இன்று நேற்று நாளை - விமர்சனம்

சுவாரஸ்யமான காலப் பயணம்!

விமர்சனம் 26-Jun-2015 1:49 PM IST Top 10 கருத்துக்கள்

Prodution : Thirukumaran Entertainment, Studio Green
Direction : Ravi Kumar. R
Starring : Vishnu, Mia George, Karunakaran
Music : Hiphop Tamizha
Cinematography : A. Vasanth
Editing : Leo John Paul

புதுப்புது ஐடியாக்களை களம் காண்பதில் கைதேர்ந்த திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து ‘இன்று நேற்று நாளை’ படத்தை உருவாக்கியிருக்கிறது. தமிழ் சினிமாவின் முதல் ‘டைம் டிராவல்’ படத்திற்கு நேரம் எப்படியிருக்கிறது?

கதைக்களம்

நிகழ்காலத்திலிருந்து முந்தைய காலத்திற்குச் சென்று, மீண்டும் நிகழ்காலத்திற்கே திரும்பும் ‘டைம் டிராவல் இயந்திரம்’ ஒன்று விஷ்ணு, கருணாகரன் கையில் சிக்குகிறது. அதை வைத்துக்கொண்டு அவர்கள் தங்கள் வாழ்க்கையை வசதியாக மாற்றுகிறார்கள். எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்க, அந்த இயந்திரத்தின் மூலம் ஒருமுறை பழைய காலத்திற்குச் சென்று திரும்பும்போது கருணாகரன் செய்யும் காரியம் ஒன்றால், விஷ்ணுவுக்கும் அவருடைய காதலி மியாவுக்கும் உயிர்போகும் அபாயம் ஏற்படுகிறது. எதனால் அப்படி ஆகிறது? அந்த பிரச்சனையிலிருந்து அவர்கள் மீண்டார்களா, இல்லையா? என்பதே ‘இன்று நேற்று நாளை’ படத்தின் கதைக்களம்.

படம் பற்றிய அலசல்

ஹாலிவுட்டில் எப்போதிலிருந்தோ பயன்படுத்தத் தொடங்கிவிட்ட ‘டைம் டிராவல்’ கான்செப்ட்டை தமிழ் சினிமாவில் முதல்முறையாக அறிமுகப்படுத்தியிருக்கும் இயக்குனர் ஆர்.ரவிக்குமாருக்கு முதலில் ஒரு ஸ்பெஷல் பொக்கே!

எதிர்காலத்தில் ஆரம்பிக்கும் படம், இறந்தகாலத்திற்குச் சென்று, பின் நிகழ்காலத்தில் முடிவதுபோல் படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள். தேவையில்லாத அறிமுகக் காட்சிகளைத் தவிர்த்துவிட்டு படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே கதைக்குள் சென்றிருப்பது சிறப்பு. அதோடு படத்தின் முதல்பாதி விறுவிறுப்பாகவும் பயணிக்கிறது. இரண்டாம்பாதியின் ஆரம்பம் கொஞ்சம் படத்தை இழுத்தடிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், க்ளைமேக்ஸை கச்சிதமாக அமைத்திருக்கிறார்கள்.

டெக்னிக்கலாக இப்படம் பட்ஜெட்டிற்கு உட்பட்டு சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறது. கிராஃபிக்ஸ் காட்சிகளையும் நன்றாகவே உருவாக்கியிருக்கிறார்கள். தேவையில்லாத காமெடியையும், பாடல்களையும் தவிர்த்திருப்பது படத்தின் கூடுதல் பலம்.

நடிகர்களின் பங்களிப்பு

தன்னுடைய மார்க்கெட் வேல்யூ தெரிந்து, அதற்கேற்ற கதைகளை கச்சிதமாக தேர்வு செய்து வருகிறார் விஷ்ணு. ஒவ்வொரு படத்திலும் அவரின் நடிப்பிலும் நல்ல மெச்சூரிட்டி கூடிக்கொண்டே வருகிறது. தொடர்ந்து இதேபோன்ற கதைகளை தேர்வு செய்யும் பட்சத்தில், நிச்சயம் தனக்கென ஒரு தனி இடத்தை தமிழ்சினிமாவில் பிடிப்பார் விஷ்ணு. வாழ்த்துக்கள் பிரதர்! ‘அமரகாவியம்’ மியாவிற்கு பெரிய கேரக்டர் இல்லை. ஆனால், கிடைத்த காட்சிகளில் ஜொலித்திருக்கிறார். படம் முழுக்க ஹீரோவுடன் வரும் காமெடியன் வேடம் கருணாகரனுக்கு. முழுப்படமும் போரடிக்காமல் நகர்வதற்கு பெரிய ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார். வில்லனாக சாய் ரவி, மியாவின் அப்பாவாக ஜெயப்பிரகாஷ் ஆகியோருக்கும் நல்ல கதாபாத்திரங்கள். சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

பலம்

1. புதிய கான்செப்டை (டைம் டிராவல்) தமிழ் சினமாவிற்கு அறிமுகம் செய்து வைத்திருப்பது.
2. திரைக்கதை (குறிப்பாக படத்தின் முதல்பாதி)
3. டெக்னிக்கல் விஷயங்கள்

பலவீனம்

1. சிற்சில லாஜிக் ஓட்டைகளும், இரண்டாம்பாதியின் ஒருசில காட்சிகளும்
2. காதல் காட்சிகளை, ரசிகர்கள் நெஞ்சில் பதியும் அளவிற்கு இன்னும் கொஞ்சம் அழுத்தமாக உருவாக்கியிருக்கலாம்.

மொத்தத்தில்...

ரொம்பவும் சிக்கலான, லாஜிக் விஷயங்கள் கவனமாகக் கையாளப்பட வேண்டிய, பட்ஜெட் எகிறக்கூடிய அபாயமுள்ள ஒரு கதைக்களத்தைக் கையிலெடுத்து, அதை நம்மூர் ரசிகர்களுக்கு எந்தளவுக்கு சொன்னால் புரியும் என்பது தெரிந்து விளையாடியிருக்கிறார்கள் ‘இன்று நேற்று நாளை’ படக்குழுவினர். சின்ன சின்ன குறைகள் தவிர்த்து இப்படம் தமிழ்சினிமாவில் ஒரு புதிய முயற்சி மட்டுமல்ல, வரவேற்கப்பட வேண்டிய படமும் கூட!

ஒரு வரி பஞ்ச்: சுவாரஸ்யமான காலப் பயணம்!

ரேட்டிங் : 5.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

அடுத்த பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாவீரன் கிட்டு - கண்ணடிக்கல பாடல் வீடியோ


;