அச்சாரம் - விமர்சனம்

காதல் பாதிப்பின் புதிய கோணம்

விமர்சனம் 20-Jun-2015 3:36 PM IST Top 10 கருத்துக்கள்

Directtion : Mohan Krishna
Production : Tharunisha Movies
Starring : Ganesh Venkatraman, Munna, Poona Kaur, Rekha, Gnanadhesh
Music : Srikanth Deva
Cinematography : R.K.Prathap
Editing : Suresh Ars

‘அபியும் நானும்’ படத்தில் ‘சிங்’ கேரக்டரிலும், ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் வந்து நம்மை கவர்ந்த கணேஷ் வெங்கட்ராமன் ஹீரோவாக நடித்திருக்கும் படம்!

கதைக்களம்

நேர்மையான போலீஸ் அதிகாரி கணேஷ் வெங்கட்ராமன். இவருக்கு திருமணத்தில் விருப்பமில்லை. தாயார் ரேகாவின் கட்டாயத்திற்கு பணிந்து உறவுக்காரப் பெண் பூனம் கௌரை திருமணம் செய்ய சம்மதிக்கிறார். ஆனால் பூனம் கௌர் முன்னாவை காதலிக்கிறார். அப்பாவுக்கு பயந்து கணேஷ் வெங்கட்ராமனை திருமணம் செய்ய சம்மதிக்கும் பூனம் கௌர், திருமண நாளன்று காதலன் முன்னாவுடன் ஊரை விட்டு ஓடிச் சென்று விடுகிறார்! மகனின் திருமணம் நின்றுபோனதால் அவமானம் தாங்க முடியாமல் ரேகா திருமண மண்டபத்திலேயே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்கிறார். தன் அன்பு தயாரின் சாவுக்கு காரணமான பூனம் கௌரையும், முன்னாவையும் தேடிக் கண்டு பிடித்து கொலை செய்ய முடிவு செய்யும் கணேஷ் வெங்கட்ராமன் அவர்களை கண்டு பிடித்து பழி வாங்கினாரா என்பதே ‘அச்சாரம்’ படம்!

படம் பற்றிய அலசல்

தனக்குப் பிடித்தவரை காதலித்து, வீட்டுக்கு பயந்து, பிடிக்காத ஒருவரை திருமணம் செய்ய சம்மதித்து ஏமாற்றும் ஒரு இளம் பெண்ணால் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி எப்படி ‘சைகோ கில்லர்’ ஆகிறார் என்பதை திரைக்கதை அமைத்து படமாக்கியிருக்கிறார் இயக்குனர் மோகன் கிருஷ்ணா. படத்தில், கதைக்கு சம்பந்தமே இல்லாமல் வரும் ஒரு சில காட்சிகள் நம்மை கொஞ்சம் போரடிக்க வைத்தாலும் ஒரு க்ரைம் த்ரில்லர் கதையை பல திருப்பங்களுடன் பக்குவமாக படமாக்கியிருக்கிறார். அத்துடன் இளம் தலைமுறையினருக்கு நல்ல ஒரு கருத்தையும் கூறியிருப்பதால் இயக்குனர் மோகன் கிருஷ்ணாவை பாராட்டலாம்! படத்தின் விறுவிறுப்புக்கு ஆர்.கே.பிரதாபின் ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையும் கை கொடுத்துள்ளன! ஆனால் பாடல்களில் கோட்டை விட்டிருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா!

நடிகர்களின் பங்களிப்பு

மிடுக்கான போலீஸ் அதிகாரி வேடம் என்றால் கணேஷ் வெங்கட்ராமனுக்கு கைவந்த கலை போலும்! ‘ஐ லைக் யூ’ என்று சொன்னவாறு அவர் ஒவ்வொருவரையாக போட்டு தள்ளும் து ஸ்டைல் தனி ரகம்! வீட்டில் குடும்ப பெண்ணாகவும், வெளியில் அல்ட்ரா மாடர்ன் பெண்ணாகவும் வரும் பூனம் கௌர், கிளாமர் மற்றும் ரொமாண்டிக் காட்சிகளில் கவர்கிறார்! ஆனால் எமோஷன் காட்சிகளில் நடிக்க இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்! இவரது காதலனாக வரும் முன்னா அமைதியான, அடக்கமான இளைஞராக சிறப்பாக நடித்திருக்கிறார். பூனம் கௌரின் கண்டிப்பான அப்பாவாக வரும் ஞானதேஷ் அந்த கேரக்டருக்கு சரியாக பொருந்தியிருக்கிறார். ரேகா, ஓ.ஏ.கே.சுந்தர் ஆகியோரது பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.

பலம்

1. டிவிஸ்டுகளுடன் நகரும் விறுவிறுப்பான திரைக்கதை
2. படத்திற்கு பலம் சேர்த்திருக்கும் பின்னணி இசையும் ஒளிப்பதிவும்
3.குறுகிய நேரத்தில் படத்தை முடித்திருப்பது

பலவீனம்

1. சுவாரஸ்யம் இல்லாத பாடல்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாதது
2. கதைக்கு சம்பந்தமே இல்லாமல் வரும் சில காட்சிகள்
3. ஆங்காகே வரும் சில லாஜிக் மீறல்கள்.

மொத்தத்தில்...

தான் விரும்பிய ஒருவரை கரம் பிடிக்க, இன்னொருவர் வாழ்க்கையை சின்னா பின்னமாக்கிய ஒரு பெண்ணின் கதையை சொல்லும் இப்படம் இளம் உள்ளங்களை கவர வாய்ப்பிருக்கிறது.

ஒரு வரி பஞ்ச்: காதல் பாதிப்பின் புதிய கோணம்

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

;