எலி - விமர்சனம்

50 வருடங்களுக்கு முன்பு வரவேண்டிய படம்!

விமர்சனம் 19-Jun-2015 2:46 PM IST Top 10 கருத்துக்கள்

Directtion : Yuvaraj Dhayalan
Production : City Cine Creations
Starring : Vadivelu, Sadha
Music : Vidyasagar
Cinematography : Paul Livingstone
Editing : V. T. Vijayan, T. S. Jay

‘தெனாலிராமன்’ படத்திற்குப் பிறகு மீண்டும் ‘எலி’ மூலம் இணைந்திருக்கிறார்கள் வடிவேலுவும், இயக்குனர் யுவராஜ் தயாளனும். வைகைப்புயலின் ஆட்டம் எப்படி?

கதைக்களம்

1960ஆம் ஆண்டு சென்னையில் நடக்கிறது இப்படத்தின் கதை. ‘எலிச்சாமி’யான வடிவேலு ஒரு புத்திசாலித் திருடர். அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட சிகரெட்டை சமூக விரோதியான பிரதாப் ராவத் திருட்டுத்தனமாக சிட்டிக்குள் விற்பனை செய்கிறார். காவல்துறை எவ்வளவோ முயன்றும் பிரதாப் ராவத்தையும், அவர் கூட்டத்தையும் பிடிக்க முடியாமல் திணறுகிறார்கள். இதனால் ‘முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்’ என நினைத்து, கொள்ளையர்களின் கூட்டத்திற்குள் கொள்ளையனாக ‘எலி’ வடிவேலுவை திட்டமிட்டு அனுப்புகிறது போலீஸ். இதன்பிறகு நடக்கும் சடுகுடு ஆட்டமே ‘எலி’ படத்தின் கதை.

படம் பற்றிய அலசல்

காலத்தால் அழிக்க முடியாத பல காமெடிகளை தமிழ்சினிமாவிற்கு வடிவேலு வாரி வழங்கியிருக்கிறார் என்பதை நிச்சயம் மறுப்பதற்கில்லை. ஆனால், அதற்காக முழுப்படத்திலும் தன்னுடையே அதே பழைய பாணியிலான காமெடியையே இந்த 2015திலும் வடிவேலு வெளிப்படுத்தியிருப்பது ரசிகர்களை சிரிக்க வைப்பதற்குப் பதிலாக சோர்வடைய வைத்திருக்கிறது. படம் நடக்கும் காலகட்டம்தான் பழசு எனப்பார்த்தால், திரைக்கதையும், காட்சியமைப்புகளும் அதைவிட பழசாக இருக்கிறது.

ஒரு சின்ன ட்விஸ்ட் கூட இல்லாமல், முழுப்படமும் ‘தேமே’ என்று நகர்கிறது. 60களில் இருக்கும் போலீஸும், கொள்ளையர்களும் இவ்வளவு முட்டாள்களாகவா இருப்பார்கள் என ரசிகர்கள் தியேட்டரிலேயே முணுமுணுக்கிறார்கள். இது போதாதென்று அரைமணி நேரத்திற்கு ஒரு பாடல் என கூடுதல் வேகத்தடை வேறு. இத்தனையையும் தாண்டி, ரசிகர்கள் பொறுமையாக இருந்ததற்கு ஒரே காரணம் வடிவேலு என்ற ஜாம்பவான் இதுவரை தங்களை மெய்மறக்க சிரிக்க வைத்திருக்கிறாரே என்பதற்காகத்தான். இப்படத்திலும் தன்னால் முடிந்தளவு சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் அவருக்குத் தீனிபோடும் வகையில் காட்சிகளை உருவாக்க இயக்குனர் தவறிவிட்டார்.

நடிகர்களின் பங்களிப்பு

படம் ஆரம்பிப்பதற்கு முன்பு... ‘புகைபிடித்தால் புற்று நோய் உண்டாகும்...’ என வடிவேலு தன் மாடுலேஷனியல் பேச ஆரம்பிக்கும்போதே அரங்கம் அதிரத் தொடங்குகிறது. ஆனால், அதை முழுப்படத்திற்கும் தக்க வைக்க வடிவேலுவால்முடியவில்லை. தான் திரையில் தோன்றினாலே சிரிப்பதற்குத் தயாராக இருக்கும் ரசிகர்களை வடிவேலு இப்படத்தில் ஏமாற்றியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

‘அந்நியன்’ பட நாயகிக்கு இப்படி ஒரு நிலைமையா என ரசிகர்கள் ‘உச்’ கொட்டுகிறார்கள். ஆனால், தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாகச் செய்திருக்கிறார் சதா. வில்லன் பிரதாப் ராவத்தின் கேரக்டரை மிரட்டலாக வடிவமைத்திருக்கிறார்கள். ஆனால் அவரைப்பார்த்தால் சிரிப்பு சிரிப்பாக வருகிறது. மொத்தத்தில் இப்படத்தின் சீரியஸ் கேரக்டர்கள் அனைத்தும் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறது.

பலம்

வடிவேலுவைத் தவிர இப்படத்தில் பலம் என்று வேறெதையுமே சொல்ல முடியவில்லை.

பலவீனம்

நோ கமென்ட்ஸ்

மொத்தத்தில்...

‘தெனாலிராமன்’ படத்திலேயே சிறிது சறுக்கினார் வடிவேலு. இந்தமுறை முழுதாக சறுக்கியிருக்கிறார். இதிலிருந்து வடிவேலு மீள வேண்டும் என்றால் மீண்டும் ‘வீரபாகு’வாகவும், ‘கைப்புள்ள’யாகவும் மாறினால் மட்டுமே முடியும். வடிவேலு மீளுவார் என நம்புவோம்!

ஒரு வரி பஞ்ச் : 50 வருடங்களுக்கு முன்பு வரவேண்டிய படம்!

ரேட்டிங் : 3/10

(Eli Movie Review, Eli Tamil Movie Review, Eli Review, Eli New Movie Review)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கத்திசண்டை - டிரைலர்


;