பு’ காக்கும்!

விமர்சனம் 27-Jun-2015 11:27 AM IST Top 10 கருத்துக்கள்

Prodution : Aadarsha Chithralaya
Direction : Sathya Prabhas
Starring : Aadi, Nikki Galrani, Mithun Chakravarthy, Nasser, Pasupathy
Music : Prasan, Praveen, Shyam
Cinematography : N.Shanmuga Sundaram
Editing : V.J.Sabu Josaph

ஆதியின் அண்ணன் சத்யபிரபாஸ் இயக்கி, ஆதியின் தந்தையும், பிரபல தெலுங்கு பட இயக்குனருமான ரவிராஜா பின்னி ஷெட்டி தயாரித்திருக்கும் படம்.

கதைக்களம்

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஆதிக்கு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் நண்பர்களாக இருக்கிறார்கள்! கல்லூரியில் படிக்கும் இவர்கள் வாழ்க்கையை ஜாலியாக வாழ்வேண்டும் என்று நினைத்து அப்படி வாழ்ந்தும் வருபவர்கள். ஒரு நட்சத்திர ஹோட்டலில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஆதியின் நண்பர்கள் ஹோட்டலில் பாய் ஃப்ரெண்டுடன் வந்த ரிச்சா பலோட்டை மொபைலில் படம் பிடிக்கிறார்கள். ரிச்சா பலோட் யார் என்றால் மும்பையையே ஆட்டிப் படைக்கும் பெரிய தாதா முதலியாரின் (மிதுன் சக்ரவர்த்தி) மகள்! படம் பிடித்த விஷயம் பெரிய பிரச்சனையாகி போலீஸ் அடி, தடி, மோதல் என்று செல்ல, ஒரு கட்டத்தில் ரிச்சா பலோட் காணாமல் போகிறார். விஸ்வரூபம் எடுக்கும் முதலியார், ஆதியின் நண்பர்களுக்கு ஒவ்வொரு விதத்தில் பிரச்சனைகள் கொடுக்க, அவரை சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள்! இதிலிருந்து ஆதியும் அவரது நண்பர்களும் விடுபடுகிறார்களா இல்லையா? என்பதே ‘யாகாவாராயினும் நா காக்க’.

படம் பற்றிய அலசல்

திருக்குறளில் வரும் ஒரு வாக்கியத்தை தலைப்பாக்கி, அந்த வாக்கியத்தின் அர்த்தத்தை பிரதிபலிக்கும் வண்ணம் ஒரு திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்கியிருக்கும் அறிமுக இயக்குனர் சத்ய பிரபாஸுக்கு ஒரு சபாஷ் போடலாம்! வாலிப வயதில் விளையாட்டாக செய்யும் ஒரு சாதாரண விஷயம் எப்படி பூதாகாரமாகி அது வாழ்க்கையையே பாதிக்க வைக்கிறது என்பதை அழகாக இப்படத்தில் சித்தரித்துள்ளார் இயக்குனர். நண்பர்களின் ஜாலி, கலாட்டா, நிக்கி கல்ராணியை சந்தித்ததிலிருந்து ஆதிக்கு அவள் மீது ஏற்படும் காதல் என்று இடைவேளை வரை ஜாலியாக, நேர்த்தியாக நகரும் திரைக்கதை, முதலியார் கதைக்குள் நுழைந்ததும் சூடுபிடிக்கிறது. ஆனால் இடைவேளைக்குப் பிறகு கதையில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்திருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது. இடைவேளைக்குப் பிறகு வரும் சில காட்சிகளில் எடிட்டர் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம்! படத்தின் விறுவிறுப்புக்கு கை கொடுத்துள்ளது இசையும், ஒளிப்பதிவும். நட்புக்கு இலக்கணமாக அமைந்திருக்கிறது இப்படத்தின் கிளைமேக்ஸ்!

நடிகர்களின் பங்களிப்பு

ஆதி தனது கேரக்டருக்கு ஏற்ற நடிப்பை சிறப்பாக வழங்கியுள்ளார். இடைவேளை வரை ஜாலியான பையனாக வலம் வந்தவர், மும்பைக்கு சென்று முதலியாரை சந்தித்த்திலிருந்து அடி தடி ஆக்‌ஷனில் அதகளம் பண்ணுகிறார். டாஸ்மாக் கடைக்கு சென்று ‘கூல்’ பீர் மற்றும் மெடிக்கல் ஸ்டோருக்கு சென்று ‘ஆணுறை’ கேட்டு வாங்கும் நிக்கில் கல்ராணி குறும்புக்கார பெண்ணாக வந்து இளசுகளை உசுபேத்துகிறார். மும்பை தாதா முதலியார் வேடத்திற்கு சரியாக பொருந்தியிருக்கிறார் மிதுன் சக்கரவர்த்தி! போலீஸ் அதிகாரியாக வரும் நாசர், ஆதியின் அப்பாவாக வரும் நரேன், சென்னை தாதாவாக வரும் பசுபதி, முதலியாரின் கையாளாக வரும் கிட்டி, ஆதியின் நண்பர்களாக வரும் சித்தார்த், ஸ்ரீகார்த்திக், ஷ்ராவன் மற்றும் ரிச்சா பலோட் என படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேரோட பெர்ஃபார்மென்ஸும் பெர்ஃபெக்ட்!

பலம்

1.படத்தின் முதல் பாதி
2.ஒளிப்பதிவும், அறிமுக இசை அமைப்பாளர்களின் இசையும்
3. நடிகர், நடிகைகளின் கேரக்டர்களுக்கு ஏற்ற பெர்ஃபாமென்ஸ்

பலவீனம்

1. இரண்டாம் பாதியின் ஓவர் டோஸ் டிவிஸ்ட்
2. லாஜிக் மீறல்களுடனான கிளைமேக்ஸின் நீளம்
3. படத்தொகுப்பு

மொத்தத்தில்

வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும், இல்லையென்றால் வாழ்க்கையே சின்னா பின்னமாகி விடும் என்ற கருத்துடன், நட்பின் ஆழத்தையும் பிரதிபலிக்க வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்திற்கு இளைஞர்களின் ஆதரவு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

ஒருவரி பஞ்ச் : யாகாவாராயினும் ‘நட்பு’ காக்கும்!

ரேட்டிங் : 4.5/10

(Yagavarayinum Naa Kaakka Review, Yagavarayinum Naa Kaakka Movie Review, Yagavarayinum Naa Kaakka Tamil Movie Review)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;