கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!

கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!

கட்டுரை 24-Jun-2015 10:12 AM IST Chandru கருத்துக்கள்

தனது கவிதைகள், பாடல்கள் மூலம் தமிழ் சினிமாவில் சாகாவரம் பெற்றவராக விளங்கும் கவியரசர் கண்ணதாசன் பிறந்த தினம் இன்று (ஜூன் 24). சிறுகூடல்பட்டியில் முத்தையாவாகப் பிறந்து, தனது படைப்பாற்றல் மூலம் கவியரசராகத் திழ்ந்த கண்ணதாசன் குறித்து ‘டாப் 10 சினிமா’ மாதஇதழில் நடிகர் சிவகுமார் எழுதிய ‘100 ஆண்டு தமிழ் சினிமா’ தொடரில் இடம்பெற்ற கட்டுரை இங்கே ரசிகர்களின் பார்வைக்கு...

‘‘ஜூபிடர் நிறுவனம் அறிமுகப்படுத்திய மற்றுமொரு சாதனையாளர் கண்ணதாசன். மாடர்ன் தியேட்டர்ஸ் நடத்தி வந்த ‘சண்டமாருதம்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்த கவிஞர் கண்ணதாசன் பாடல் வாய்ப்பு கேட்டு கோவைக்கு வந்து சோமுவை சந்தித்தார். பின்னாளில் உலகம் போற்றும் கவிஞராக கண்ணதாசன் வருவார் என சோமு மனதுக்குள் நினைத்தாரோ என்னவோ உடனே கண்ணதாசனை ஒரு பாட்டெழுதி வரச்சொல்ல அவரும் ‘கலங்காதிரு மனமே...’ எனத் தொடங்கும் பாடல் ஒன்றை எழுதினார். பாடல் நன்றாக இருக்கிறது என பாராட்டிவிட்டு, அப்போதே அவருக்கு 100 ரூபாய் சம்பளமாக கொடுத்தார் சோமு.

ஷேக்ஸ்பியரின் நாடகத்தை தழுவி எடுக்கப்பட்ட ‘கன்னியின் காதலி’ என்ற படத்தில் கண்ணதாசன் எழுதிய முதல் பாடல் இடம் பெற்றது. 1949ம் ஆண்டு ஜூபிடர் தயாரித்த இந்தப் படத்தில் கே.ராம்நாத் இயக்கத்தில் அஞ்சலி நடித்திருந்தார். ஜூபிடர் மூலம் உருவான கண்ணதாசன், பின்னாளில் தத்துவப் பாடல்களிலும் காதல் பாடல்களிலும் அங்கதச்சுவை, முரண்சுவையுடன் மொழியை புதிய வகையில் சொற்களை வரிசைப்படுத்திக் கையாள்வதில் அவருக்கு நிகர் அவரே!

முரண் சுவையில், ‘போலீஸ்காரன் மகள்’ படத்தில் வந்த ‘அவள் பறந்து போனாளே...’ என்ற பாடலில் ‘என் காதுக்கு மொழியில்லை... என் நாவுக்கு சுவையில்லை... என் நெஞ்சுக்கு நினைவில்லை... என் நிழலுக்கும் உறக்கமில்லை...’ என வரிகள் வருவது போன்ற பல பாடல்களை எழுதி புகழ் பெற்றார். இலக்கியத்தை தனது பாடல்களில் கையாளும் தனித்திறமையுடன் காதல் பாடல்களில் தனி ராஜாங்கமே நடத்திய அவரின் இடத்தை எட்டிப் பிடிக்க யாருமில்லை என்பதே உண்மை.

1967ல் ‘கந்தன் கருணை’ படம் வெளியானது. அதில் முருகனாக நடித்தது நான் (சிவகுமார்) செய்த பாக்கியம். அந்தப் படத்தில் அறுபடை பற்றி அழகாக சொல்லப்பட்டிருக்கும். திருவிளையாடல், திருமால் பெருமை, சரஸ்வதி சபதம், தில்லானா மோகனாம்பாள் என பல படங்களில் அவர் எழுதிய பாடல்கள் ஒவ்வொன்றும் வைரம். சாகாவரம் பெற்ற பல படைப்புகளைக் கொடுத்த அவரின் கடைசிப் பாடலாக அமைந்தது ‘மூன்றாம் பிறை’ படத்தில் இடம் பெற்ற ‘கண்ணே கலைமானே...’.

கோவை செழியன் ‘கவிஞர்’ என்ற பட்டத்தை கண்ணதாசனுக்கு வழங்கினார். பின்னாட்களில் கவியரசாராகவும் அழைக்கப்பட்டு நம் நினைவுகளில் நீங்கா இடம் பெற்றார் கண்ணதாசன்.’’

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;