காக்கா முட்டை – விமர்சனம்

குறிஞ்சிப் பூ!

விமர்சனம் 5-Jun-2015 3:31 PM IST Top 10 கருத்துக்கள்

Direction & Cinematographay : Manikandan
Production : Wunderbar Films & Graas Root Film Companay
Starring : Ramesh, Vignesh, Iswarya
Music : G.V.Prakash Kumar
Editing : Kishore

இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளர் மணிகண்டன் ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் படம் ‘காக்கா முட்டை’. இப்படம், வெளிவருவதற்கு முன்பே தேசிய விருது உட்பட பல விருதுகளை பெற்றிருப்பதோடு, லாபத்தையும் ஈட்டித் தந்த படம் என்று இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான தனுஷே கூறியிருக்கும் இப்படம் என்ன சொல்ல வருகிறது?

கதைக்களம்

கூவத்தின் கரையில் வாழும் ஐஸ்வர்யாவுக்கு பெரிய காக்கா முட்டை (விக்னேஷ்), சிறிய காக்கா முட்டை (ரமேஷ்) என இரண்டு குழந்தைகள். (இவர்கள், மரத்தில் ஏறி காக்கா முட்டை எடுத்து சாப்பிடுவதால் இந்தப் பெயர்!) சிறிய ஒரு குற்றத்திற்காக ஐஸ்வர்யாவின் கணவர் சிறைக்குச் செல்ல, ஐஸ்வர்யா பாத்திர கம்பெனியில் வேலை செய்து பிழைப்பு நடத்துகிறார். வருமானம் போதாமையால் இரண்டு சிறுவர்களின் படிப்பையும் நிறுத்திவிட்டு அவர்களை ரயில் தண்டவாளத்தில் நிலக்கரி பொறுக்க விடுகிறாள்! இவர்கள் வாழும் பகுதியில் பீட்சா கடை ஒன்றை திறக்குகிறார்கள். அங்கு பீட்சா சாப்பிடுவதை ஆசையாக பார்க்கும் சிறுவர்கள் தாங்களும் பீட்சா சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதற்காக தினமும் உழைத்து 300 ரூபாயை சேர்த்து பீட்சா வாங்க கடைக்குச் சென்றால், அவர்களின் அழுக்கு சட்டை கடைக்கு செல்ல தடையாக இருப்பதோடு, ஒரு கட்டத்தில் பீட்சா கடை சூப்பர் வைஸர் பெரிய காக்கா முட்டையை அடித்தும் விடுகிறார். இதை குடிசை பகுதியின் மற்றொரு சிறுவன் தனது செல்ஃபோனில் படம் பிடிக்கிறார். கடைசியில் சிறுவர்களின் பீட்சா சாப்பிடும் ஆசை நிறைவேறியதா? செல்ஃபோனில் பதிவாகிய பெரிய காக்கா முட்டையை அடித்த காட்சி எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை விளக்கும் படமே ‘காக்கா முட்டை’!

படம் பற்றிய அலசல்

குத்துப் பாடல் இல்லை! இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை! தாதாக்களின் அடி-தடி, வெட்டுக் குத்து இல்லை! ஒரு எளிய கதையை, இரண்டு சிறுவர்களை கதாநாயகர்களாக நடிக்க வைத்து சென்னை சேரிப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கையை உண்மையாக பதிவு செய்திருக்கிறார் இப்படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் மணிகண்டன். முதல் 30 நிமிட காட்சிகள் கொஞ்சம் ஸ்லோவாக, போரடிக்க வைக்கும் விதமாக பயணித்தாலும் அதன் பிறகு திரைக்கதை சூடு பிடிக்கிறது! சாக்கடையாகிப் போன கூவம் ஆற்றின் நுர்நாற்றம், அதை ஏற்றுக்கொண்டு அங்கு வாழும் மக்கள், அவர்களது அன்றாட நடவடிக்கைகள், ஆசைகள், அப்பாவித்தனம், சுய கௌரவம், குறும்புகள், அங்குள்ள அரசியல் ஆகியவற்றை மிக யதார்த்தமாக படமாக்கி படம் பார்ப்போரை அந்த சேரிப் பகுதிக்கு அழைத்துச் சென்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் மணிகண்டன்! அந்த சேரிப் பகுதியின் சந்து, பொந்துகளில் எல்லாம் நுழைந்து காட்சிகளை படமாக்கியிருக்கும் மணிகண்டனின் ஒளிப்பதிவையும் பாராட்ட வேண்டும்! ஹாட்ஸ் ஆஃப் மணிகண்டன்! அதைப் போல ஜி.வி.பிரகாஷ்குமாரின் எளிமையான பின்னணி இசை கதையோட்டத்திற்கு வலிமை சேர்த்துள்ளது.

