ரோமியோ ஜூலியட் - விமர்சனம்

காவியத் தலைப்பில் காதலின் சுவாரஸ்யம் குறைவு!

விமர்சனம் 12-Jun-2015 6:16 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Lakshman
Production : Madras Enterprises
Starring : Jayam Ravi, Hansika, Vamsi Krishna, Poonam Bajwa
Music : D. Imman
Cinematography : S. Soundar Rajan
Editing : Anthony

‘எங்கேயும் காதல்’ படத்தின் ஜெயம் ரவி, ஹன்சிகா கூட்டணி மீண்டும் ‘ரோமியோ ஜூலியட்’ மூலம் இணைந்திருக்கிறார்கள். இவர்களின் காதலுக்கு தியேட்டர் ரெஸ்பான்ஸ் எப்படி?

கதைக்களம்

ஜிம் டிரைனராக இருக்கும் ஜெயம் ரவியை பணக்காரர் என தவறாக நினைத்து காதலிக்கிறார் ஹன்சிகா. ஜெயம் ரவிக்கும் ஹன்சிகாவைப் பார்த்ததும் காதல் வருகிறது. இந்நிலையில் ஜெயம் ரவி பணக்காரர் இல்லை, சாதாரண ஜிம் டிரைனர்தான் என்ற விஷயம் ஒருநாள் ஹன்சிகாவிற்குத் தெரிய வர, காதலை உதறித் தள்ளுகிறார். அதோடு பரம்பரை பணக்காரரான வம்சி கிருஷ்ணாவிற்கும் ஹன்சிகாவிற்கும் நிச்சயமும் நடக்கிறது.

இந்நிலையில், தன் காதலை உதறித் தள்ளிய ஹன்சிகாவே தனக்கு மீண்டும் ஒரு புதிய காதலி ஏற்பாடு செய்து தரவேண்டும், இல்லையென்றால் ஹன்சிகாவின் திருமணத்தை நிறுத்திவிடுவேன் என மிரட்டுகிறார் ஜெயம் ரவி. இதன் பிறகு, ஜெயம் ரவிக்கும், ஹன்சிகாவுக்கும் இடையே நடக்கும் ஆடு புலி ஆட்டமே ‘ரோமியோ ஜூலியட்’.

படம் பற்றிய அலசல்

உருகி உருகி காதலிக்கும் ஹீரோவை உதறித் தள்ளிவிட்டு, பின் மீண்டும் ஹீரோவின் காதல்தான் உயர்ந்தது என்பதை உணர்ந்து ஓடிவந்து கெஞ்சும் காதலியின் கதைகளை ஏற்கெனவே தமிழ்சினிமாவில் நிறைய முறை பார்த்திருக்கிறோம். அதில் ஆங்காங்கே கொஞ்சம் வித்தியாசமான காட்சிகளை அமைத்து, க்ளைமேக்ஸில் ஒரு சின்ன ட்விஸ்டையும் வைத்து ‘ரோமியோ ஜூலியட்’டாக மாற்றியிருக்கிறார் இயக்குனர் லக்ஷ்மண்.

துறு துறு ஜெயம் ரவி, குளு குளு ஹன்சிகா, கிளு கிளு பூனம் பாஜ்வா என இன்றைய இளைஞர்களுக்குப் பிடித்தமான ஒரு இளமைக் கூட்டணியுடன் களமிறங்கியிருப்பது படத்திற்கு பெரிய பலம். அதோடு ‘டண்டணக்கா...’ பாடலின் பப்ளிசிட்டியின் காரணமாகவும் தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. படத்தின் ஆரம்ப டைட்டில் கார்டில் பாகவதர் காதல் முதல் இன்றைய தனுஷ் காதல் வரை மறக்க முடியாத காதல் காவியங்களை காட்சியாக்கியதற்கு ரசிகர்களிடம் செம ரெஸ்பான்ஸ்.

