இனிமே இப்படித்தான் - விமர்சனம்

 வார விடுமுறைக்கான பொழுதுபோக்குப் படம்!

விமர்சனம் 12-Jun-2015 12:34 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Muruganand
Producion : Handmade Films
Starring : Santhanam, Ashna Zaveri, Akhila Kishore
Music : Santhosh Kumar Dhayanidhi
Cinematography : Gopi Jagadesswaran
Editing : Anthony L. Ruben

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தைத் தொடர்ந்து சந்தானம் ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது படம். எப்படித்தான் இருக்கிறது இந்த ‘இனிமே இப்படித்தான்’?

கதைக்களம்

திருமண வயதை எட்டிய சந்தானத்திற்கு வீட்டில் பெண் பார்க்கிறார்கள். ஆனால் சந்தானத்தின் நண்பர்களோ, அவரை லவ் மேரேஜ் செய்யச் சொல்லி மனதை மாற்றுகிறார்கள். இதனால், ஆஸ்னா ஸவேரியை ஒன்&சைடாக லவ்வத் தொடங்குகிறார் சந்தானம். அதேநேரம் அகிலா கிஷோரை சந்தானத்திற்கு வீட்டில் பேசி முடிக்கிறார்கள். பலவித முயற்சிகளுக்குப்பிறகு சந்தானத்திடம், ஆஸ்னாவும் காதலைச் சொல்கிறார். இந்தப்பக்கம் அகிலாவுக்கும், சந்தானத்திற்கும் நிச்சயமும் நடக்கிறது.

ஒரே நேரத்தில் இரண்டு பெண்களிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் சந்தானம் யாரைக் கைபிடிக்கிறார்? யாரைக் கழட்டிவிடுகிறார் என்பதே ‘இனிமே இப்படித்தான்’.

படம் பற்றிய அலசல்

கண்ணா லட்டு தின்ன ஆசையாவில் 3 ஹீரோக்களில் ஒருவராகக் களமிறங்கி, பின்னர் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் மூலம் முழுநேர ஹீரோவானார் சந்தானம். தனது முதல் படத்தில் ஹீரோவாக பாஸ் மார்க் வாங்கிய சந்தானம், இப்படத்தில் அரைசதம் அடித்து அசத்தியிருக்கிறார்.

சந்தானம் படத்தில் ரசிகர்கள் என்னவெல்லாம் எதிர்பார்ப்பார்களோ, அது அத்தனையும் இப்படத்தில் இருக்கிறது. கூடவே படத்தை நகர்த்திச் செல்ல ஒரு சுமாரான கதையும், அதை போராடிக்காமல் கொண்டு செல்ல சுவாரஸ்யமான திரைக்கதையும் இருக்கிறது. சந்தானத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை சரியாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள் இரட்டை இயக்குனர்களான முருகனாந்த் (முருகன், ஆனந்த்).

முதல்பாதியின் ஆரம்பக்காட்சிகள் கொஞ்சம் அப்படி இப்படியிருந்தாலும், கொஞ்சரேநத்திலேயே படம் சூடுபிடிக்கிறது. அதோடு இடைவேளைக்காக தேர்ந்தெடுத்திருக்கும் சூழ்நிலை, ரசிகர்களை உற்சாகமாக கேன்டீனுக்கு அனுப்பி வைக்கிறது. தவிர, இப்படி ஒரு க்ளைமேக்ஸையும் யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இரண்டாம்பாதியில் தேவையில்லாமல் சொருகியிருக்கும் 3 பாடல்களை ‘கட்’ செய்திருந்தால் இரண்டாம்பாதி இன்னும் சூடுபிடித்திருக்கும். ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக இருந்தாலும், டிஐயில் அதிகப்படியான ஃபில்டர்களைப் போட்டிருக்கிறார்கள். படம் முழுக்க அனைத்து கேரக்டர்களும் ‘பளபள’வென சுற்றுவதைப் பார்க்க காமெடியாக இருக்கிறது. அதை தவிர்த்திருக்கலாம்.

நடிகர்களின் பங்களிப்பு

ஹீரோவாக மாறினாலும், தன் நக்கலையும், நய்யாண்டியையும் கைவிடாததுதான் சந்தானத்தின் பெரிய பலமே. கூடவே டான்ஸ் ஆடியும் அசத்துகிறார். ஹைஹீல்ஸ் செருப்பைப் போட்டுக்கொண்டு அவர் போடும் ஃபைட்டுக்கு தியேட்டரில் சிரிப்பலையும், கைதட்டல்களும். சந்தானம் ஹீரோவாக 2வது படியில் வெற்றிகரமாக ஏறியிருக்கிறார். இரண்டு ஹீரோயின்கள் என்றாலும், அகிலாவைவிட ஆஸ்னாவுக்கு அதிக முக்கியத்துவம். அவரும் தன் வாய்ப்பை சரியாக கையாண்டிருக்கிறார். ஆனால் முந்தைய படத்தைவிட இதில் இன்னும் மெலிருந்திருப்பது கொஞ்சம் உறுத்தல். ஹீரோ சந்தானத்தின் கூடவே சுத்தும் காமெடியன் வேடம் தம்பி ராமையாவுக்கு. வழக்கம்போல் கத்திக்கொண்டே இருக்கிறார். சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதில் நரேன் தனித்து நிற்கிறார்.

பலம்

1. சந்தானத்தின் வழக்கமான நக்கலும், நய்யாண்டியும்
2. இன்டர்வெல் காட்சியும், க்ளைமேக்ஸ் ட்விஸ்ட்டும்
3. ஆங்காங்கே வயிறுகுலுங்க சிரிக்க வைத்திருக்கும் காமெடிக் காட்சிகள்

பலவீனம்

1. பாடல்கள் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் ‘ஓகே’வாக இருந்தாலும், படத்தின் ஓட்டத்திற்கு தடையாகவே இருக்கின்றன. குறிப்பாக இரண்டாம்பாதியில் வரும் 3 பாடல்கள்.
2. பின்னணி இசை, கலர் கிரேடிங் உள்ளிட்ட டெக்னிக்கல் விஷயங்களில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில்...

கதைக்கென புதிதாக எதையும் யோசிக்காவிட்டாலும், தியேட்டருக்குள் வரும் ரசிகர்கள் கவலை மறந்து சிரிக்க வேண்டும் என்பதற்காக முடிந்தளவு முயற்சித்திருக்கிறது சந்தானம்&கோ. ஆங்காங்கே சின்னச் சின்ன குறைகள் இருந்தாலும், முழுப்படமாக ரசிகர்களை திருப்தியாகவே அனுப்பி வைக்கிறது ‘இனிமே இப்படித்தான்’.

ஒரு வரி பஞ்ச் : வார விடுமுறைக்கான பொழுதுபோக்குப் படம்!

ரேட்டிங் : 5/10

(Inimey Ippadithaan Movie Review, Inimey Ippadithaan Review, Inimey Ippadithaan Tamil Movie Review, Inimey Ippadithaan Review)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;