ஜுராசிக் வேர்ல்டு - விமர்சனம்

குழந்தைகளுடன் பார்ப்பதற்கு ஏற்ற படம்!

விமர்சனம் 11-Jun-2015 4:33 PM IST Top 10 கருத்துக்கள்

ஸ்டீபன் ஸ்பீல் பெர்க் இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஜுராசிக் பார்க்’ படத்தைப் பார்த்த பிறகுதான், பெரும்பாலான இந்திய ரசிகர்களுக்கு ஹாலிவுட் படங்கள் மேல் ஒரு பெரிய மோகமே வந்தது என்று சொன்னால் நிச்சயம் மிகையாகாது. அந்தப் படம் தந்த வியப்பின் உச்சத்தையும், பரவச அனுவத்தையும் அதன் பிறகு வெளிவந்த வேறெந்தப் படமும் முறியடிக்கவில்லை. ஏன்... ‘ஜுராசிக் பார்க்’ படத்தின் அடுத்த இரண்டு பாகங்கள்கூட முதல் பாகம் ஏற்படுத்திய பாதிப்பை தக்க வைக்கவில்லை என்பதே நிதர்சனம்.

இந்நிலையில் இப்படத்தின் 4ஆம் பாகம், கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு ‘ஜுராசிக் வேர்ல்டு‘ என்ற பெயரில் ரிலீஸாகியிருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ டைனோசர் சம்பந்தப்பட்ட படங்கள் வெளிவந்திருந்தாலும் எதுவுமே ரசிகர்களுக்கு திருப்தியளிக்கவில்லை. ஆனால், இந்த ‘ஜுராசிக் வேர்ல்டு’ படத்தின் டிரைலர் வெளிவந்தபோதே மீண்டும் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்திற்கு சென்றார்கள். தங்களின் ஆதர்ச ஹீரோவான டைனோசர்ஸை பெரிய திரையில், அதுவும் 3டியில் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எக்கச்சக்கமாக எகிறிக் கொண்டிருந்தது. இப்போது இப்படம் ரிலீஸும் ஆகிவிட்டது. ‘ஜுராசிக் வேர்ல்டி’ன் பயணம் ரசிகர்களுக்கு என்ன மாதிரியான அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது.

முதல் பாகத்தின் கதைக்குப் பிறகு 22 வருடங்கள் கழித்து இப்படத்தின் கதை நிகழ்வதுபோல் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். மத்திய அமெரிக்காவின் பசிபிக் கடற்கரை அருகேயுள்ள இஸ்லா நுப்லர் எனும் தீவில், மீண்டும் ‘ஜுராசிக் பார்க்’கை பலவித டெக்னாலஜிகளுடன் உருவாக்குகிறார்கள். எந்தவித அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் பலவித பாதுகாப்புகளையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். இதனால் பயணிகள் மீண்டும் அந்த தீவிற்கு வந்து டைனோசர் உலகத்தை கண்டுகளிக்கத் துவங்குகிறார்கள்.

அந்த பார்க்கின் மேற்பார்வை பொறுப்பில் முக்கிய பதவியில் இருக்கும் கிளாரின் சகோதரி மகன்களான கிரேயும், ஸச்சும் அந்தப் பார்க்கை பார்வையிட வருகிறார்கள். அவர்கள் வந்த நேரம் அங்கு வளர்க்கப்படும் மிகப்பெரிய டைனோசர் ஒன்று எதிர்பாராதவிதமாக பாதுகாப்பு வளையத்தை தாண்டி வெளியேற, அதன் பிறகு அந்த தீவு முழுவதும் பரபரப்பு பற்றி எரிகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் காட்டுக்குள் ஸச், கிரே இருவரும் டைனோசரின் பார்வையில் பட்டுவிடுகிறார்கள். அவர்களைக் காப்பாற்ற கிளாரும், நாயகன் ஓவனும் புறப்படுகிறார்கள். அதன்பிறகு என்னென்ன மாதிரியான அசம்பாவிதங்கள் அங்கு நடக்கிறது, அனைவரும் தப்பித்தார்களா, இல்லையா? என்பதே இந்த நான்காம் பாகத்தின் கதை.

வழக்கம்போல் முதல் அரைமணி நேரம் பேசிக்கொண்டே, படத்தின் கேரக்டர்களை அறிமுகப்படுத்துகிறார்கள். படம் மெதுவாக நகர்ந்தாலும் ஆங்காங்கே சின்ன சின்ன ஆச்சரியங்களையும் ரசிகர்களுக்கு ஏற்படுத்தத் தவறவில்லை. குறிப்பாக நாயகன் பழக்கி வைத்திருக்கும் நான்கு குட்டி டைனோசர்களிடம் மாட்டிக் கொள்ளும் வேலையாள் ஒருவனை லாவகமாக காப்பாத்தும் காட்சியைக் குறிப்பிடலாம். அதேபோல் ஹைபிரிட் திமிங்கல டைனோசரின் காட்சியும் புல்லரிக்கச் செய்கிறது.

ஆரம்பம் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் பெரிய டைனோசர் தப்பி வெளியேறியதும் படம் படபடக்கத் துவங்குகிறது. நகர்ந்து செல்லும் கண்ணாடி கூண்டுக் காருக்குள் பயணிக்கும் இரண்டு சிறுவன்களும் டைனோசரிடம் மாட்டி, அதனிடமிருந்து தப்பிக்கும் காட்சியில் தியேட்டர் மொத்தமும் உறைந்துபோகிறது. இரண்டாம்பாதியில் வழக்கமான சேஸிங், இன்னபிற வழக்கமான பரபர காட்சிகளோடு பயணிக்கும் படம் க்ளைமேக்ஸில் திகிலடைய வைத்திருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் படத்தின் முடிவில் என்ட்ரி ஆகும் ஒரு கேரக்டரால் ரசிகர்கள் உற்சாகத்தில் கத்திச் கூச்சலிடுகிறார்கள்.

ஆங்காங்கே ‘க்ளிஷே’க்களான காட்சிகளோடு நகர்வது, கதை என்று பெரிதாக எதுவும் இல்லாதது என்பன« பான்ற நெகட்டிவ் பக்கங்கள் இப்படத்திலும் உண்டு. ஆனாலும், குழந்தைகளுடன் பார்ப்பதற்கு ஏற்ற படம்தான் இந்த ‘ஜுராசிக் வேர்ல்டு’. முதல் பாகத்தைப் போல் 2ம் பாகம் இல்லை, முதலிரண்டு பாகங்களைப்போல் 3ஆம் பாகம் இல்லை என்ற கருத்து நிலவியது. அதே உணர்வையே இந்த 4ஆம் பாகமும் ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும் இத்தனை வருடங்கள் கழித்து, டைனோசர்களை மீண்டும் 3டியில் பார்ப்பது கூடுதல் பரவசத்தைத் தந்திருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

Colin Trevorrow இயக்கத்தில் Chris Pratt, Bryce Dallas Howard, Ty Simpkins மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். இந்திய நடிகரான Irrfan Khan கூட, இப்படத்தில், முக்கிய வேடமொன்றில் நடித்துள்ளார். Michael Giacchino இசை அமைக்க, John Schwartzman ஒளிப்பதிவு செய்துள்ளார். Michael Crichton எழுதிய Jurassic Park நாவலின் கதாபாத்திரங்களின் அடிப்படையில் தான் இப்பட கதாபாத்திரங்களை உருவாக்கி இருக்கிறார்கள். Universal Pictures இன் தயாரிப்பு இது. Hansat Pictures வெளியீடு.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜுராசிக் வேர்ல்டு - டிரைலர் 2


;