ஆரம்பத்தில் இருந்த ரசிகர்களின் உற்சாகத்தை முழுப்படத்திற்கும் தக்க வைப்பதற்கு இயக்குனர் தடுமாறியிருக்கிறார் என்பதுதான் உண்மை. முதல்பாதி முழுக்க ஹன்சிகாவின் பழிவாங்கல், இரண்டாம்பாதியில் அதையே உல்டாவாக ஜெயம் ரவி செய்வது என ரொம்பவும் ‘க்ளிஷே’வான காட்சிகள் படத்திற்கு மைனஸ். அதேபோல் லாஜிக்கும் பல இடங்களில் இடிக்கிறது. ஆனால், அதையும் மீறி ஆங்காங்கே வரும் விடிவி கணேஷின் காமெடி, இளமைத் துள்ளும் காட்சிகள் என கொஞ்சம் ரசிக்கவும் வைத்திருக்கிறது இந்த ரோமியோ ஜூலியட். ஒளிப்பதிவு, பாடல்கள், பின்னணி இசை அனைத்தும் இப்படத்திற்கு தேவைக்கேற்ப கைகொடுத்துள்ளன.

நடிகர்களின் பங்களிப்பு

‘பூலோகம்’ படத்திற்காக ஏற்றிய ‘பல்க்’ உடம்பு இப்படத்தின் ஜிம் டிரைனர் கேரக்டருக்கு ஜெயரம் ரவிக்கு சரியாகப் பொருந்தியிருக்கிறது. இருந்தாலும், ‘சந்தோஷ் சுப்பிரமணிய’த்தில் பார்த்த அந்த ஹேன்ட்ஸம் ரவி கொஞ்சம் மிஸ்ஸிங்தான். ஃபைட் இல்லை... ஆனால் டான்ஸில் சேர்த்து வைத்து குத்தியிருக்கிறார். நடிப்பிலும் நல்ல மெச்சூரிட்டி வந்திருக்கிறது.
இப்படத்தில் ஹன்சிகாவிற்கு அசத்தலான கேரக்டர் அமைந்திருக்கிறது. அதை அவரும் அழகாக செய்திருக்கிறார். பணக்கார வாழ்க்கையை ஆசைப்படும் ஒரு அப்பாவிப் பெண்ணின் கேரக்டருக்கு அவரின் நடிப்பு கச்சிதம். க்ளைமேக்ஸில் கண்கலங்க வைக்கிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் பூனம் பாஜ்வாவின் என்ட்ரி ஹாட் ட்ரீட்! வம்சி கிருஷ்ணாவின் கேரக்டரை வீணடித்திருக்கிறார்கள். என்டர்டெயின்மென்ட்டுக்கு ‘விடிவி’ கணேஷ் உத்தரவாதம் தந்திருக்கிறார்.

பலம்

1. ஜெயம் ரவி, ஹன்சிகாவின் இளமைத் துள்ளும் கூட்டணி
2. ஆரம்ப டைட்டில் கார்டும், டண்டணக்கா பாடலும் தந்த உற்சாகம்
3. விடிவி கணேஷின் காமெடியும், சில சுவாரஸ்யமான காதல் காட்சிகளும்

பலவீனம்

1. ஏற்கெனவே பார்த்துப் பழக்கப்பட்ட கதை
2. ஆங்காங்கே இடிக்கும் லாஜிக்
3. எதிபார்த்தபடியே அமைக்கப்பட்ட காட்சியமைப்புகள்

மொத்தத்தில்...

வரிசையாக பேய்ப்படமாக பார்த்து வந்த ரசிகர்களுக்கு, ரொமான்ஸ் படம் என்ற வகையில் ‘ரோமியோ ஜூலியட்’ ஆறுதல் தந்திருக்கிறது. ஆனால் கதையும், எதிர்பார்த்தபடி அமைந்த படத்தின் இரண்டாம்பாதியும் கொஞ்சம் சோர்வு. மொத்தத்தில்... ‘ரோமியோ ஜூலியட்’டிற்கு டீன் ஏஜ்களிடம் மட்டும் வரவேற்பு கிடைக்கலாம்.

ஒரு வரி பஞ்ச் : காவியத் தலைப்பில் காதலின் சுவாரஸ்யம் குறைவு!

ரேட்டிங் : 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டிக் டிக் டிக் - குறும்பா ஆடியோ பாடல்


;