வரிசைகட்டும் காமெடி படங்கள்!

வரிசைகட்டும் காமெடி படங்கள்!

செய்திகள் 9-Jun-2015 1:54 PM IST VRC கருத்துக்கள்

கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவை பெரும்பாலும் ஆட்டி படைத்தது பேய் படங்கள் தான்! வரிசையாக பல பேய் படங்கள் வெளியானாலும் அதில் வசூலை குவித்த படங்கள் எத்தனை என்றால் அதை விரல் விட்டு எண்ணி விடலாம்! ‘டார்லிங்’, ‘காஞ்சனா-2’, ‘டிமான்டி காலனி’, ‘மாசு என்கிற மாசிலாமணி’ உட்பட ஒரு சில படங்களே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வசூலையும் கொடுத்தது. அந்த வரிசையில் இன்னும் நிறைய பேய் படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது என்றாலும் அப்படங்களின் ரிலீஸ் தேதி இன்னும் உறுதிச் செய்யப்படவில்லை.

இந்நிலையில் அடுத்தடுத்து ரிலீசாகவிருக்கும் படங்கள் குறித்த அறிவிப்புகளை பார்க்கும்போது இனி வருவது காமெடி சீஸன் தான் என்பதை உணர முடியும். இந்த வாரம் வெள்ளிக் கிழமை (12-6-15) வெளியாகவிருக்கும் சந்தானத்தின் ‘இனிமே இப்படித்தான்’ படம் முழுக்க முழுக்க காமெடி பின்னணியில் உருவாகியுள்ள படம். இதே தினம் வெளியாகவிருக்கும் ‘ஜெயம்’ ரவி, ஹன்சிகா ஜோடி சேர்ந்து நடித்துள்ள ‘ரோமியோ ஜூலியட்’ காதல் கதையாக உருவாகியுள்ளது என்றாலும் இப்படத்தில் காமெடிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளதாம்.

இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்த வாரம் வெள்ளிக் கிழமை (ஜூன்-19) அன்று வடிவேலுவின் ‘எலி’ படம் வெளியாகவிருக்கிறது. ‘தெனாலி ராமன்’ படத்தைத் தொடர்ந்து யுவராஜ் தயாளனும், வடிவேலுவும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த காமெடி படம் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ‘எலி’ ரிலீசாகிற தினம் தான் இன்னொரு காமெடி படமான அருள் நிதி, ரம்யா நம்பீசன் நடித்துள்ள ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’ படமும் ரிலீசாகிறது. இந்தப் படங்களை தொடர்ந்து விவேக் ஹீரோவாக நடித்துள்ள ‘பாலக்காட்டு மாதவன்’ ரிலீசாகவிருக்கிறது. விவேக், சோனியா அகர்வால் ஜோடியாக நடித்துள்ள இப்படமும் முழுநீள காமெடி படமாக அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. ‘நான் தான் பாலா’ படத்திற்கு பிறகு விவேக் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இப்படம் மீதும் ரசிகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
மேற்குறிப்பிட்ட படங்கள் தவிர கவுண்டமணி கதையின் நாயகனாக நடித்துள்ள ‘49-ஓ’ மற்றும் ‘எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை’ உட்பட பல காமெடி படங்களும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ஆக கடந்த சில மாதங்களாக கோலிவுட்டை பேய் படங்கள் ஆட்டி படைத்ததைத் தொடர்ந்து அடுத்து வரிசையாக காமெடி படங்கள் ரிலீசாகி ரசிகர்களை மகிழ்விக்கப் போகிறது. கொண்டாட தயாராக இருங்கள் ரசிகர்களே!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;