மாரி - இசை விமர்சனம்

மாரி - இசை விமர்சனம்

இசை விமர்சனம் 9-Jun-2015 12:08 PM IST Chandru கருத்துக்கள்

அனிருத்தின் 9வது ஆல்பம். 3, வேலையில்லா பட்டதாரி படங்களைத் தொடர்ந்து தனுஷுடன் இணைந்து அனிருத் கொடுக்கும் 3வது ஆல்பம். இளையதலைமுறை ரசிகர்களின் ஃபேவரைட் கூட்டணியில் உருவான ‘மாரி’ ஆல்பத்திற்கு எவ்வளவு மார்க் போடலாம்?

மாரி தர லோக்கல்...
பாடியவர்கள் ; தனுஷ், அனிருத்
பாடலாசிரியர் : தனுஷ்


ஆல்பத்தின் முதல் பாடலே அதிரடி குத்துடன் ஆரம்பிக்கிறது. பாடல் முழுவதும் டிரம்மின் ‘பேஸ்’ ஒலி அதிரடிக்கிறது. இது அனிருத்தின் அக்மார்க் ஃபாஸ்ட் பேஸ் பாடல். நிச்சயம் தனுஷ், அனிருத்தின் ஆட்டங்களோடு இந்தப் பாடலைப் பார்க்க ரசிகர்கள் பேராவலாக இருப்பார்கள். உண்மையிலேயே தர லோக்கல்தான்!

ஒருவித ஆசை..
பாடியவர்கள் ; வினீத் ஸ்ரீனிவாசன், அனிருத்
பாடலாசிரியர் : தனுஷ்


எண்பதுகளில் மிகவும் பாப்புலரான ‘ரெட்ரோ ஸ்டைலி’ல் ஒலிக்கிறது இந்த ஒருவித ஆசை பாடல். புதுவிதமாக அனிருத் முயற்சித்துள்ள இந்தப் பாடலை முதல்முறை கேட்கும்போது கொஞ்சம் போராக இருந்தாலும், போகப்போக பிடிக்கிறது. நிச்சயம் திரையில் விஷுவல் ட்ரீட் இருக்கும் என நம்புவோம்!

டானு டானு டானு...
பாடியவர்கள் ; அலிஷா தாமஸ், அனிருத்
பாடலாசிரியர் : தனுஷ்


ஆல்பத்தின் அசத்தலான பாடல் இதுதான். முழுப்பாடலையும்கூட கேட்க வேண்டிய அவசியமில்லை... சரணத்தைக் கேட்டதுமே சட்டென மனதிற்குள் தங்கிவிடுகிறது. ஏற்கெனவே எங்கேயோ கேட்டிருக்கிறோமே என்ற உணர்வை முதலில் இப்பாடல் கொடுத்தாலும், போகப்போக இந்தப் பாடலின் ட்யூன் நம் மூளைக்குள் சுழன்றடிக்கிறது. பாடலின் இசை, பாடல் வரிகள், பாடியவர்களின் குரல் என அத்தனையும் அற்புதமாக பின்னணிப் பிணைந்திருக்கிறது இப்பாடலில். குறிப்பாக அலிஷா தாமஸின் குரலில் டன் கணக்கில் கிக்! திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டேயிருக்கலாம்.... அவ்வளவு பிடிக்கிறது!

பகலு ஒடயும் டகலு மாரி...
பாடியவர்கள் ; தனுஷ்
பாடலாசிரியர் : ராகேஷ்


அனேகனின் ‘டாங்கா மாரி...’ புகழ் ராகேஷ் எழுதியிருக்கும் பாடல். வெஸ்டன் பாடல்போல ஆரம்பித்து, அடுத்த கணமே சட்டென ‘குத்து’க்குள் நுழைகிறது இந்த பகலு ஒடயும். ‘மாரி’ என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு பாடல் முழுவதும் பல மாரிகளை வாரி இறைத்திருக்கிறார் ராகேஷ். பாடலின் முடிவில் ‘அந்த மாரி...’ என தனுஷின் குரல் கேட்பது எக்ஸ்ட்ரா பூஸ்ட்.

தப்பாதான் தெரியும்...
பாடியவர்கள் ; அனிருத், தனுஷ், சின்ன பொண்ணு, மகிழினி மணிமாறன்
பாடலாசிரியர் : விக்னேஷ் சிவன்


ஆல்பத்தின் இன்னொரு குத்துப்பாடல். மற்ற குத்து பாடல்களில் இசையின் வேகமும், ஒலியும் அதிகமாக இருக்க, இந்த ‘தப்பாதான் தெரியும்...’ பாடலில் நின்று, நிதானமாக ‘குத்தி’யிருக்கிறார் அனிருத். தனுஷின் வாய்ஸ் இப்பாடலுக்கு வெகு பொருத்தம். ‘அதாரு... அதாரு...’ மூலம் பாடகராகவும் புகழ்பெற்ற இயக்குனர் விக்னேஷ் சிவனின் வரிகள் பாடலுக்கு ப்ளஸ். ‘குனியும்போது குத்தும் ஊருக்குள்ள, நிமிந்தேதான் நடக்கணும் வழியே இல்ல...’ என்ற வரிகள் ‘மாரி’யின் கருத்துக்கு வலு சேர்க்கிறது. ரசிகர்களுக்கான பாடல் இது!

வடசென்னை தாதாவாக தனுஷ் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஏற்ற பாடல்களையே அனிருத் தந்திருக்கிறார். ஆசுவாசமாக அமர்ந்து ரசித்துக் கேட்கும்படியான பாடல்கள் இந்த ஆல்பத்தில் இல்லை. ஆனால், கேட்டவுடன் எழுந்துநின்ற ஆடவைக்கும் அதிரடி குத்துக்கள் நிறைந்திருக்கிறது. இசை விரும்பிகளுக்கு இந்த ஆல்பம் கொஞ்சம் சோர்வைத் தரலாம். ஆனால், அனிருத் - தனுஷின் ரசிகர்கள் நிச்சயம் இதைத்தான் எதிர்பார்த்திருப்பார்கள். ‘மாரி’யின் பாடல்களுக்கு திரையரங்கங்கள் அதிரப் போவது நிச்சயம்.

மொத்தத்தில்... ‘மாரி’ ஆல்பம், வடசென்னையின் தர லோக்கல் குத்துதான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;