நடிகர்களின் பங்களிப்பு

பெரிய காக்கா முட்டையாக நடித்திருக்கும் விக்‌னேஷ், சிறிய காக்கா முட்டையாக நடித்திருக்கும் ரமேஷ் – இவர்களது நடிப்பு குறித்து நாம குறிப்பிட வேண்டுமா என்ன? அவர்களது நடிப்புக்கு தேசிய விருதே கிடைத்து விட்டதே! ஆனால் இரு சிறுவர்களில் நம்மை மிகவும் கவர்ந்த நடிப்பு ‘சிறிய காக்க முட்டை’ ரமேஷின் நடிப்பு தான்! பாட்டி செய்த பீட்சாவை சாப்பிட்டு அதை கலாய்ப்பது, தங்கள் குடிசையில் வளர்ந்த நாய்க்குட்டியை விற்க ரோடு ரோடாக திரிவது, பீட்சா கடையை திறந்து வைக்க வரும் சிம்புவை பார்த்து, ‘சிம்பு ரசம் சோறு சாப்பிட மாட்டாரா?’ என்று கேள்வி கேட்பது, கடைசியில் ராஜ மரியாதையோடு பீட்சா கடைக்குள் சென்று பீட்சா சாப்பிட்டு, ‘இது என்ன டேஸ்ட் டா... இதுக்கா நாம் இவ்வளவு கஷ்டப்பட்டோம்’ என்று ‘பீட்சா’ வை கலாய்ப்பது என படம் முழுக்க சிறுவர்களின் யதார்த்தமான குறும்புகள் ரசிக்கவும், சிரிக்கவும் வைக்கிறது.

சேரித் தாயாக வாழ்ந்திருக்கிறார் ஐஸ்வர்யா! அவருக்கும் தேசிய விருது கொடுத்திருக்க வேண்டும்! ஐஸ்வர்யா விடுகிற ஒவ்வொரு சொட்டு கண்ணீரிலும் அவ்வளவு சோகம்! அதை நமக்கு உணர்த்தும் படியாக அருமையாக நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா! ஏமாற்றி பிழைப்பு நடத்தும் ரமேஷ் திலக், யோகி பாபு, பீட்சா கடை அதிபராக வரும் பாபு ஆண்டனி, சிறுவர்களுக்கு உதவும் இரயில்வே தொழிலாளியாக வரும் ஜோமல்லூரி, பீட்சா கடை திறந்து வைக்க வரும் சிம்பு என படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேரும் அந்தந்த பாத்திரங்களாக வாழ்ந்துள்ளனர்.

பலம்

1. ஒரு எளிமையான கதை என்றாலும், அதை சீரான முறையில் திரைக்கதை அமைத்து, விறுவிறுப்பாக இயக்கியிருக்கும் விதம்.
2. கதையை மீறாத சிறந்த ஒளிப்பதிவும், பின்னணி இசையும்.
3. மறைந்த கிஷோரின் நேர்த்தியான படத்தொகுப்பு.

பலவீனம்

1.கொஞ்சம் ஸ்லோவாக பயணிக்கும் முதல் 30 நிமிட காட்சிகளை தவிர்த்து பார்த்தால், இப்படத்தில் குறிப்பிடும் படியான எந்த குறைகளும் இல்லை.

மொத்தத்தில்

வழக்கமான அடி-தடி சண்டை காட்சி படங்கள், காதல் படங்கள், பேய் படங்களுக்கு மத்தியில் சென்னையின் கடைக்கோடி மக்களின், அதாவது சேரிப் பகுதி மக்களின் வாழ்க்கையை படு யதார்த்தமாக சித்தரித்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தை அனைவரும் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். அப்போது தான் இதுபோன்ற தரமான படங்கள் நிறைய உருவாகும்.

ஒருவரி பஞ்ச் : குறிஞ்சிப் பூ!

(கமர்ஷியலாக இப்படத்தை ரேட்டிங் செய்ய விரும்பாததால், ‘காக்கா முட்டை’க்கு ரேட்டிங்கை தவிர்த்துள்ளோம்)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடி - டிரைலர்


;